ராஜீவை தாக்கிய வீரனே உண்மையான தேசப்பற்றாளன்- ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின்

(வீரகேசரி இணையம் 7/16/2008 8:39:44 AM )

தாய் நாட்டை காட்டிக்கொடுத்து அதனை அந்நியருக்கு விற்றுவிட துணிந்துவிட்ட எவரும் இந்நாட்டின் தலைவராகவோ அல்லது தம்மை தேசப்பற்றாளன் என சித்திரித்துக் கொள்ளவோ தகுதியற்றவர்கள். அவ்வாறானவர்களை மீண்டும் மீண்டும் தலைமைப் பதவியில் அமர்த்துவதனூடாக எமது நாட்டுக்கான தேசிய விடுதலையை பெற்று நாட்டைக் காப்பாற்ற முடியாது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். சூழ்ச்சியான ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அதிகாரத்தை இலங்கை மீது திணித்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை துப்பாக்கிக் கட்டையால் தாக்கி தனது எதிர்ப்பைத் தெரிவித்த இராணுவ வீரனே உண்மையான தேசப்பற்றாளன் என்றும் அவர் கூறினார்.இந்தியாவின் இளம் சுதந்திரப் போராளியும் தியாகியுமான பகவத்சிங் பெயரிலான சுதந்திர வரலாறு அடங்கிய நூலினை ஜே.வி.பி.யின் சோஷலிச இளைஞர் சங்கம் நேற்று வெளியிட்டு வைத்தது.

இந்நிகழ்வு சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஜே.வி.பி. எம்.பி.யுமான பிமல் ரட்ணாயக்க தலைமையில் கொழும்பு 7 இல் அமைந்துள்ள பொது நூலக கேட்டோர் கூடத்தில் இடம்பெற்றபோது அதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய பகவத்சிங்கின் போராட்டத்துக்கு மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிப் போராட்டம் பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது. அதேவேளை, இந்திய சுதந்திரத்துக்காக இரத்தம் சிந்தியவர்கள் புறந்தள்ளப்பட்டு வெறுமனே போராட்டங்களை நடத்தியவர்களிடம் இந்தியா ஒப்படைக்கப்பட்டது.

இந்தியரும் இலங்கையரும் மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என வர்ணிக்கப்படுவதில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. சுதந்திரம் எனும்போது பிரித்தானியாவின் ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலை பெற்றதை மட்டும் வரையறுத்துக் கொள்ளக்கூடாது. இலங்கை நாட்டுக்குள் சுதந்திரம் பறி போயிருக்கின்றது. உழைக்கும் வர்க்கத்தினரின் சுதந்திரம் பறி போயிருக்கின்றது. அரச சொத்துக்கள் விரயமாக்கப்படுகின்றன. இலங்கையின் நிலப் பரப்புக்கள் அந்நியருக்கு விற்கப்படுகின்றன. இலங்கையின் எண்ணெய் வளம் இந்தியாவுக்கு தாரைவõர்த்துக் கொடுக்கப்படுகின்றது. சம்பூர் அபிவிருத்தித் திட்டம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 1987 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட இந்திய அமைதிகாக்கும் படையினருக்காக பாராளுமன்ற கட்டிடத்துக்கு அருகாக நினைவுத் தூபி அமைக்கப்படுகின்றது.

இவைகளை வைத்துப் பார்க்கும் போது அரசியல் இலாபத்துக்காகவும் சுய இலாபத்துக்காகவும் அரச உடைமைகள் விற்கப்படுவதுடன் நாடும் காட்டிக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறான பயங்கரத்தில் இருந்து விடுவிக்கப்படும் போதே உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

உழைக்கும் வர்க்கத்தினரின் சம்பளக் கோரிக்கையை நிறைவேற்ற மறுக்கின்ற அரசாங்கம் கோடிக்கணக்கான பணத்தை செலவிட்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

1987 ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவை மிரட்டி பணிய வைத்து ஒப்பந்தம் மேற்கொண்டபோது தாய் நாடு இந்தியாவிடம் அடிமையாவதை விரும்பாத இராணுவ வீரர் துப்பாக்கி கட்டையால் அவரைத் தாக்கி தனது எதிர்ப்பைக் காட்டினார்.

அதுவே அவரது தேசப்பற்றின் அடையாளமாகும். ஆனால், இன்றைய தலைவர்கள் தேசப்பற்றாளன் என தம்மை சித்திரித்துக் கொண்டு ஒருவித மாயையை உருவாக்கி இருக்கின்றமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.வளங்களை விற்று தேசத்தைக் காட்டிக் கொடுப்பவர் எவராக இருந்தாலும் அவர் இந்த நாட்டுக்கு தலைவனாக இருக்கும் அருகதையற்றவராகிறார். ஊழலும் மோசடியும் நிறைந்த அரசாங்கத்தை தோற்கடித்து எதிர்கால வளமான இலங்கையை உருவாக்குவதில் பகவத்சிங் போன்ற இளைய தலைமுறையினர் முன்வரவேண்டும்.தலைவர்களை நியமிக்க முடியும். ஆனால். நாட்டுப்பற்றுள்ள தலைவராக அவர் இருக்க வேண்டும். நாட்டுப்பற்றுள்ள தலைவரை உருவாக்க வேண்டிய தேவை இப்போது எழுந்துள்ளது.

அவ்வாறான ஒரு தலைமையை உருவாக்குவதன் மூலம் வர்க்கபேதம், இனபேதம் அற்ற ஒரு சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்ப முடியும். இதனை நனவாக்க வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றார்