யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளில் தமிழ் அரசியல் கட்சிகள் சிலவும் மற்றும் சில சுயேச்சைக் குழுவினரும் முன் செயற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக, யாழ்ப்பாணத்தில் சுயேச்சைக்குழுக்களாகப் போட்டியிடுவது சம்பந்தமாக, முன்னாள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்களுடன் ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கலந்துரையாடி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, யாழ் மாநகர சபைக்கான தேர்தலில் தென்னிலங்கை ஆளும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகள் சார்பிலும் இம்மறை வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் எனவும் யாழ்ப்பாண மக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தக் கட்சிகளின் முன்னாள் ஆதரவாளர்களே இத்தகைய கருத்துக்களை மக்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சியும் போட்டியிடலாம் என அங்குள்ள முஸ்ஸிம் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபைத் தேர்தலைப் பொறுத்தவரை, இந்த முறை மிகவும் கடுமையான போட்டிகள் நிலவலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர். பதினொரு வருடங்களின் பின்னர் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
யாழ். மாநகரசபைத் தேர்தலில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி
யாழ். மாநகரசபைத் தேர்தலில் வாக்களிக்க ஒரு லட்சத்து நானூற்று பதினேழு பேர் தகுதி பெற்றுள்ளதாக யாழ். மாவட்டத் தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் குகநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 23 அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்கு 67 வக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வசிப்பவர்களின் நன்மை கருதி, உரிய கோரிக்கை விடப்படும் பட்சத்தில் நகருக்கு வெளியில் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் ஒரு பகுதியினர் புத்தளம், கொழும்பு, வவுனியா, அனுராதபுரம் போன்ற இடங்களில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களும் வாக்களிக்கத்தக்க வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.