தொடர்ந்து இரண்டு வாரகாலமாக பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டிருப்பதுடன், வடக்கில் மீள்குடியேறிய மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியும் இருக்கிறார்கள். இந்த நிலையில் மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் மழை, வெள்ளம், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு என்பவற்றினால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர்களுக்கான நிவாரணங்களை உடனடியாக வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் யுத்தத்தில் சேதமடைந்து அரைகுறையான, கூரைகளற்ற வீடுகளிலும் மற்றும் தறப்பாள் கொட்டில்களிலும் பெருமளவு மக்கள் வாழந்து வரும் நிலையில் பெய்த கன மழையால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கிறது. அரைகுறையான – தற்பாள் கொட்டில்களிலான வதிவிடங்களில் நீர்புகுந்துள்ளதுடன், சேகரிக்கப்பட்ட பொருட்களும் மழையால் சேதமடைந்திருக்கிறது. பொருட்களைப் பாதுகாத்து வைக்கக்கூடிய வசதிகளும் தற்போதில்லை. வீதிகள் – வடிகான்கள் சிரமைக்கப்படாமையினால் வீதிகளும் வெள்ளத்தினுள் அமிழ்ந்துள்ளதனால் போக்கு வரத்தும் நிவாரணப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே வேளை மூன்றாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் கூரைகளற்ற பாடசாலைகளினதும் மர நிழல்களில் இயங்கிய வகுப்பறைகளினதும் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் கணேசபுரம் கிராமம் மக்கள் மீள்குடியேறி ஒரு வருடங்களாகிற போதும் புனரமைக்கப்படாத சேதமடைந்த வீடுகளிலும் தறப்பாள் கொட்டில்களிலுமே மக்கள் வாழ்ந்து வந்த நிலையில் வெள்ள்த்தினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கமும் அரசாங்க ஆதரவு தமிழ்த் தலைமைகளும் இந்திய உயரதிகாரிகளும் வன்னியில் மீள்குடியேற்றம் பெருமளவு முடிவுற்றிருக்கிறது: மக்கள் எந்தப் பிரச்சனைகளுமின்றி வாழ்ந்து வருகிறார்கள் எனப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தற்போதைய கன மழையும் வெள்ளமும் வன்னி மக்களின் அவல நிலையை உலகறிச் செய்திருக்கிறது.
கடந்த வருடம் பெரு மழையினால் மீழுள்குடியேறிய மக்கள் பாதிக்கப்பட்ட போது அரசாங்கம் பெய்யும் மழையை எம்மால் தடுக்க முடியாது என விதண்டாவாதம் பேசியதும் தொடர்ந்தும் அரசாங்கத் தமிழ்த் தரப்பு தமிழ்த் தலைவர்கள் மகிந்த ராஜபக்ஷவே தமிழர்களின் பிரச்சிகைளைத் தீர்க்கக் கூடியவர் எனக்கூறிவருகின்றமையும் தாம் அரசாய்கத்துடன் இணைந்து மீள்குடியேறிய மக்களுக்கு பெரும் சேவையாற்றி வருவதாகவும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் தற்போதைய கன மழையும் வெள்ளமும் அவர்களின் ‘மக்கள் சேவையினை” உலகறிச் செய்திருக்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று செயலகப் பிரிவுகளிலும் சுமார் 20 கிராமங்களைச் சேர்ந்த 3,638 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. இந்த வகையில் பாதிக்கப்பட்ட 14 ஆயிரம் பேர் வரை இருப்பதாகவும் 16 நலன்புரி நிலையங்களில் 764 குடும்பங்களைச் சேர்ந்த 2400 பேர் வரை தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் 42 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும் 1600 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை கிளிநொச்சியில் முக்கிய 7 குழங்களின் நீர் மட்டம் அதிகிரத்துள்ளதாகவும் இதனால் குளங்களின் வான் கதவுகளை திறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மன்னாரில் மீள்குடியேறிய மக்களின் வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் சுமார் 2500 குடும்பங்கசை; சேர்ந்த 12000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதகவும் முறிப்புக்குளம், தேத்தாவாடி குளம் என்பன உடைப்பெடுத்து வெள்ளம் பாய்ந்து வருவதாகவும் பாலாவியாறும் கொடிகட்டியாறும் பெருக்கொடுத்து ஓடுவதாகவும் வீதிகளும் விதைக்கப்பட்ட நெற்காணிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை மற்றும் வெள்ளத்தினால் குடாநாட்டில் 4500 குடும்பங்களைச் சேர்ந்த 16000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 158 வீடுகள் முழுமையாக சேதமடைந்தும் 350 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தும் உள்ளதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். அத்துடன் 683 குடும்பங்களைச் சேர்ந்த 2500 பேர் வரை பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர்களுக்கு சமைத்த உணவு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் பொருட்கள் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்திலும் பல பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீள் குடியேற்றப் பகுதிகளும் அகதிகள் முகாம்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே வேளை விதைக்கப்பட்ட நெல் வயல்கள் வெள்ளத்தினுள் அமிழ்ந்துள்ளதனால் பெரும் பாதப்புகள் ஏற்படுமென அஞ்சப்படுகிறது.
அபிவிருத்தியில் பின்னடைந்திருக்கிற வட,கிழக்குப் பகுதிகள் மற்றும் மீள்குடியேற்றப் பகுதிகளில் மட்டுமன்றி இலங்கையின் பல பகுதிகளும் கன அழையினாலும் வெள்ளத்தினாலும் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டிரக்கிறது.
இதே வேளை கன மழை மற்றும் வெள்ளத்தினால் நாடு முழுவதிலும் 70 ஆயிரம் மக்கள் அகதிகளாகியுள்ளார்கள். 30 ஆயிரம் குடும்பங்கள் வரை தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளார்கள். தற்போது பெய்து வரும் கடும் மழை தொடர்ந்து 2011 ஜனவரி மாத நடுப்பகுதிவரை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்திருக்கிறது.
இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளளாகி வரும் நிலை அதிகரித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக வெள்ளத்தினால் பாதிக்கப்படும் நிலை தொடர்ச்சியாக காணப்பட்டு வந்துள்ளது. ஆயினும் இதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பொறிமுறைகள் திட்டமிட்ட வகையில் இன்னமும் உருவாக்கப்படாமலிருக்கிறது என்ற விசனம் வலுவடைந்து வருகிறது.
அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆசியாவில் ஆச்சரியமான நாடாக இலங்கையை மாற்றப் போவதாக தெரிவக்கப்பட்டு வரும் நிலையில் இது வரைக்கும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மக்கள் முன்னேற்றத்திற்கும் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலும் இருக்கவில்லை என்பது வெளிப்படை. வீதிகள், பாலங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என உள்கட்டமைப்பு பணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தியால் மக்கள் வாழ்வு வழம்பெறவில்லை: மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை தற்போதைய வெள்ளப் பாதிப்புக்கள் எடுத்துக் காட்டியிருக்கிறது.
இதே வேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாள் உணவை வழங்குவதற்கான உதவிகளை வழங்குமாறு நம்பிக்கை ஒளி என்ற நிறுவனம் அழைப்புவிடுத்துள்ளது.
தெரிந்தவர்களூடான உதவிகளை ஊக்கப்படுத்தல் என்பது இன்றைய புலம் பெயர் மக்களது கடமை என்பது பரவலான அனுபவ வாயிலான கருத்தாக அமைகிறது. தவிர, உதவிகளை வழங்கக் கோரி அரசிற்கு அழுத்தம் வழங்குதல் என்பதும் அதற்கான பிரச்சாரங்களை மேற்கொள்வதும் தேவை என்பதை பலரும் உணர்கின்றனர்.
எங்கள் ஊரிலும் வெள்ளம் வருவதை அவதானித்திருக்கிறேன் அப்போதெல்லாம் பிந்தங்கிய மக்கள் பாதிக்கப்படுவதை நான் பார்த்திருக்கிறேன்.வீடுகள அவர்கள் பள்ளத்தில் கட்டி இருப்பதே காரணம்.இப்போதும் இதுதான் காரணம்.