அரபு லீக்கில் இருந்து சிரியாவை நீக்குவது என்ற அந்த அமைப்பின் முடிவானது, சிரியாவின் மீதான பொருளாதாரத் தடையை மேலும் கடுமையாக்குவது குறித்த விவாதங்களை ஐரோப்பிய ஒன்றியத்திலும், அதற்கு வெளியேயும் மீண்டும் தோற்றுவித்திருக்கிறது.
டமாஸ்கஸில் அதிபர் பசீர் அல் அசாத்தை தனிமைப்படுத்துவதற்கு அரபுலகின் ஆதரவு மிகவும் முக்கியமானதாகும்.
லிபிய தலைவர் கேணல் கடாபியை தூக்கி வீசியது போன்ற எந்தவிதமான இராணுவ நடவடிக்கையும், சிரியாவின் விடயத்தில் சாத்தியமில்லை என்று நேட்டோ நாடுகள் ஏற்கனவே மறுத்துவிட்டன.
அரபு லீகில் இருந்து வெளியேற்றப்பட்ட விவகாரம் குறித்து, சிரியா தனது கடும் கண்டனத்தையும் கோபத்தையும் தெரிவித்துள்ளது.
அமரிக்க சார்ப்பு வியாபார ஊடகமாக மாற்றமடைந்துள்ள அல்-ஜசீராவின் செய்திச் சேவையின் பெய்ரூட் செயலகப் பொறுப்பதிகாரியும் நேர்மையான ஊடகவியலாளனுமான பென் ஜூடோ செய்திச் அந்த நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்துள்ளார். சிரியா தொடர்பான ஒரு பக்கச் சார்பான கருத்துக்களை அல்-ஜசீரா திட்டமிட்டு வெளியிடுவதன் காரணமாகவே தாம் விலகியுள்ளதாக ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
சிரியா மட்டுமல்ல உலகம் முழுவது உள்ள அரசுகளில் காணப்படும் குறைபாடுகளைக் காரணம்காட்டி ஏகாதிபத்தியங்கள் தமது பொருளாதாரப் பசியைத் தீர்த்துக்கொள்ள முனைகின்றன.
தாம் இழந்துவரும் அதிகாரத்தை மீளக் கைப்பற்ற ஏனைய நாடுகளை ஆக்கிரமிக்கின்றன. உலகின் ஒரு பகுதி இரத்தம் தோய்ந்ததாகக் காட்சி தருகிறது.
2009 இல் ஏகாதிபத்தியங்களின் ஆதரவோடு வன்னியில் ஆரம்பித்த இனப்படுகொலை இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இவற்றிற்கு எதிராகப் போராடும் பலம் வாய்ந்த பெரும்பான்மையைத் தோற்கடிக்க போர் ஒன்றே இவர்களின் இறுதித் தீர்வு.
இவை குறித்த விழிப்புணர்வு இன்று எம்மத்தியில் அவசியமானது.