யுத்தம் குற்றம் சம்பந்தமாக சர்வதேச ரீதியில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் இம்முறை தேர்தலில் பிரதான வேட்பாளர்கள் தமது துரும்பாக மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர் என சமுக ஜனநாயகத்திற்கான அமைப்பு மற்றும் மனிதாபிமானமற்ற விடயங்களுக்கெதிரான அமைப்பு ஆகியவற்றின் குசல் பெரேரா மற்றும் மகிந்த ரத்னாயக்க ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக பல்வேறு அநீதிகளுக்கும், துயரங்களுக்கும் உள்ளான தமது பெற்றோர், குழந்தைகள், உறவினர்கள் உள்ளிட்டோரை இழந்து, வாழ்விடங்கள் பறிக்கப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழர்களின் மனிதாபிமான பிரச்சினையை யுத்தத்தின் பிரதான பங்காளிகளே தேர்தல் பகடையாக மாற்றியிருப்பதன் மூலம் யுத்தத்திற்காக கட்டியெழுப்பப்பட்ட இனரீதியான விரோதம், சமாதானமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கையிலுள்ள அரசியல் தலைவர்கள் தயாராகவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
நாடொன்றில் இனங்களுக்கிடையில் ஏற்படும் அரசியல் ரீதியான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக பலவந்தத்தைப் பயன்படுத்துதல், நாம் வாழும் நூதன உலகின் நெறிமுறையல்ல. வடக்கில் காணப்படும் மனித அவலங்கள், துயரங்கள் அனைத்தும் யுத்தத்திற்குப் பின்னரும் அரசியல் ரீதியான முரண்பாடுகள் அடிப்படையில் மீண்டும் புதிதாக தீர்க்கப்படாமல் போகக்கூடும்.
யுத்த குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது வேறு சர்வதேச நிறுவனங்களோ எழுப்பும் கேள்விகள் மற்றும் விசாரணைகள் சர்வதேச சட்டங்கள் மற்றும் இணக்கங்களை மீறியதற்கான எதிர்கால படிப்பினை என்ற போதிலும் அவர்கள் எழுப்பும் குற்றச்சாட்டுக்களுக்கு எப்படியான பதில்கள் வழங்கினாலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் நாளாந்தப் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசிய அரசியலில் ஜனநாயக சிக்கல்கள் என்பன இதன்மூலம் தீர்க்கப்படமாட்டாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.