இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை பார்க்க பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 8ம் திகதி வேலூர் மாவட்ட பொலிஸ் அதிகாரி ஈஸ்வரன் தலைமையில் பொலிஸார் சிறையில் திடீர் சோதனை நடத்தினர். அதன்போது, சிறைக்கைதி முருகனிடமிருந்து கையடக்கத் தொலைபேசி, நான்கு சிம் கார்டு மற்றும் இரண்டு “சிடி’க்களை சிறைத்துறை பொலிஸார் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, பாகாயம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், முருகனிடம் பறிமுதல் செய்த கையடக்கத் தொலைபேசி மூலம் அடிக்கடி இலங்கை, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு பேசியது தெரிந்தது.
இதையடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியது தொடர்பாக சிறை நன்னடத்தை விதிகள் படி முருகன் மீது சிறைத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை முருகனும், அவரது மனைவி நளினியும் அரை மணி நேரம் சந்தித்து பேசிக் கொள்ள தடை விதிக்கப்பட்டது. அதே போல முருகனை சந்திக்க, அவரது உறவினர்கள், பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
நேற்று முருகனை சந்திக்க காட்பாடி பிரம்மபுரத்தில் இருந்து, பத்து பேர் சிறைச்சாலைக்கு வந்துள்ளனர். அவர்களை சிறை அதிகாரிகள், முருகனைப் பார்வையிட மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், திருப்பி அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜெயலலிதா அரசின் இந்த நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமானதாக உள்ளது