ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்

சிங்கள மக்களுக்கு நாட்டின் பாதுகாலவனாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் பாசிட் ராஜபக்ச தமிழ் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மில்லியன்களைக் கொள்ளையடித்தார். இங்கே தான் சாதாரணமானவனின் கலர்க் கனவுகளில் வந்துபோகும் காட்சிகள் இடம்பெற்றன.

கங்லே, முரளிதரன், சுபாஸ், சிவசாமி
கங்லே, முரளிதரன், சுபாஸ், சிவசாமி

தன்னைத் தூக்கில் போடப்போகிறார்கள் என சோக கீதம் இசைக்கும் நமது இனக்கொலைக் கலாநிதி மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்தின் சகோதரர்களை மட்டும் அதிகாரத்தில் வைத்திருக்கவில்லை. ஒன்றுவிட்ட சகோதரர், இராண்டாம் மச்சான், மூன்றாம் மருமகன் என்று ஒரு பட்டாளமே இணைந்து இலங்கைத் தீவைக் கொள்ளையடிக்கிறது. அண்மையில் ஒரு நிகழ்வில் சமூகச் செயற்பாடாளர் சுகி என்ற தமிழ்ப் பெண் சிங்களப் பெண் ஒருவருடன் பேசும் காணொளியில் இலங்கை என்ற அழகான தீவில் ஏன் இவ்வளவு குத்துவெட்டுக்கள் என துயர்படிருந்தார்.

அந்தத் துயரத்தின் உச்சம் ராஜபக்ச என்றால், அதன் பங்குதாரர்கள் லைக்கா போன்ற பல தமிழ் நிறுவனங்களும் தேசியத் தமிழர்களும் கூடத்தான்.

லைக்கா திரைப்படத்திற்கு நமது இளைய தளபதி விஜய் கதாநாயகன் போல மகிந்த ராஜபக்சவின் மைத்துனர்களில் ஒருவரான லலிந்ரா ஹெட்டியாராய்ச்சி என்பவர் தான் லைக்கா ‘கதையாடல்களின்’ தளபதி.

WiMax (Worldwide Interoperability for Microwave Access) என்பது கைத் தொலைபேசியிலிருந்து இன்டர்னெட் சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான தொழில் நுட்பம்.

இத்தொழில் நுட்பம் வெளியான போது உலகின் பல நாடுகளின் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் மில்லியன்கள் செலவழித்து தொலைபேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைப் பெற்றுகொண்டன.

அவ்வாறு ஒப்பந்ததைப் பெற்றுக்கொள்வதற்கு நாடுகளின் தொலைபேசி ஒழுங்கமைப்பு நிறுவனம் (regulatory authority) அனுமதி வழங்க்க வேண்டும். இந்த அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவில் பில்லியன் பெறுமதியான ஊழல் நடைபெற்றது தெரிந்ததே.

இதே ஊழல் இலங்கையில் லைக்காவும் இலங்கை அரச பாசிஸ்டுக்களும் கூட்டிணைந்து காதும் காதும் வைத்தமாதிரி நடத்தப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் ஏகதிபத்திய சார்பு அரசாங்கம் 150 வருட வரலாறுகொண்ட அரச நிறுவனமான சிறீ லங்கா ரெலிகொம் இன் பங்குகளை வெளி நாட்டுப் பல்தேசிய நிறுவனத்திற்கு விற்றது. வாங்கியவரோ ராஜபக்சவின் பரம எதிரி  இனமான தமிழ் இனத்தைச் சேர்ந்த மலேசியர்.  அவரது நிறுவனம் 55 வீதமான பங்குகளை வாங்கிக்கொள்ள மிகுதி 45 வீதம் சிறீ லங்கா ரெலிகொம்மிடம் இருந்தது. அதில் 50 வீதம் அரசிற்குச் சொந்தமானது.

தமிழன் என்றால் தனியான ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் என்ற அடிப்படையில் அணுகும் தமிழ் உணர்வாளர்களும் இனவாதிகளும் இவர்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..

எது எவ்வாறாயினும் ராஜபக்ச குடும்பத்தின் பொன்முட்டை போடும் வாத்துக்களில் சிறீ லங்கா ரெலிக்கொம் உம் ஒன்று. இலங்கையில் ரெலிக்கொம் ஒழுங்குபடுத்தும் சேவை (Telecommunications Regulatory Commission (TRC))ராஜபக்சவின் கண்காணிப்பிலேயே இன்றும் உள்ளது. ஆக அனுமதிப் பத்திரங்களைப் வழங்குவதும் பறிப்பதும் ராஜபக்ச மட்டுமே.

இந்த வேளையில் வாய்மக்ஸ் சேவையை நடத்த சிறீ லங்கா செலிகொம் ரெலிகொம் ஒழுங்கமைப்புச் சேவையிடம் அனுமதி கோரியது. ஏனைய தொலைபேசிச் சேவைகளான சண்ரெல் மற்று,ம் டயலோக் ஆகியவற்றிற்கு வழங்கப்பட சிறீ லங்கா ரெலிகொம் இற்கு நிராகரிக்கபட்டது.

இலங்கை அரசு ஒரு பகுதியைச் சொந்தமாக வைத்திருக்கும் சிறீ லங்கா ரெலிகொமின் கோரிக்கை பல தடவைகள் நிராகரிக்கப்பட்டமை பலருக்குப் புரியாத புதிரானது. தனது சொந்த நிறுவனத்திற்கே அனுமதி வாங்க அரசு ஆழமாகப் பரிசீலிக்கிறது என்று மகிந்தவின் மைந்தர்கள் பலர் புழகாங்கிதமடைந்தனர்.

 இலங்கையின் ரியல் எஸ்டேட் முதலை கிருஷ்ணா செல்வநாதனுடன்(நடுவில்) ஹெட்டியாராய்ச்சி(வலது)
இலங்கையின் ரியல் எஸ்டேட் முதலை கிருஷ்ணா செல்வநாதனுடன்(நடுவில்) ஹெட்டியாராய்ச்சி(வலது)

இந்த நிலையில் ஸ்கை நெட்வேர்க் என்ற 20 ரூபாய் கொம்பனிக்கு நிறுவனத்திற்கு வாய்மாக்ஸ் சேவையை வழங்க அனுமதி வழங்க்கப்பட்டது.

இலங்கையில் தொலைபேசி சேவையை நடத்தாத இந்த நிறுவனம் உருவான கதையே தனியானது. இது ராஜபக்ச வடை சுட்டு விற்ற கதை.

20 இலங்கை ரூபாய்கள் பங்கு போட்டு ஸ்கை நெட்வேர்க் என்ற நிறுவனம் நுகேகொட என்ற இடத்தில் பதிவு செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தின் நடத்துனராக அஜந்தா குணதாச என்பவர் பதிவு செய்யப்பட்டார். பின்னர் சரியாக ஒரு வருடம் வரை ஸ்கை நெட்வேர்க் எந்த நெட்வேர்க்கும் செய்யாமல் உறங்கிக்கொண்டிருந்தது.

மார்ச் மாதம் 15 ஆம் திகதி 2007 இல் அதாவது வன்னிப் படுகொலைகள் நடைபெறுவதற்கு சரியாக இரண்டு வருடங்களின் முன்பதாக லைக்கா நிறுவனம் ஸ்கை இன் உறக்கத்தைக் கலைக்கிறது. போத்துக்கல்லில் லைக்கா நிறுவனத்தின் கிளை நிறுவனமான Hastings Trading E Services (Portugal subsidiary of Lyca Group) ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவழித்து ஸ்கை நெர்வேர்க்சின் 95 வீதமான பங்குகளை வாங்கிக்கொள்கிறது. இப்போது 20 ரூபா கம்பனி 950000 சக 20 ரூபா கம்பனியாகிவிட்டது.

(அட, போர் நடப்பதற்கு ஒரு வருடங்களின் முன்னரே லைக்கா இலங்கை அரசுடன் தொடர்பு வைத்திருந்தது என்றால், புலம்பெயர் நாடுகளிலிருந்து யார்யாரெல்லாம் என்ன தொடர்பு வைத்திருந்தார்கள் என்ற விபரங்கள் சுடச்சுட ராஜபக்ச அரசிற்குக் கிடைத்திருக்குமே! இதில் ஏன் சந்தேகம் கொள்ள வேண்டும்!!)

இது நடந்ததும்ஸ்கை நெட்வேர்க்கை ஆரம்பித்த  கருணதாச ஸ்கை இலிருந்து விலகிக் கொள்கிறார். அவர் விலகியதும் புதிய தலை ஒன்று ஸ்கை நெட்வேர்க்ஸின் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. ஹிமால் ஹெட்டியாராச்சி என்ற இலங்கையின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான அவர் நமது இனக்கொலை வைத்தியக் கலாநிதி மகிந்த ராஜபக்சவின் மைத்துனர்.

subas_kangle
லைக்கா தலைவர் சுபாஸ்கரனும் சிவசாமியும்

ஹெட்டியாராய்ச்சி ஸ்கையின் புதிய தலைவர் என்றாலும் அது ஆரம்பத்தில் பதிவுசெய்யப்பட்ட இடம் அவருக்கே சொந்தமானது. அதாவது 20 ரூபாய் கொம்பனியின் முகவரிக்கு உரியவர் ஹெட்டியாராச்சி!

ஹெட்டியாராச்சியுடன் இணைந்து லைக்காவின் சார்பாக அதன் பிரித்தானிய இயக்குனர்களில் ஒருவரான மிலின்ட் கங்லே ஸ்கையின் இயக்குனர்களில் ஒருவராக இணைந்துகொள்கிறார். ஜுன் மாதம் 1ம் திகதி 2007 ஆம் ஆண்டு இக் கைங்கரியங்கள் நடைபெறுகிறது. இதற்காக லைக்காவின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்குப் பயணம் செய்து சினமன் ஹொட்டேலில் களியாட்ட விருந்து ஒன்றை நடத்திற்று.

இலங்கையின்தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இதுவரை சிறீ லங்கா ரெலிகொம்மிற்குத் வழங்காது தடுத்துவந்த வாய்மக்ஸ் சேவைக்கான அனுமதிப் பத்திரத்தை இப்போது ஸ்கைனெட்வேர்க்கிற்கு வழங்குகிறது.

அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்கைனெட்வேர்க் என்ற 20 ரூபா கொம்பனி இப்போது சிறீலங்கா ரெலிகொம்மை அணுகி தம்மிடம் வாய் மக்ஸ் லைசன்ஸ் இருப்பதாகத் தெரிவிக்கிறது. தமது தொலைபேசி இன்டர்னெட் வியாபாரத்தை ஆரம்பிக்க வேண்ண்டிய நிலையிலிருந்த சிறீ லங்கா ரெலிகொம் என்ற அரை அரச நிறுவனம் வேறு வழியின்றி ஸ்கைனெட்வேர்க்கிடம் உள்ளை அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்த முடிவு செய்கிறது.

2007 ஜூன் மாதம் 29ம் திகதி யிடப்பட்ட குறிப்பேடு இலக்கம் Pள்C /T /65/2007 இன் அடிப்படையில் ஸ்கைனெட்வேர்க்கிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள முடிவுக்கு வருகிறது. 100 மில்லியன் அமெரிக்க டோலர்களை கொடுத்து லைக்காவின் 40 வீதப் பங்குகளை வாங்க்கிகொள்கிறது 20 ரூபாய் நிறுவனம் இப்போது மில்லியன்கள் புரளும் பல்தேசிய நிறுவனமாய் மிளிர்கிறது.

இதன் பின்னர் ஸ்கைனெற்வேர்கின் இயக்குனர் சபையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அந்த நிறுவனத்தின் 70 வீதப் முதலீட்டை சிறீலங்கா ரெலிகொம் மேற்கொள்ள அதன் வருமானத்தில் 60 வீதம் ஸ்கைனெட்வேர்க் இற்கே வழங்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்படுகிறது.

இது தான் 20 ரூபாய் நிறுவனம் இன்று மல்ரி மில்லியன் வருமானம் தரும் பல்தேசிய நிறுவனமாக மாறிய கதை. ராஜபக்ச மக்களின் தலையில் உளுந்தரைத்து லைக்காவுடன் சேர்ந்து வடைசுட்டு விற்ற கதை.

ஐயாத்துரை சிவசாமி
ஐயாத்துரை சிவசாமி

இதே காலப்பகுதியில், 16.03.2007 அன்று மிலின்ட் கங்லே ஸ்கை நெட்வேர்க்கின் இயக்குனர்களில் ஒருவராக இணைந்துகொள்ள சரியாக 3 மாதங்களின் முன்னர் சென்னையில் ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்படுகிறது. லைக்கா புரடக்ஷன் என்ற நிறுவனம் சென்னை அசோக் நகரில் கங்லே மற்றும் லைக்காவின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிவாசமி ஆகியோரை இயக்குனர்களாகக் கொண்டு ஆரம்பிக்கப்படுகிறது. தமிழகத்திற்கும் இலங்கைக்கும் உள்ள தொப்புள் கொடி உறவின் கயிறுகளாக கங்லேயும் சிவசாமியும் திரைப்படம் தயாரிக்க இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆகின்றனர். 8 கோடி இந்திய ரூபாய்களை முதலீடு செய்வதாக இந்த நிறுவனம் பதிவு செய்யப்படுகின்றது. சிவசாமி பங்குதாரராக மற்றொரு நிறுவனமும் சென்னையில் பதிவு செய்யப்படுகிறது அதன் பெயர் ஞானம் பிலிம் பிரவேட் லிமிடட்.

இதே காலப்பகுதியில் சிவசாமி மற்றும் கங்லே ஆகியோரை இயக்குனர்களாகக் கொண்டு லைக்க லொஜிஸ்டிக், லைக்கா ஹொட்டேல்ஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் சென்னையில் ஆரம்பிக்கப்படுகின்றன.

சென்னையிலும் ஐயர்லாந்திலும் பிரித்தானியாவிலும் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான லைக்கா பிளையிலும் சிவசாமி இயக்குனர். லைக்கா பிளை இலங்கை அரச விமானச் சேவையான சிறீ லங்கன் ஏயர் லைன்சின் பிரித்தினியாவிற்கான பிரதிநிதிகள். பல்சோறும் கையுமாக சிறீ லங்கன் ஏயர் லைன்சில் பயணம் செய்யும் புலம் பெயர் தமிழர்கள் லைக்காவின் விளம்பரங்களை பயணத்தின் நடுவே விமானத்தின் தொலைக்காட்சியில் பார்த்து மகிழலாம்.

pirivom-santhippomதமிழ் நாட்டில் உணர்வாளர் பட்டியலில் முதல் வரிசையிலிருக்கும் இயக்குனர் சேரன் நடித்த  சினிமாவான பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படம் ஞானம் பிலிம்ஸ் இன் தயாரிப்பே. இலங்கையில் ராஜபக்ச குடும்பத்துடன் டீலை முடித்த கையோடு தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்ற ‘பெருமையை’ இது பெற்றுக்கொள்கிறது. ‘ஞானம் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் அ.சுபாஸ்கரன் தயாரிக்க.. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கரு.பழனியப்பன்’ என்ற செய்திகளை தமிழ் நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.

இப்போது லைக்கா புரடக்ஷன் நிறுவனம் மற்றொரு புலம் பெயர் நிறுவனமான ஐங்கரன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் கத்தி. தலைப்பிலேயே இரத்தம் தெறிக்கும் வன்முறை கொண்ட இத்திரப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் என்ற பிரபல இயக்குனர் இயக்கிவருகிறார்.

kaththisoonநமது இளைய தளபதி விஜய் உடன் ராஜபக்ச குடும்ப நண்பர்களான லைக்கா குழுமமும் இணைந்து வன்முறைக் கலாச்சாரத்தை விற்பனை செய்யும் திரைப்படம் கத்தி! கத்திக் கத்தியே தொண்டை வரண்டு போன தமிழக உணர்வாளர்கள் தாக்குதல் பட்டியலில் கத்தி இணையுமா என்பது கேள்விக்குறி.

சேரன் இடம்தெரியாது மறைந்து விட்டார். விஜய் அவ்வப்போது அரசியல் முத்துக்க்ளை உதிக்கிறார். பாலியல் வக்கிரங்களையும், சமூக விரோத வன்முறைகளையும் இணைந்து சாம்பார் போட்டு விற்பனை செய்வதையே எதிர்காக தமிழ்க் கலாசாரக் காவலர்கள் ராஜபக்ச சுட்ட வடை தமிழ் நாட்டில் மூக்கைத் துளைக்கும் போது என்ன செய்யப்போகிறார்கள்?

http://www.skynetwork.lk/about.html

சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்

பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்

இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

வியாபாரி! : விஜி.

‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி

Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses

லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்

http://www.eelamdaily.com/news/11847/57/.aspx

http://www.huffingtonpost.co.uk/2013/11/18/sri-lanka-david-cameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/cameron-tories-funded-big-diaspora

 

5 thoughts on “ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்”

 1. தமிழ்சினிமாவின் ஆரம்பம் சமூக சீர்திருத்தத்தையும் அடக்குமுறை,ஆதிக்கம் இவற்ரிற்கு எதிரானதாகவுமே இருந்தது.
  இதற்காக  கதை எழுதியவ்ர்கழும் நடித்தவ்ர்கழும்  தமிழகத்தின்
  அரசியலை கைப்பற்ரினார்கள்.  அவர்களே  பின்னர்  மோசடிக்காரர்களாக  குற்ரமும்  சாத்தப்பட்டு  வழக்குகள் நடைபெறுகின்றன.

  இலங்கைத்தமிழர்களைப்பொறுத்தவரையில் தமிழரின் உயிருடனும்  இரத்தத்துடனும் தங்கள் நடிப்புகளை அரங்கேற்ரி
  வருகின்றார்கள். இதில் கொலைகாரன் என்று இராஜ்பக்சவிற்கு
  பட்டம் சூட்டி வாழ்வோர் ஒருபக்கம், இராஜ்பக்சவே  எமக்கு
  கடவுளென பணத்தினால்  அபிசேகம் செய்வோர்  ஒருபக்கம்.

  இதில் யாரைத்தான் தமிழர் நம்புவதோ?-மன்னன்

 2. கத்தி  படம்  பிரச்சனை வரும்  என்பதால்  இடைநிறுத்தப்பட்டுல்ளது.   இதனை  முதலில்  அம்ப்லப்படுத்திய  இனியொருக்கு  னன்றி   சொல்ல வேண்டும்

 3. ராஜபக்சே தொடர்பு: முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஜய் படத் தயாரிப்பாளர்கள்!

  விஜய் படத்தைத் தயாரிக்கும் லைக்காமொபைல் நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

  விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் புதிய படமான கத்தி, படப்பிடிப்பிலிருக்கும் போதே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களாக ஐங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தியும், லைக்காமொபைல் நிறுவனத்தின் சார்பில் சுபாஷ் கரண் அல்லிராஜாவும் தயாரிக்கின்றனர்.

  ராஜபக்சே தொடர்பு: முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஜய் படத் தயாரிப்பாளர்கள்!

  ஐங்கரன் கருணா ஏற்கெனவே விஜய்யை வைத்து வில்லு படம் எடுத்து தோற்றவர். இவருடன் இணைந்து இப்போது விஜய் படத்தைத் தயாரிக்கும் சுபாஷ்கரண் அல்லிராஜா, ராஜபக்சேவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். ஈழத் தமிழர்கள் அத்தனைப் பேரும் அறிந்த உண்மை இது. குறிப்பாக லண்டன், நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு லைக்காமொபைல் நிறுவனத்துக்கும் இலங்கை அரசுக்கும் உள்ள தொடர்புகள் நன்கு தெரியும்.

  (லைக்கா மொபைல்காரர்களுக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் என்ன தொடர்பு?- கேமரூனின் அடுத்த அதிரடி)

  ராஜபக்சேவின் பேராதரவுடன்தான் லைக்காமொபைல் நிறுவனம், லண்டன் – கொழும்புவுக்கு லைக்கா ப்ளை விமான சேவையை நடத்திக் கொண்டுள்ளது. மேலும் ராஜபக்சேவின் மிக நெருங்கிய உறவினர் ஒருவர் லைக்கா மொபைல் நிறுவனத்தில் பெருமளவு பங்குதாரராக இருப்பதை மீடியாக்கள் அம்பலப்படுத்தியுள்ளன. லைக்கா ப்ளை நிறுவனம்தான் இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தெரிவு செய்யப்பட்ட கூட்டாளி நிறுவனமாகும். இந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர் ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்!

  அதுமட்டுமல்ல, கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்தின் டோரி கட்சிக்கு 420,000 பவுண்டுகளை நன்கொடையாக அளித்திருந்தது லைக்கா மொபைல் நிறுவனம். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. ராஜபக்சேவுக்கும், இலங்கை அரசுக்கும் நெருக்கமான லைக்காமொபைல் நிறுவனத்திடமிருந்து எதற்காக இவ்வளவு பெரிய தொகையை இங்கிலாந்தின் ஆளும்கட்சி பெற வேண்டும்? என அந்நாட்டு எம்பி டாம் ப்ளெங்கின்ஸாப் கேள்வி எழுப்பியிருந்தார்.

  ராஜபக்சே தொடர்பு: முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஜய் படத் தயாரிப்பாளர்கள்!

  இதற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பதிலளித்த பிரதமர் டேவிட் கேமரூன், இந்த நன்கொடையை திருப்பித் தரப் போவதாக அறிவித்ததோடு, லைக்காமொபைலுக்கும் ராஜபக்சேவுக்குமான தொடர்புகளை விசாரிக்க குழு அமைக்கவும் உத்தரவிட்டது நினைவிருக்கலாம். அதுமட்டுமல்ல, இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் மாநாட்டுக்கு முதன்மை ஸ்பான்சராக இருந்தது இந்த லைக்காமொபைல் நிறுவனம்தான். இந்த நிறுவனத்துக்கு ‘கோல்ட் ஸ்பான்சர்’ எனும் பெரிய அந்தஸ்தை இலங்கை அரசு கொடுத்திருந்தது.

  ராஜபக்சேவின் சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் இலங்கையில், அவரது அனுசரணை இல்லாமல் ஒரு தமிழரால் இத்தனை செல்வாக்குடன் இயங்க முடியுமா? சர்வதேச அளவில் மிக சக்தி வாய்ந்த ஒரு நாட்டின் பிரதமரே லைக்காமொபைல் – ராஜபக்சே நிதித் தொடர்புகள் என்ன? என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பிய பிறகும், ராஜபக்சேவுக்கும் லைக்காவுக்கும் சம்பந்தமே இல்லை என சென்னையில் ஒருவர் பிரஸ் மீட் வைத்து சொல்கிறார். அப்படியென்றால் தமிழ்ப் பத்திரிகைகள் அந்த அளவு விவரம் தெரியாதவர்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி என்பதற்கு நேற்று ஒரு லைவ் டெமோ காட்டியிருக்கிறார்கள் விஜய் படத் தயாரிப்பாளர்கள்!!

 4. கத்தி சர்ச்சை: அம்மாடி நான் தப்பிச்சேன்- சூர்யா நிம்மதி:

  கத்தி பட சர்ச்சையில் இளைய தளபதி விஜய் சிக்கியுள்ளார். அதே நேரம் சூர்யா நல்ல வேளை நாம் தப்பித்தோம் என்று நிம்மதி அடைந்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தி படத்தை லைகா மொபைல் நிறுவனம், ஐங்கரன் இன்டர்நேஷனலுடன் சேர்ந்து தயாரிக்கிறது. இந்நிலையில் லைகா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிகவும் நெருக்கமானவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. கத்தி சர்ச்சை: அம்மாடி நான் தப்பிச்சேன்- சூர்யா நிம்மதி இதனால் கத்தி படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த லைகா மொபைல் நிறுவனம் முதலில் சூர்யாவை தான் அணுகியதாம். நீங்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிக சம்பளம் தருகிறோம் எங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுங்கள் என்று கேட்டதாம். சூர்யா அந்நிறுவனம் பற்றி விசாரித்து அது ராஜபக்சேவுக்கு நெருக்கமானவருடையது என்று தெரிந்தவுடன் நைசாக நழுவிவிட்டாராம். சூர்யா நடிக்க முடியாது என்று கூறியதால் அந்நிறுவனம் விஜய்யை அணுகியுள்ளது. பாவம் அவர் கால்ஷீட் கொடுத்துவிட்டு தற்போது தவித்துக் கொண்டிருக்கிறார்.

 5. விஜய்யின் கத்தி படத்துக்கு எதிராக அணி திரளும் தமிழ் அமைப்புகள்

  பொதுவாக ரிலீஸ் தேதி நெருங்கும் போதுதான் விஜய் படங்களுக்கு பிரச்சினை கிளம்புவது வழக்கம். இந்த முறை படம் தொடங்கிய சில தினங்களுக்குள்ளேயே இடியாப்பச் சிக்கலைச் சந்திக்கிறது அவரது கத்தி படம். விஜய் – சமந்தா நடிக்கும் இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார். படத்தை முதலில் ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது, அவர்களுடன் லைக்கா மொபைல் நிறுவனமும் தயாரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த லைக்கா மொபைல் நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானது. அவரிடம் ஏராளமான சலுகைகளைப் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டின் ஒரு முக்கிய நிகழ்வுக்கு ஸ்பான்சரே இந்த லைக்காமொபைல்தான். இதன் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா ஒரு தமிழர். ஆனால் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே இவரது கூட்டாளி என்பது ஈழத் தமிழர் அறிந்த உண்மை. இந்தப் பின்னணி கொண்ட லைக்கா மொபைல் நிறுவனம் விஜய் படத்தைத் தயாரிப்பது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. எக்காரணம் கொண்டும் விஜய் நடிக்கும் இந்த கத்தி திரைப்படத்தை உலகின் எந்தப் பகுதியிலும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என அமெரிக்க தமிழ் அமைப்புகள் உறுதியாகத் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய தமிழ் அமைப்புகளும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இந்தப் பிரச்சினை தீர இரண்டு வழிகள்தான் உள்ளதென்றும், ஒன்று படத்தைக் கைவிட வேண்டும்… அல்லது தயாரிப்பாளரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

  இந்த நிலையில் படத்துக்கு எழுந்துள்ள இந்த பிரச்சினை குறித்து சில தமிழ் தினசரிகளின் செய்தியாளர்களை மட்டும் ரகசியமாக அழைத்து சந்தித்துள்ளனர் இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர்

Comments are closed.