யுத்தத்தை நிறுத்த அரசாங்கத்திற்கு உள்ள தேவை காரணமாகவே தொடர்ந்தும் ஜே.வீ.பீயின் மீது புலி முத்திரை குத்தப்பட்டு வருவதாக ஜே.வீ.பீயின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியா உட்பட காலனித்துவ நாடுகள் கூடியவிரைவில் 13 வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி, காவற்துறை, காணி மற்றும் நிதி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குமாறு அழுத்தங்களை கொடுத்து வருவது, அந்த நாடுகளின் அதிகாரிகள் அண்மைக்காலமாக தெரிவித்து வரும் கருத்துக்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, மக்கள் அவருக்கு வழங்கிய ஆணையில் இருந்து விலகி செயற்பட்டு, நட்புறவுச் சக்திகளுடன் முரண்பட்டு கொண்டுள்ளார். இது மாத்திரம் அல்லாது மக்கள் அவருக்கு அதிகாரத்தை வழங்கிய பிரதான விடயங்களில் இருந்து விலகி, நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையும் இல்லாது செய்யும் நடவடிக்கைளில் மகிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளார். சர்வதேச அழுத்தங்களுக்கு அமைய 13வது அரசியல் அமைப்பை முழுமையாக அமுல்படுத்தும் தேவை அரசாங்கத்திற்கு உள்ளது. அத்துடன் யுத்தத்தை நிறுத்தும் தேவையும் அரசாங்கத்திற்கு இருகிறது. எனினும் படையினர் தமது திட்டங்களுக்கு ஏற்ப விடுதலைப்புலிகளை தோற்கடித்து வருகிறார்கள், ஜே.வீ.பீ உடபட தேசப்பற்றுள்ள அமைப்புகள் படையினருக்கு தேவையான கொள்கை ரீதியான அழுத்தங்களை மேற்கொண்டு வருகிறனர். இதனால் அரசாங்கத்திற்கு யுத்தத்தை நிறுத்தும் தனது வேலையை செய்ய முடியாது உள்ளது. ஜே.வீ.பீயின் நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு பெரும் தடையாக உள்ளன. இதனால் ஜனாதிபதிக்கு இந்த தடைகளை உடைக்கும் தேவையேற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஜே.வீ.பீ மீது புலி முத்திரை குத்தும் நடவடிக்கையை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.