ராஜபக்ச இந்தியா வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் இன்று போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தில்லியில் இன்று நடைபெறும் காமன்வெல்த் போட்டி இறுதிநாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபட்ச அழைக்கப்பட்டிருக்கிறார். அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்து மக்கள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் போன்ற கட்சிகள் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
கோவை தமிழ்நாடு ஹோட்டல் அருகே மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபட்சவின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல் கோவை காந்திநகர் பகுதியில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராஜபட்சவின் உருவப்பொம்மை, உருவப் படம், இலங்கை தேசியக்கொடி போன்றவற்றை எரித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதே வேளை, ராஜபக்ச , இன்று முற்பகல் 10.45 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வில் விசேட அதிதியாக பங்கேற்பதற்காக அவர் புதுடில்லிக்கு சென்றுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றே இந்த விஜயம் அமைந்துள்ளது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை நாளை வெள்ளிக்கிழமையன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.