யுத்தத்தின் சாராம்சம் : பொருளாதார நலன்களே. – வெகுஜனன்

‘அரசியற் கட்சி ஒவ்வொன்றும் ஏதாவதொரு வர்க்கத்தின் பிரதிநிதியாகவே இருக்க முடியும்’ என்ற மாக்சிசக் கோட்பாட்டிற்கு இணங்க இலங்கையில் பல்வேறு அரசியற் கட்சிகள் தோன்றின. தமது பெயர்களில் இன, மொழி, மதப் போர்வைகளைப் போர்த்தி இருந்தாலும் சாராம்சத்தில் உயர் வர்க்க மேட்டுக் குடி நலன்களைப் பாதுகாப்பவையாகவே இருந்தன. ஆட்சி அதிகாரத்தில் மாறிமாறி இன்று வரை நீடிக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் அதிகாரத்திற்கு வருவதற்கு மட்டும் பேரினவாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. சிங்கள நிலவுடைமை முதலாளித்துவ வர்க்க சக்திகளின் சொத்து சுகங்களைப் பேணி விருத்தி செய்வதுடன் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி, இரு தரப்பினரும் ஒருவரின் பொருளாதார நலனுக்கு மற்றவர் ஒத்துழைப்பு வழங்குபவராக உள்ளனர்.)

உலகிற் பல வகைப்பட்ட யுத்தங்கள் நடைபெற்று வந்துள்ளன. இன்றும் அவை நடந்து கொண்டு இருக்கின்றன. அனைத்து யுத்தங்களையும் உற்று நோக்கின் அவற்றின் அடிப்படை பொருளாதார நலன்களும் அவற்றுக்கான அரசியல் அதிகாரமாகவே இருப்பதைக் காணலாம். இத்தகைய யுத்தங்களுக்கு வழங்கப்படும் பெயர்கள் வேறுபட்டு இருக்குமே தவிர சாரம்சம் பொருளாதார லாபங்களாகவே இருக்கும். நாடுகள் மீதான, எல்லைகளுக்கான, ஜனநாயகத்திற்கான, இன மீட்சிக்கான, பயங்கரவாதத்திற்கு எதிரான, மனித உரிமைகளை மீட்கும் மனிதபிமானத்திற்கான, சமாதானத்திற்கான என்றவாறு இருந்து வருவதைக் காணலாம்.

இத்தகைய யுத்தங்களில் சொல்லப்படும் காரணங்கள் வேறானவைகளாகவும் நோக்கங்கள் பொருளாதார நலன் கொண்டதாகவுமே இருந்து வருவது தெளிவானதாகும். இலங்கையில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம் பேரினவாதத்தின் பெயரிலானதாகும். ‘இது எங்களுடைய நாடு’ ‘நாங்கள் பெரும்பான்மையினர்’ ‘இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு கால வரலாறு கொண்டவர்கள்’; என்று கூறப் படுவதன் மூலம் அனைத்துச் சிங்கள மக்களும் உணர்ச்சி மேலீட்டிற்கும் பெருமிதத்திற்கும் ஆளாக்கப் பட்டனர். தாங்கள் நிலம் அற்றவர்களாக, பொருள் அற்றவர்களாக, வேலை வாய்ப்புகளும் வீடு, கல்வி, சுகாதார வசதிகளும் இல்லாதவர்களாக இருப்பதை மறந்து தம்மினத்து ஆளும் வர்க்கங்களின் தலைவர்கள் கூறியவற்றை நம்பிக் கொண்டனர். தம்மிடையேயான ஏற்றத் தாழ்வுகள் பாகுபாடுகள் இல்லாமைகள் எவ்வாறு நிரந்தரமாகி இருந்து வருகின்றன என்பதைச் சிங்கள மக்கள் கேள்விகளின் ஊடே உற்று நோக்க விடாதவாறு திசை திருப்பப் பட்டனர்.

இலங்கையின் இடதுசாரியினர் என்போர் 1930களில் இருந்து 1960பதுகள் வரையான காலப் பகுதியில் சிங்களத் தொழிலாளர்கள், விவசாயிகள் மத்தியில் மாற்று அரசியல் விழிப்புணர்வை வளர்த்து வந்தனர். இன்றைய சமூக அமைப்பின் மீது பல்வேறு கேள்விக் கணைகளைத் தொடுத்து வர்க்க அமைப்பும் அதன் காரணமான ஏற்றத் தாழ்வுகள் பிற இன்னல்கள் பற்றி உரத்து வாசித்து வந்தனர். ஆனால் பாராளுமன்றப் பதவிச் சுகங்கள் படிப் படியாக அவர்களைப் பேரினவாத ஆளும் வர்க்க சக்திகளுடன் இணங்கிப் போக வைத்தன. அதனால் அவர்கள் சுயம் இழந்ததுடன் செல்வாக்கும் அற்றவர்கள் ஆகினர்.

அதே வேளை, இலங்கையின் நிலவுடைமை வழி வந்த உயர் வர்க்க மேட்டுக்குடிச் சிங்கள சொத்துடைய வர்க்கத்தினர் தமது பொருளாதார நலன்களைக் கட்டிக் காத்து மேலும் விரிவாக்கி வந்தனர். காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப தமது சொத்துடைமையின் இருப்பை மேலும் வளமாக்கிக் கொள்ள வளர்ந்து வந்த பொருளாதார முறைமைகளுடன் இணங்கிச் சென்று வர்க்க வளர்ச்சி பெற்றனர். கொலனிய வாதிகளின் தயவில் தமது பொருளாதார இருப்பைப் பேணிவந்த இலங்கையின் நிலவுடைமை வர்க்க சக்திகள் அவர்கள் நாட்டை விட்டு அகன்ற பின் சுதந்திரத்தின் பெயரால் தாமே ஆட்சிக் கடிவாளத்தைக் கைப் பிடித்தனர்.

முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சி முறையின் கீழ் நிலவுடைமை வழி வந்த சிங்கள உயர் வர்க்க மேட்டுக் குடி சக்திகள் தமக்கான அரசியல் கட்சிகள் மூலம் தத்தமது பொருளாதாரங்களை மேலும் வளர்த்துக் கொண்டனர். முதலாளித்துவ வளர்ச்சியானது ஏகாதிபத்தியத்தின் அரவணைப்புடன் ஏற்றம் பெற்றது. இவ்வாறான முதலாளித்துவ வளர்ச்சியில் புதிய புதிய சக்திகள் தோன்றி வளர்ந்தன. அவர்களது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கவும் விருத்தி செய்யவும் அரசியலதிகாரம் அவசியமான தொன்றாக விளங்கியது ‘அரசியற் கட்சி ஒவ்வொன்றும் ஏதாவதொரு வர்க்கத்தின் பிரதிநிதியாகவே இருக்க முடியும்’ என்ற மாக்சிசக் கோட்பாட்டிற்கு இணங்க இலங்கையில் பல்வேறு பெயர்களில் அரசியற் கட்சிகள் தோன்றின. அவை எந்தளவிற்குத் தமது பெயர்களில் இன, மொழி, மதப் போர்வைகளைப் போர்த்தி இருந்த போதிலும் சாராம்சத்தில் சொத்து சுகம் பெற்ற உயர் வர்க்க மேட்டுக் குடி நலன்களைப் பாதுகாப்பவையாகவே இருந்தன. இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் மாறிமாறி இருந்து இன்று வரை நீடிக்கின்ற இரண்டு கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமாகும். இவ் இரு கட்சியினருந் தான் இலங்கையின் ஆட்சி அதிகார அரசியலைத் தீர்மானிப்பவர்களாகவும் ஆளும் கதிரைகளில் மாறிமாறி இருந்து வருபவர்களாகவும் உள்ளனர்.

இவ் இரு கட்சியினரும் ஏதோ அதிகாரத்திற்கு வருவதற்கு மட்டும் பேரினவாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. அதன் ஊடாக சிங்கள நிலவுடைமை முதலாளித்துவ வர்க்க சக்திகளின் சொத்து சுகங்களைப் பேணி விருத்தியாக்கிக் கொள்கின்றனர். அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி நிற்கின்றனர். இரு தரப்பினரும் ஒருவரின் பொருளாதார நலனுக்கு மற்றையவர் ஒத்துழைப்பு வழங்குபவராக உள்ளனர். அதே வேளை சாதாரண உழைக்கும் சிங்கள மக்கள் இன மத மொழி என்பனவற்றின் பேரில் தமிழ் மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் எதிராகவும் திசைதிருப்பி வைக்கப் பட்டுள்ளனர். அதன் ஊடாக வளர்க்கப் பட்டதே இன முரண்பாடும் இன ஒடுக்குமுறையும். இவற்றுக்குப் பின்னால் மறைந்து நிற்பது சொத்து சுகம் கொண்டவர்களின் பொருளாதார நலன்கள் லாபங்கள் சொத்துக்குவிப்புகளாகும்.

கடந்த மூன்று தசாப்த காலத்தின் தமிழ் மக்கள் மீதான யுத்தம் என்பதன் ஊடாகத் தம்மைப் பாதுகாத்த சக்திகள் உள் நாட்டு முதலாளிகளும் அந்நிய ஏகாதிபத்திய வாதிகளுமாவர். யுத்தம் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களின் உயிர்களை குடித்து உள்ளது. அதே யுத்தம் பல்வேறு நிலைகளிலும் முதலாளிகள் பெருவர்த்தகர்கள் வியாபாரிகளைக் கொழுக்க வைத்து உள்ளது. அந்நிய ஆயுத வியாபாரிகளுக்குப் பெரும் லாபம் கிடைத்துள்ள அதே வேளை உள் நாட்டின் அதன் தரகர்கள் பெரும் பணம் சம்பாதித்து உள்ளனர். இவை அனைத்தையும் ஆழ்ந்து அகன்ற பார்வைக்கு உட்படுத்தும் போது எத்தனை முதலாளிகளையும் வர்த்தகப் புள்ளிகளையும் அரசியல் ராணுவப் பண முதலைகளையும் யுத்தம் செல்வச் செழிப்பிற்கு ஆளாக்கியுள்ளது என்பதைக் கண்டு கொள்ளலாம்.

இலங்கையின் பேரினவாதத்தின் வளர்ச்சியிலும் அது தொடுத்துள்ள ஒடுக்கு முறை யுத்தத்திலும் மிகவும் கெட்டியாகப் படித்திருக்கும் சாராம்சம் சொத்துடைமை சார்ந்த பொருளாதார நலன்களேயாகும். அதில் லாப ருசி கண்ட சிங்கள பௌத்த ஆளும் வர்க்கம் இலகுவில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர மாட்டாது. இந்த யுத்தத்தில் லாபம் ஈட்டிக் கொள்ளும் தமிழ் முஸ்லீம் முதலாளிகளும் பெரு வர்த்தகர்களும் உள்ளுர யுத்தம் முடிவுக்கு வருவதை விரும்ப மாட்டார்கள். அத்தகையோர் பேரின வாதத்தின் பக்கத் துணையாளர்களாகவே இருப்பர்.

ஆதலால் தமிழ் மக்களுக்குப் பல வழிகளிலும் அழிவுகளைத் தந்து கொண்டிருப்பதும் அடிப்படையில் சிங்கள, முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுக்குப் பாதகமான விளைவுகளைக் கொண்டு வந்துள்ள யுத்தத்தை நிறுத்த வேண்டும். இது சிங்கள மக்களினால் உணரப் படுவது அவசியம். அப்போதே யுத்தத்தின் பின்னால் மறைந்து இருக்கும் சிங்களச் சொத்துடைய ஆளும் வர்க்கத்தின் சுரண்டும் பொருளாதார நலன்கள் பற்றிய உண்மைகள் அம்பலத்திற்கு வர முடியும். இதனைச் செய்வதற்கு முதலாளித்துவப் பாராளுமன்றக் கட்சிகளால் இயலாது. உழைக்கும் மக்கள் அனைவரினதும் நலன்களுக்கான நேர்மையான தொழிலாளர் விவசாயிகளது கட்சிகளினாலேயே சாத்தியமாக்க முடியும்.

நன்றி : புதிய பூமி

One thought on “யுத்தத்தின் சாராம்சம் : பொருளாதார நலன்களே. – வெகுஜனன்”

  1. வெகுஜனன் கட்டுரை சிறப்பாக உள்ளது. இனியொரு இணையத்தள கட்டுரைகள் சமூக அக்கறை கொண்டு அமைந்திருப்பது வரவேற்க்கத் தக்கது.உங்களுடைய செய்திகளும் வர்க்க சார்பினை ஏகாதிபத்தியத்தினை எதிர்ப்பினை கொண்டிருக்கிறது. தமிழ் இணையத்தளங்கள் இன்று புலியெதிர்பாகவும் புலி சாhபாகவும் மாறிவிட்டன. தங்கள் அரசியலுக்காக என்ன பொய்களையும் கட்டவிழ்த்திட தயாராக உள்ளன. தமிழ் இணையத் தளங்கள் என்றலே வெறுப்பே ஏற்படுகின்றது. நீங்களும் அவ்வாறு மாறாமல் இருந்தால் நல்லது. அல்லது நுர்ற்றொடு நீங்களும் ஒன்றாகி பொய்யராகிவிடுவீhகள்.அத்தோடு இணையத் தளங்களில் கொடிகட்டிப் பறக்கும் தனிநபர் துதிபாடல்களை இங்கும் அரங்கேற்ற இடம்கொடுக்காதீர்கள்.
    நன்றி.

Comments are closed.