03.09.2008.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக யுத்தச் சூழலால் பாதிப்புற்ற மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் கிழக்கு முதலமைச்சர் சி.சந்திரகாந்தனிடம் அவசர கடிதம் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
யுத்தப் பாதிப்பு காரணமாக வழங்கப்பட்ட நஷ்டஈடு குறிப்பிட்ட சிலருக்கே வழங்கப்படுகின்றது. பாதிப்புற்று எவ்வித வருவாயுமின்றி தமது தொழிலைக்கூட செய்யமுடியாமல் பலர் ஜீவனோபாயமற்று வாழ்கின்றனர்.
போர்ச்சூழலால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதில் முன்னுரிமை வழங்குவது அவசியமாகும். தொழில் பாதிப்புற்றோர் (உயிரிழப்பு) குடும்ப அங்கத்தவர்களை இழந்தவர்கள், காயப்பட்டோர், வீடு பாதிப்புற்றோர் ஆகிய பல்வேறு பிரிவுகளாக பாதிக்கப்பட்டோர் இனம் காணப்பட்டு அவரவர் நிலைமைகளுக்கேற்ப பாரபட்சமின்றி நஷ்டஈட்டை வழங்க உரிய நடவடிக்கைகளை கிழக்கு முதலமைச்சர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எவ்விதத்திலும் வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது காணப்படும் பாதிக்கப்பட்டவர்களின் துயர்துடைக்க முன்வருவது அவசியமாகும் என இரா.துரைரெத்தினம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து மாகாண சபை அமர்வின்போதும் தான்பிரேரணை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாகவும் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார்.