போரினால் பாதிகப்பட்ட வடக்கு பகுதி மக்களுக்கு உடனடியாக தேவை வீடு உள்ளிட்ட வாழ்வாதாரமே தவிர விளையாட்டரங்கு அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்த வடக்கு மக்களுக்கு இன்று தேவைப்படுவது 325 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படும் நவீன விளையாட்டரங்கு அல்ல.
அடிப்படைத் தேவைகளான வீடு மற்றும் வாழ்வாதாரமே அவர்களுக்கு தேவையாக உள்ளது. வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடித்தேவை என்னவென்பதை அரசு உணரவில்லை.
மக்கள் சுகபோகம் அனுபவிக்கின்றனர் என எண்ணிக் கொண்டு, அரசு கிளிநொச்சியில் 325 மில்லியன் ரூபா செலவில் நவீன விளையாட்டரங்கை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. அங்கு வாழ்ந்த மக்கள் இன்றுவரை மீள்குடியமர்த்தப்படவில்லை.அதிபர் தேர்தலின்போது பிரசாரத்துக்கென யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ராஜபக்ச உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால், பதவிக்கு மீண்டும் வந்த ராஜபக்ச தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வெறுமனே யாழ்ப்பாணத்தில் மூடப்பட்ட வீதிகளைத் திறப்பதால் எதுவித பயனும் இல்லை.உயர் பாதுகாப்பு வலயத்தைக் குறைத்து அங்கு வாழ்ந்த மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.