இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய வன்னியிலிருந்து வெளியேற முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்று அறிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களின் எதிர்ப்புகளை மீறி தமது பணியாளர்களை குறித்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற முடியாதென தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 160,000 சிவிலியன்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 70,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய கடந்த வியாழக்கிழமை முதல் ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது பணியாளர்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்தது.
எனினும், பணியாளர்களை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றும் பணிகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு தற்போது தற்காலிகமாக இடைநிறுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் வன்னி மக்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளியேறக் கூடாதென எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அதன் காரணமாக பணியாளர்கள் மற்றும் பொருட்களை அகற்றும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் கோர்டன் வைஸை மேற்கோள்காட்டி பிரபல இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆயிரக் கணக்கான மக்கள் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் வெறியேற்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த பிரதேசங்களிலிருந்து அரச சார்பற்ற நிறுவனங்கள் வெளியேறினால் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்படும் என தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.