லண்டனில் நடைபெற்ற திரை மறைவுக் கூட்டம் : உள் நோக்கம் என்ன?

தென்னாபிரிக்காவை மையமாகக் கொண்ட ITI என்ற அமைப்பினதும், சுவிட்சிலாந்து அரசினதும் அனுசரணையுடன் லண்டனில் இலங்கை அரசாங்கமும் புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்றும் சந்திப்பில் ஈடுபட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமுகர்கள்: உள்நோக்கம் என்ன?
கூட்டத்தில் கலந்துகொண்ட பிரமுகர்கள்: உள்நோக்கம் என்ன?

இன்று லண்டனில் மர்மமான இடம் ஒன்றில் நடத்தப்பட்ட இச் சந்திப்பில் புலம் பெயர் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் சார்பில் சுரேன் சுரேந்தர் கலந்துகொண்டார். இலங்கை அரசின் வெளி நாட்டமைச்சர் மங்கள சமரவீர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னை நாள் நோர்வே அரசின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கையிம், சுவிஸ் வெளிநாட்டமைச்சின் சார்பில் மார்டின் ஸுருசிங்கர், சந்திரிக்கா குமாரணதுங்கவின் பிரதிநிதி ஒருவர், நோர்வேயைச் சேர்ந்த கலாநிதி ரமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னர் சிங்கப்பூரில் இந்த இரு தரப்புகளும் நடத்திய சந்திப்பின் தொடர்ச்சியாகவே லண்டன் ஒன்றுகூடல் இடம்பெற்றதாக ஊடகங்களுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று கூடலுக்குப் புறப்படுவதற்கு முன்னர் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான சந்திப்பாகவே இது நடைபெறுகிறது என மங்கள சமரவீர தெரிவித்தார்.

அதே வேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் தமிழர்களின் பிரச்சனைகளை உடனடியாக அணுகுவது தொடர்பாகவே பேச்சுக்கள் நடைபெறும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இரண்டு முரண்பட்ட கருத்துக்களை கூட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு முக்கிய பிரமுகர்கள் தெரிவித்த அதே வேளை கூட்டம் நடைபெற்ற இடம் இரகசியமானதாகவே வைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் முன்னை நாள் சமாதானத் தூதுவரும் அமெரிக்க அரசின் நிதியில் இயங்கும் தன்னார்வ நிறுவனத்தைச் சார்ந்தவருமான எரிக் சுல்கையிமும் ஒருவர். கடந்த மாதம் இலங்கை ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அவர்கள் செயற்படவேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

அதே நேர்காணலில் மேலும் கருத்துத் தெரிவித்த சுல்கையிம் போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கை செப்டெம்பரில் வெளியாகும் என்றும், இரண்டு தரப்புக்களதும் போர்க்குற்றங்களும் தண்டிக்கபட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எரிக் சுல்கையிமின் இரண்டு கருத்துக்களில் முதலாவது நிறைவிற்கு வந்துள்ளது. புலம்பெயர் அமைப்பு ஒன்றுடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அதுவும் திரை மறைவில்!

இரண்டாவது கருத்தின் அடிப்படையில் போர்க்குற்றம் என்ற பெயரில் இலங்கை அரசுடன் உடன்படாதவர்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என திரை மறைவில் நடத்தப்பட்ட கூட்டம் சந்தேங்களை ஏற்படுத்தியுள்ளது.

சந்திப்பின் உள் நோக்கங்கள் இன்னும் வெளிப்படையாகத் தெரியாவிடினும், போராட்டம் அழிக்கப்பட்ட பின்னரான சுத்திகரிப்பிற்காக இவர்கள் திட்டமிடுகிறார்களா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. மே மாதம் 17 ம் திகதி எரிக் சுல்கையிம் தெரிவித்ததன் அடிப்படையில் எஞ்சியுள்ள போராட்ட சக்திகளைப் போர்க்குற்றம் என்ற தலையங்கத்தில் அழிப்பதற்கான முன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்ற சந்தேகங்கள் பரவலாக எழுந்துள்ளன.

இச் சந்திபுத் தொடர்பான எதிர்ப்பு அறிக்கைள் ஏனைய புலம்பெயர் அமைப்புக்களால் வெளியிடப்படவில்லை. ஆங்காங்கு கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தாலும், உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இலங்கைப் பேரினவாத அரசின் செயற்பாடுகள் புலம்பெயர் நாடுகளில் நேரடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக பிழைப்புவாதப் புலம்பெயர் அமைப்புக்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலிருப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

எரிக் சுல்கையிமின் நேர்காணல்:

https://www.ceylontoday.lk/31-93039-news-detail-controversial-white-flag-and-war-crimes-issues-solheim-testifies-before-un.html

One thought on “லண்டனில் நடைபெற்ற திரை மறைவுக் கூட்டம் : உள் நோக்கம் என்ன?”

 1. இலங்கை அரசுடன் தொடர்பு வைத்தால் மரண தண்டனை விதித்தபுலிகளை ஆதரித்த அமைப்புகள். புலிகள் அழிக்கப்பட்டதை பற்றி கவலைப்படாமல் அவர்களின் கொள்கைகளை புலிகள் இல்லாத போது
  கடைப்பிடிக்காதவர்கள் இவர்கள்.
  இந்தஅமைப்புகளை சேர்ந்தவர்கள்
  தமிழரின் வாழ்வில் அக்கறை கொண்டவர்களா? அல்லது தமிழரின் மானங்காக்க கூடியவர்களா?.

  இரகசியமாக சந்திப்புகள் நடத்துவதன் மூலம் இலங்கை வாழ் தமிழரினதோ அல்லது புலம்பெயர் தமிழரினதோ உத்தியோக பூர்வமான பிரதிநிதிகழுமல்ல.

  இத்தகைய செயல்கள் வல்லரசுகளின் கைக் கூலிகளின் செயல்கழுடன் ஒப்பிடக் கூடியவையேயாகும். ஆசியப் பிராந்தியத்தில் வல்லரசுகளின் ஆதிக்கத்தை நிலைநாட்ட உளவுப்படைகளிற்கு தமிழரின் பிரச்சினை அவசியம்.

  புலிகளிற்கு ஆதரவானவர்கள் என்று தெரிந்தும் இவர்களை
  பேச்சிற்கு அழைப்பது இலங்கைத் தமிழரின் நன்மைக்காக ஒருபோதும் அமையாது.

Comments are closed.