அதிமுக கூட்டணியில் தொடர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அப்படி போட்டியிடுவதற்கு முன்பு பாமக தலைவர் ராமதாஸ் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார். ஆளுமையற்ற தலைவர்கள் என இருவரையும் குறிப்பிட்ட ராமதாஸ் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார்.
ஆனால், பாமகவின் செல்வாக்கு மண்டலம் என்று சொல்லப்படும் 7 மாவட்டங்களிலும் திமுக கூட்டணியே வென்றுள்ளது. வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தலித் கட்சி என்று அடையாளப்படுத்தப்படும் விடுதலைச் சிறுத்தைகள் வென்றிருப்பது வன்னியர்கள் பாமக மீதான அபிப்பிராயத்தை கைவிட்டு வருகிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் வன்னியர் வாக்கு உள்ளதாக கூறப்படும் 1,100 கிராமங்களிலும் பாமக வெற்றி பெறவில்லை.மிகக்குறிப்பாக இந்த கிராமங்களை மனதில் வைத்துதான் பாமக தனித்துப் போட்டியிட்டது. இந்த பகுதிகளில் 300 இடங்களில் கூட பாமக வெல்லவில்லை. நூறு இடங்களுக்கும் குறைவாகவே வென்றுள்ளது. ஆனால், வானூர் போன்ற வன்னியர் செல்வாக்கு மிக்க பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் வென்றுள்ளார்கள்.
வன்னியர்களுக்கு 10 சதவிகித உள் இடஒதுக்கீட்டை உறுதி செய்து கொடுத்த ஸ்டாலினுக்கே வன்னியர்கள் வாக்களித்துள்ளார்கள். ஆனால், அந்த இட ஒதுக்கீட்டை நாங்கள்தான் பெற்றுக் கொடுத்தோம் என்று சொல்லி வரும் பாமக இந்த பகுதிகளில் பெரிதாக ஜொலிக்கவில்லை.