வட மாவட்டங்களில் அடர்த்தியாக வாழும் வன்னியர்களும் பட்டியலின சாதியான பறையர் சாதி மக்களும் மிக முக்கியமான தமிழ் குடிகள். இந்த இரு சாதியினருமே அண்ணன் தம்பிகளாக நீண்டகாலமாக பழகி வந்த வரலாறும் மரபும் தமிழ் சமூகத்திற்கு உண்டு.
மிகச் சர்வ சாதாரணமாக இங்கு கலப்புத் திருமணங்களும் நடந்ததுண்டு. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக வன்னியர்களும் பட்டியல் சாதி மக்களும் எதிர் எதிராக நிறுத்தபப்ட்டனர். விளைவு கலவரம், கொலைகள், என வட மாவட்டம் என்றால் எப்போதுமே சமூகப்பதட்டம் நிலவும் இடங்கள் ஆகின. ஆனால் ஆச்சரியப்படும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருக்கழுக்குன்றம் தண்டரை ஊராட்சியில் ஒரு மலையைக் காப்பதற்காக வன்னியர்கள் பாட்டாளி மக்கள் கட்சி. பட்டியல் சாதியினர் விடுதலைச் சிறுத்தைகள் இரு சாதியினரும் ஒற்றுமையாக இரு கட்சிகளின் கொடிகளையும் ஏந்தி போராடியிருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருக்கழுகுன்றத்தில் தண்டரை ஊராட்சி அமைந்துள்ளது. இயற்கை எழில்சூழ்ந்த இந்தப் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிட்கோ நிறுவனம் சார்பில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 44 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
இதற்காக வருவாய்த் துறையிடமிருந்து சிட்கோ நிறுவனத்துக்கு நிலங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. ஆனாலும், தொழிற்பேட்டைக்கான பணிகள் மந்த நிலையிலேயே நடந்து வந்தன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சிட்கோவுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் உள்ள பள்ளமான பகுதிகளை சமன்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் இருந்து மண்ணை எடுத்துள்ளனர்.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மண் எடுக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 3ம் தேதி மீண்டும் பொக்லைன் இயந்திரத்துடன் மண் அள்ளும் பணிகள் நடந்துள்ளன. இதனையறிந்து தண்டரை ஊராட்சி மன்றத் தலைவியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெயலட்சுமி அறிவழகன் தலைமையில் 250க்கும் மேற்பட்டோர் குவிந்துவிட்டனர்.
அவர்கள் போராடுவதைப் பார்த்த பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்களும் அந்த போராட்டத்தில் இணைந்து கொண்டனர். அரசியல் சுயநலத்திற்காக சாதி உணர்வை தூண்டி மக்களை பிளவு படுத்துகிறவர்களுக்கு மத்தியில் ஒடுக்கப்படும் மக்களின் போராட்ட உணர்வு சாதி என்ற எல்லைகளையும் கடந்து ஒன்றுபடும் என்பதை இந்த போராட்டம் நினைவூட்டுகிறது.