ராடர் இந்தியாவிடம் : தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!

ராடர் கட்டமைப்பை இயக்குவதற்கு இந்திய அதிகாரிகளை பயன்படுத்துவது தேசிய பாதுகாப்பை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கை என ஜே.வீ.பீ தெரிவித்துள்ளது. இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ராடர் கட்டமைப்பை இயக்க இந்திய அதிகாரிகளின் உதவியைப் பெற்று கொண்டதன் மூலம் அரசாங்கம் தேசிய பாதுகாப்பைக் காட்டிக் கொடுத்துள்ளதாக ஜே.வீ.பீயின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் குற்றம்சுமத்தியுள்ளார். இந்தியாவிடம் இருந்து ராடர் கட்டமைப்பைப் பெற்றுகொண்ட பின்னர் அது தொடர்பான பயிற்சிகளைப் பெற இலங்கை அதிகாரிகளை இந்தியாவுக்கு அனுப்பியிருக்கலாம். அரசாங்கம் இந்த விடயத்தில் உரிய முறையில் செயற்படாது, தொடர்ந்தும் அதனை தவிர்த்து வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு தனது அதிகாரி மூலம் இலகுவாக இலங்கையின் பாதுகாப்பு ரகசியங்களை பெற்றுக்கொள்ள முடியும். இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல். இந்தப் பிரச்சினை இன்று நேற்றைய பிரச்சினையல்ல. கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வரும் பிரச்சினை எனவும் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளாhர்.