ராஜபக்ஷ குடும்ப அதிகாரம்.

கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் செய்து கொண்டு கூட்டு உடன்பாட்டின் கீழ்,தமது தேசியப்பட்டியலுக்கு ஊடாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை நாடாமன்றத்திற்குள் கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக வெளியான தகவலை ஜே வி பி மறுத்துள்ளது. வடமத்திய மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, தமது நிலையில் இருந்து விலகினார். இதனையடுத்து அந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிலைக்கே கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் இதனை மறுத்துள்ள ஜே வி பி அந்த இடத்திற்கு சுஜித் குருவிட்ட என்பவரை நியமிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த தகவலை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்சவும் மறுத்துள்ளார். இதற்கிடையில் கோட்டாபய ராஜபக்ச, இந்த முடிவை எடுப்பதற்கு தமது சகோதரரான பசில் ராஜபக்சவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்கவின் இடத்திற்கு கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டால், அது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தனது அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனக்கூறி பசில் ராஜபக்ச, முரண்பாடுகள் காரணமாக கடந்த ஒரு வாரக்காலமாக வெளிநாட்டுக்கு சென்றிருந்தார் எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உயர் மட்டத்தினர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை அடுத்தும் கோட்டாபய, நாடர்ளுமன்ற உறுப்பினர் நிலை தொடர்பாக அக்கறை காட்டாமையையும் அடுத்தே அவர் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில்,கோட்டாபய ராஜபக்ச நாடர்ளுமன்றத்திற்குள் வந்து பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை ஏற்றால் அது தனது செல்வாக்கிற்கு பாரிய பாதிப்பை கொண்டு வரும் என பசில் அச்சம் கொண்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுஇவ்வாறிருக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் எண்ணப்படி, கோட்டாபய ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் அதேநேரம், தமது ஜனாதிபதி பதவிகாலம் முடிவடைந்ததும் பசில் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதியாக்குவது என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.