வன்னியில் பாதுகாப்பு வலயத்திலிருந்து 10 ஆயிரம் பொதுமக்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பாதுகாப்பு வலயத்துக்குள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்திருப்பதாகவும், இதன் பயனாக இன்று திங்கட்கிழமை பாதுகாப்பு வலயத்தை உடைத்துச் சென்ற இராணுவத்தினர் அங்கிருந்து 10 ஆயிரம் பொதுமக்களை விடுவித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை 10ஆயிரம் பேர் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறியிருப்பதை பிரதேச தவல்களும் எமக்கு உறுதிப்படுத்தியிருந்தன.
பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்களை வெளியேறவிடாது விடுதலைப் புலிகள் தடுத்து வருவதாகவும், அவ்வாறு தப்பிக்க முயற்சிக்கும் பொதுமக்கள் மீது அவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் பொல்லுக்கள், தடிகளால் தாக்குதல்களை நடத்துவதாகவும் பாதுகாப்பு வலயத்திலிருந்து தொடர்புகொண்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
அதேநேரம், பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களுக்குப் போதியளவு உணவுப் பொருள்கள் இன்மையால் களஞ்சியசாலையொன்றை உடைத்து மக்கள் உணவுப் பொருள்களைப் பெற்றுக்கொண்டதாகவும் தெரியவருகிறது.
இவ்வாறான நிலையிலேயே பாதுகாப்பு வலயத்திலிருந்து 10,000 பொதுமக்கள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு அழைத்துவரப்பட்டிருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது.
அதேநேரம் பாதுகாப்பு வலயத்திலிருந்து 35,000 பேர் மீட்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
களைத்துப்போன அரசாங்க வைத்தியர்கள்
இதேவேளை, பாதுகாப்பு வலயத்திலிருந்து இயங்கிவரும் அரசாங்க வைத்தியர்கள் பல மாதங்களாக இரவு, பகல் ஓய்வின்றி சேவையாற்றிவருவதால் மிகவும் களைப்படைந்திருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் நடத்தப்படும் தாக்குதல்களால் பெருமளவான பொதுமக்கள் காயமடையும் நிலையில், போதியளவு மருந்துப் பொருள்கள் இல்லாதபோதும் இருக்கும் மருந்தைக் கொண்டு அரசாங்க வைத்தியர்கள் தொடர்ந்தும் சிகிச்சை வழங்கி வருவதாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.
“நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. போதியளவு மருந்துப் பொருள்கள் இல்லையெனினும், கையிருப்பிலிருக்கும் மருந்துகளைக் கொண்டு காயமடைபவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது” என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக்கான தலைவர் பவுல் கஸ்டெலா தெரிவித்தார்.
அதேநேரம், பாதுகாப்பு வலயத்திலிருந்து தரைவழியாகத் தப்பிக்க முயலும் பொதுமக்களுக்கு உதவத் தாம் விரும்புவதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.