வடக்கு, கிழக்கில் இருந்து சிறிலங்காப் படையினரை விலக்கி, அங்கு மீளவும் குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கோரும் மனு ஒன்றை மலேசியாவின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், உதவி நிறுவனப் பிரதிநிதிகள், மேலவை உறுப்பினர் போன்றோரைக் கொணட குழுவொன்று சிறிலங்கா தூதுவரிடம் கையளித்துள்ளது.
இன்று கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்குச் சென்ற சுமார் 40 பேரடங்கிய குழுவே சிறிலங்கா தூதுவர் டி.டி.ரணசிங்கவிடம் இந்த மனுவைக் கையளித்துள்ளனர்.
இலங்கையில் தமிழர்களும் முஸ்லிம்களும் தவறாக நடத்தப்படுவதாகவும் இவர்கள் கூறியுள்ளனர்.
இவர்கள் கையளித்த மனுவில் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும், வடக்கு, கிழக்கில் இருந்து இலங்கைப் படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டு குடியியல் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசின் மனிதஉரிமை மீறல்கள் குறித்து விவாதம் நடத்தக் கோரும் பிரேரணை ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சமர்ப்பித்திருந்தார்.
இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று கூறி மலேசிய நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் அந்தப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார்.
இந்தநிலையிலேயே மலேசியாவின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு இன்று இந்த மனுவை இலங்கை தூதரகத்தில் சமர்ப்பித்துள்ளது.