யுத்தம் என்ற போர்வையில் தமிழ் சமூகம் அழிக்கப்படுகிறது : ஐ.தே.க

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் தமிழ்ச் சமூகம் அழிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தை நசுக்கி அடக்கி ஒடுக்குவதன் மூலம் அரசாங்கத்தினால் விரோதத்தை மட்டுமே சம்பாதிக்க முடியுமே தவிர சமாதானத்தை காண முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அப்பாவித் தமிழர்களை பஸ்களில் ஏற்றி வவுனியாவுக்கு கொண்டு சென்றதுபோல் மீண்டும் ஒருமுறை அதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிகின்றது. இது அடிப்படை உரிமை மீறலாகும். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றது என்றும் அவர் கூறினார். காரணங்கள் இன்றி தலைநகரில் தங்கியிருப்போரை வெளியேற்றுவது என அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றமை தொடர்பில் கேட்டபோதே ரவி கருணாநாயக்க எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை என்பது இங்கு வாழும் மூவினத்தவருக்கும் பொதுவான நாடாகும். யாரும் எவ்விடத்திற்கும் போகலாம், வரலாம். அதேநேரம் குடியிருக்கவும் முடியும். ஒரே நாட்டு மக்களை குறித்த இடங்களில் இருந்து பலாத்காரமாக விரட்டியடிப்பது சட்டத்துக்கு முரணான செயலாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையிலேயே அரசாங்கம் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. இதில் அப்பாவித் தமிழர்களும் கொல்லப்படுகின்றனர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையான விடயம்.

இதனால் குறித்த ஒரு சமூகம்அழிக்கப்படுவதாகவே தெரிகின்றது. ஈவிரக்கமின்றி சமூக அழிப்பை நடத்திவிட்டு அதனூடாக வெறுப்புக்களை சம்பாதித்துக் கொண்டு இந் நாட்டில் எவ்வாறு சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்பது சகல மட்டத்தினரினதும் கேள்வியாக இருக்கின்றது.

இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் மிருகங்களைப் போலவே நடத்தப்படுகின்றனர். கடந்த காலங்களில் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் இருந்து தமிழ் மக்களை பஸ்களில் ஏற்றி வவுனியாவுக்கு கொண்டு சென்றமையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இவ்விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்திலும் தடை விதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தற்போது கொழும்பில் காரணமின்றி தங்கியிருப்பவர்களை வெளியேற்றவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.

அரசாங்கம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றது என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு இனத்தை மட்டுமே குறி வைத்து செயற்படுகின்றமை மட்டும் தெளிவாகின்றது. யாவருக்கும் சமத்துவம் இருக்க வேண்டும் என்பதையே எமது கட்சி வலியுறுத்திக் கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளை ஐ.தே.க. மிக மிக வன்மையாக கண்டிக்கின்றது