இலங்கையை சேர்ந்த ரிசானா நபீக்கை ஷாரியா சட்டமென்ற ரீதியில் அல் குறானுக்கும் அரேபிய நாகரீகத்திற்கும் அவதூறு செய்யும் வகையில் பகிரங்கமாக கழுத்து துண்டாடி கொலை செய்யப்பட்டதை மிருகங்கள் கூட ஏற்க முடியாத நிலையில் மனிதர்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்?
அதனால் தொட்டாட்டு வேலை செய்வதற்கும் ஊத்தை கழுவுவதற்கும், காமுகர்களின் இச்சை தீர்ப்பதற்கும் இலங்கை மாதாவின் எந்த ஒரு பெண்ணும் சவுதி அரேபியா உட்பட எந்த ஒரு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் மட்டுமல்ல சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கூட அனுப்பப்பட கூடாது என்று வலியுறுத்துவதுடன் என்ன தான் பசி பட்டினி என்றாலும் எந்த ஒரு காட்டு மிராண்டிகளுக்கும் கடமை புரிய செல்ல வேண்டாமென்று இலங்கை வாழ் அனைத்து சமூகங்களையும் இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றது.
இது தொடர்பாக இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரிசானாவின் பகிரங்க சிரைச்சேதத்திற்கு பின்னும் மெளனம் காத்து அடக்குமுறையாளரிடம் மண்டியிட்டு நீதி கேட்க எவருக்கும் முடியாது. சர்வதேசம் என்பதோ இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசோ பாதிக்கப்பட்டவருக்கு அனுதாபம் தெரிவிப்பதையன்றி எதையும் செய்யப்போவதில்லை. வீட்டு வேலை சிறுவர் வேலை என்றெல்லாம் பேய்க்காட்டி உழைப்பை உறிஞ்சுவதையும் சுரண்டுவதையும் நாம் கண்டிக்கிறோம்.
வீடுகளில் தொட்டாட்டு வேலை செய்வதை உழைப்பாக ஏற்க மறுக்கிறோம். எஜமானர்களின், எஜமானிகளின் முற்றம், பட்டி தொட்டி, படுக்கையறை, குழியலறை எல்லாம் கவனிப்பதற்கு வேலைக்கமர்த்தும் அவலத்தை நாம் எதிர்க்கிறோம். அவ்விடயங்கள் அவரவர்களின் தனிப்பட்ட விடயமாகும். இதனை புரிந்து கொண்டு இலங்கை மக்களாகிய நாம் செயற்படுவோமாக!
இலங்கை அரசுக்கு வருமானம் தேடிக்கொடுப்பதாக கூறிக்கொண்டு வீட்டுப்பணிப்பெண்கள் என்ற நாமத்தை சுமந்து கொண்டு இலங்கைப் பெண்கள் சவுதிக்கு மட்டுமல்ல சுவர்க்கத்திற்கு சென்றால் கூட நாம் எதிர்ப்போம், கண்டிப்போம், நிராகரிப்போம் ஏனெனில் வீட்டுப்பணிப்பெண்கள் என்பது தொழில் உழைப்பு என்ற வரைவிலக்கணங்களுக்குள் அடங்காது, கொத்தடிமை என்ற கொடும் சொல்லுக்கும் செயலுக்கும் உட்பட்டதாலாகும்.
எனவே இலங்கை பெண்கள் மட்டுமன்றி உலகத்தில் உள்ள எந்தவொரு பெண்ணும் பணிப்பெண் என்ற நாமகரத்துடன் நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், ஆணாதிக்கம் என்பவற்றுக்கு உட்படக்கூடாது என்று நாம் வலியுறுத்தி கூறுகிறோம்.
இணை அழைப்பாளர்,
இ,தம்பையா
இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்
இந்த அறிக்கை காத்திரமானது. கம்யூனிஸ்ட் அறிக்கை என்பதால் எல்லோருக்கும் தீட்டு. இந்த கொலை பற்றி நான் எங்கள் பக்கத்து வீட்டு என்னை போன்ற முஸ்லீம் குடும்பத்துடன் பேசினேன். இஸ்லாம் சட்டத்தின் படி கொலை செய்வோருக்கு இது தான் தண்டனை என்று என்னுடைய வாயை பொத்தி விட்டார்கள்.
இது பற்றி எனது தமிழ் நண்பியிடம் பேசினேன். அவள் பாவம் அனுதாபம் சொன்னாள். சோனகர்களான உங்களது சட்டம் இப்படி தானே பிறகு ஏன்.
என்னுடைய இஸ்லாமிய நாகரீக ஆசிரியரிடமும் சொன்னேன். ”பிழைக்க போனால் மவள் பிழைக்க வேண்டியதுதானே, பிறகு ஏன் இஸ்லாத்து பெண்களுக்கில்லாத ஓர்மம் உங்களுக்கு. என்ன பாவம் செஞ்சாலோ மூதுருல பிறந்து இஸ்லாத்து புனித பூமியில் தண்டிக்கப்பட்டுவிட்டாள்”, என்று கூறினார்.
எனது நண்பி பபோதாவிடம் கேட்டேன், ”நீங்களெல்லாம் ஒரு சமூகம்! ஓய்.! உங்கள் சமூகத்தின் பெயரால் எதை செய்தாலும் நியாயப்படுத்துகிறீர்களே! இலங்கையில் ரிசானாவின் கொலைக்கு எதிராக குரல் கொடுத்து கொண்டிருப்பது என்னை போன்ற சிங்களப் பெண்களே. உங்களது பண்பாட்டுக்கு முக்காடு மூடாக்கு தேவை என்றால் உங்களுடன் வைத்திருங்கள் நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அந்த மறைவிற்குள் பெண்களுக்கு எதிரான எல்லா அடக்கு முறைகளையும் மறைக்காதீர்கள்”