முன்னை நாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக மறுவிசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மனு மீது ஜூன் 5-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கின் விசாரணை பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தூக்குக் கொட்டடியில் இருக்கின்றனர். அவர்களது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மதுரை மேலூரைச் சேர்ந்த சாந்தகுமரேசன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று ஒரு பொதுநலன் வழக்கைத் தொடர்ந்தார். அதில், ராஜிவ் படுகொலை தொடர்பான சில வீடியோக்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்படவில்லை. இந்த வழக்கில் மறுவிசாரணைக்கு உத்தரவிடுவதன் மூலம் மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிப்படும். விசாரணை முழுவதும் நிறைவடையாமலேயே முருகன், பேரரிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இந்த மூவருக்கும் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக மறுவிசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இப்படி சில வீடியோ காட்சிகள் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படாத நிலையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தூக்குக் கொட்டடியில் இருக்கின்றனர். இதனால் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த் வழக்கில் மீண்டும் மறுவிசாரணை நடத்தி புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டுவர வேண்டும் என்று கோரியிருந்தார்.