நுரைச்சோலை அனல் மின் உற்பத்திக்கான சில ஒப்பந்தங்களை மின்வலு, எரிசக்தி அமைச்சின் செயலாளர் எம்.சி.பெர்டினான்டோ தனக்கு நெருக்கமான சில நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். இதனடிப்படையில், குறித்த ஒப்பந்தத்தின்மூலம் 18 நாட்களுக்கு 1,620 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் ஒருவர் கூறுகையில், நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு மூலப்பொருளை விநியோகிக்க 04 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதனடிப்படையில், இதற்குப் பொருத்தமான நிறுவனமொன்றைத் தெரிவு செய்வதற்கு எரிவலு, மின்சக்தி அமைச்சினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவின் நோபல் எனப்படும் நிறுவனத்திற்கு நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை வழங்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தினால் கிடைத்த உத்தரவிற்கமையே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிவலு, மின்சக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், மூன்று மாதங்களுக்கு 450,000 மெட்ரிக்தொன் நிலக்கரியை விநியோகிக்குமாறு கோரியிருந்த போதிலும் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக்தொன் நிலக்கரியை மாத்திரம் விநியோகித்த குறித்த நிறுவனம் விநியோகத்தை இடைநிறுத்தியது. இதனால் கடந்த 18 நாட்களாக நிலக்கரி இல்லாததால் பணிகள் ஸ்தம்பிதமடைந்து நுரைச்சோலை அனல்மின் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 18 நாட்களில் 1,620 மில்லியன் ரூபா நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.