விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உலக அளவில் குவியும் ஆதரவும் அது தொடர்பாக இந்திய பிரபலங்கள் வெளிப்படுத்தும் ட்விட்டர் பதிவுகளும் இந்தியாவில் அந்த பிரபலங்களுக்கு எதிரான எண்ணங்களை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பாப் பாடகி ரிஹானா உட்பட சர்வதேச பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர். இவரை உலகம் முழுக்க பத்து கோடி பேர் பின் தொடர்வதால் இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிச்சம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் பிரபலம் சச்சின் டெண்டுலுக்கர் “இந்தியாவின் உள் விவகாரத்தில் வெளியாட்கள் தலையிடக்கூடாது” என்று ட்விட் செய்திருந்தார். அது போல கங்கனா ரனாவத் ரிஹானாவை மோசமாக விமர்சித்திருந்தார். இந்த விமர்சனங்கள் தொடர்பாக நடிகை டாப்ஸியின் ட்விட் ஒன்றும் வைரல் ஆனது. அதில் , “ ஒரே ஒரு ட்விட்டர் பதிவு உங்கள் ஒற்றுமையை குலைக்கும் என்றால், ஒரே ஒரு நகைச்சுவை உங்களின் நம்பிக்கையை குலைக்கும் என்றால், ஒரே ஒரு நிகழ்ச்சி உங்களின் மத நம்பிக்கையை குலைக்கும் என்றால், உங்கள் மதிப்புகளை வலுப்படுத்த நீங்கள்தான் பணியாற்ற வேண்டுமே தவிர பிறருக்கு பிரசாரம் செய்ய கூடாது,” என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
இந்திய பிரபலங்கள் பலரும் பகிர்ந்துள்ள ட்விட்டுகள் ஒரே மாதிரியானதாக உள்ளது. இவைகள் பாஜகவின் ஐடி விங்க் மூலம் கொடுக்கப்பட்டு பகிரப்பட்டிருக்கலாம் என்று பொதுவெளியில் விமர்சனங்கள் உருவாகியுள்ளதோடு. விவசாயிகளுக்கு துரோகம் செய்து போலியான தேச பக்தியை கட்டமைக்க வேண்டாம் என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.