இலங்கையின் வன்னி பகுதியில் ‘மக்கள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட இடங்கள் மீது இன்று அதிகாலை சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 49 சிறுவர்கள் உட்பட 108 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 223 பேர் காயமடைந்துள்ளனர்.
வன்னியின் ‘மக்கள் பாதுகாப்பு வலயப்’ பகுதிகளான புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக விடுதலைப்புலிகள் ஆதரவு இணையதளமான புதினம் தெரிவிக்கிறது.
இதில், தூக்கத்தில் இருந்த பெரும்பாலான மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 49 சிறுவர்களும், 21 பெண்களும் அடங்குவர்.
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் மக்களின் பெரும் ஓலங்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்ததாக ‘புதினம்’ செய்தியாளர் தெரிவித்துள்ளார்.