தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல். ..அவர்கள் ஐரோப்பாவிற்கு இடம் பெயர்ந்து விட்டார்களா என்ற எண்ணம் பார்பவர்கள் மனதில் தோன்றும். தமிழ் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் நிகழ்ச்சியை நடத்தும் தமிழ்க் கொலையாளிகள், ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து பேசும் புது மொழிக்கு தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்று வைத்திருக்கலாம். விஜை தொலைகாட்சி நடத்தும் ஏயர் டெல் சுப்பர் சிங்கர் (மூன்று) நிகழ்ச்சியின் தலையங்கமே தமிழைக் கொன்று தான் தோற்றம் பெற்றது.
நேற்று மாலை வரை யாழ்ப்பாணத்தின் மத்தியதர வர்க்க வீடுகள் எங்கும் இதைப்பற்றி தான் பேசிக்கொண்டார்கள். நிகழ்ச்சி தொடங்கியதும் யாரும் வெளியே வருவதில்லை. நேற்று மாலை நகரத் தெருக்களில் சன நடமாட்டம் குறைந்திருந்தது. தமிகத்தின் செல்லக் குரலுக்கான தேடலின் உணர்ச்சி வேகத்தில் தொலைக்காட்சிகளுக்கு முன்னாலும், கணனிப்பெட்டிக்கு அருகிலும் அனைவரும் முடங்கிவிட்டார்கள். அவர்கள் விஜய் ரிவி இனால் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்கள். யாழ்ப்பாண சமூகத்தின் மற்றொரு பகுதி பசியால் வாடிக்கொண்டிருந்தது. எதிர்காலத்தின் இருட்டு பச்சை உடையோடும் துப்பாக்கிகளோடும் தெருக்களில் சுதந்திரமாகத் திரிந்தது.
யாழ்ப்பாணம் நேற்றோடு இன்னும் ஒரு முறை விடுதலையானது.
-யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தின் தென்னிந்திய கலாச்சரக் குப்பைகளின் மீதான மோகத்தைக் கண்டு மனமுடைந்த ரிதீஷ் இனியொருவிற்கு எழுதிய சிறு குறிப்பு இது. இவ்வேளையில் வினவு தளத்தில் வெளியான கட்டுரை ஒன்றை யாழ்ப்பாண கலாச்சார உணர்ச்சிகளுக்குச் சமர்ப்பிக்கிறோம்:
சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்!
குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் பாடுகிறார்கள். முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். கண்ணடிக்கிறார்கள். பெற்றோர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “குரல்ல பீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள்.
ஒளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது அரங்கம். அடுத்த பாடலை பாட வருகிறார், போட்டியாளர். பின்னணியில் இசை ஒலிக்க, பாடத் துவங்குகிறார்.
”ஆராரிரோ..நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு…”
அரங்கிலிருப்பவர்கள் முதல் நடுவர்கள் வரை அவரவர் அன்னையின் தியாகத்தை எண்ணி உருகியபடி இருக்கின்றனர். பாடலின் நடுவில், நடுவர்களில் ஒருவர் இடைமறிக்கிறார்.
“ஒரு நிமிசம், இதை யாருக்கு டெடிகேட் பண்றீங்க, சந்தோஷ்?”
”அம்மாவுக்கு, சார்” – போட்டியாளர்
“உன் அம்மா எங்க?” – விட்டால் அழுது விடுவது போன்ற உருக்கமான குரலில் நடுவர்.
”அம்மா வரலை, அம்மாவுக்கு உடம்பு முடியாததால, வந்து உட்கார முடியாது. .அதனால வரலை.” – போட்டியாளர்.
“அப்டியா? நிஜம்மா?” – போலித்தனமான இரக்க வார்த்தைகளில் நடுவர்.
”ஆமா, நிஜமாத்தான் சார்” – பாடலை பாதியில் நிறுத்தச் சொன்ன கலக்கத்துடன் பதிலளிக்கிறார் போட்டியாளர்
“இங்கே பாருங்க, ஒரு சர்ப்ரைஸ் உங்களுக்கு” என்று நடுவர் சொன்னதும், அரங்கமே திரையில் பார்க்கிறது. அங்கு, வாசலுக்கு வெளியே ஸ்ட்ரெச்சரிலிருந்து ஒரு அம்மாவை இறக்குகிறார்கள். அவரால் நடக்க முடியவில்லை. அப்படியும் விடாமல், கைத்தாங்கலாக அழைத்து வருகிறார்கள். காமிரா போட்டியாளரிடம் திரும்புகிறது. அவரோ, இதைக் காணச் சகியாமல் திரும்பிக் கொள்கிறார். அழுகிறார். உருகுகிறார். அரங்கமே எழுந்து நிற்கிறது. இதற்கேற்ப, ஒரு சோகப் பின்னணி இசை வாசிக்கப்படுகின்றது. பலரும் கைக்கொடுத்து தூக்கிவிட, அந்த அம்மா சிரமப்பட்டு படியேறுகிறார். இதைக் காண்பவர்கள், இன்னும் நெகிழ்ந்து விடுகிறார்கள். வாய் பொத்தி, ”அய்யோ” என்று பதறுகிறார்கள். கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள்.
மேடையில் அவர் நாற்காலியில் அமர்ந்ததும் கரவொலி. இதோடு அந்த போட்டியாளரை விட்டு விடவில்லை. ”சரி, சந்தோஷ், ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நீங்க என்ன ஃபீல் பண்ணீங்க, இப்போ என்ன ஃபீல் பண்றீங்க? எப்படியாவது வார்த்தையில அதை கொண்டு வாங்க?” என்று அந்த போட்டியாளரை விடாமல் தோண்டித் துருவி செண்டிமெண்டைப் பிழிந்து எடுக்கிறார்கள்.
நடுவர்கள் கண்களை துடைத்துக் கொள்கிறார்கள். அரங்கத்திலிருப்பவர்கள், இந்தக் காட்சியை காணத் திராணியற்றவர்களாய் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறார்கள். அப்படியும் போட்டியாளரை நிகழ்ச்சி நடத்துபவர் விடவில்லை. விக்கித்துப் போய் இருப்பவரிடமிருந்து உணர்ச்சியை வார்த்தைகளாகக் கறந்துவிடத் துடிக்கிறார். “எங்க அம்மாவால நடந்து வர முடியாது, வந்தாலும் நாள் முழுக்க நாற்காலியில உட்கார்ந்து இருக்க முடியாது” என்று போட்டியாளர் சந்தோஷ் தடுமாறுகிறார்.
போட்டியாளரின் தாயையும், நிகழ்ச்சி நடத்துபவர் விடவில்லை. அவரும் தடுமாற்றமான குரலில் பதிலளிக்கிறார். தனக்கு இந்த ஏற்பாடு முன்பே தெரிந்திருந்தாலும், ஆச்சரியமாக இருக்கட்டுமே என்பதற்காக மகனிடம் இது குறித்துச் சொல்லவில்லை என்கிறார். இதற்கும் அரங்கம் கண்கலங்குகிறது. நெகிழ்ந்து கரவொலி எழுப்புகிறது. சிறிது நேரத்தில் விட்ட இடத்திலிருந்து திரும்ப பாடல் தொடங்குகிறது.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் – தமிழகத்தின் பிரமாண்டமான குரல் தேடல் மற்றும் தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்ற இந்த நிகழ்ச்சி தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பிரசித்தம்.
முதலில் இந்த நிகழ்ச்சி மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல் அல்லாமல், உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோ வகையைச் சார்ந்தது. அதாவது, பணத்துக்காக நடிக்கும் நடிகர்களை கொண்டதல்ல. நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களைக் கொண்டு, அவர்களின் உணர்ச்சிகளை, வாழ்க்கையை மையமாகக் கொண்டு பணத்துக்காகவும், படோடபமான பரிசுகளுக்காகவும் முக்கியமா டி ஆர் பி ரேட்டிங்குக்காக நடத்தப்படுபவை. முன்னரே திட்டமிட்டு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைப் பார்த்து சலித்த ரசிகர்களுக்கு உண்மையான விறுவிறுப்பு, ஆவல், த்ரில் முதலான உணர்ச்சிகளை ஊட்டி கல்லா கட்டுவதுதான் இந்த ரியாலிட்டி ஷோக்களின் நோக்கம்.
இவ்வகை நிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் 1970களில் அமெரிக்காவில் பிரபலமாக இருந்தது. அமெரிக்காவில் ஓபரா வின் ஃப்ரே என்ற பெண்மணியின் இவ்வகை நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. எல்ல வணிக ஊடகங்களும் அமெரிக்க மாதிரியை வைத்து வளர்ந்தது போல தற்போது இந்த நிகழ்ச்சிகள் இந்தியாவுக்கும் இறக்குமதியாகி இருக்கின்றன.
கோன் பனேகா குரோர்பதி, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, காபி வித் அனு, சச் கா சாம்னா, மானாட மயிலாட, சரிகமபதநி என்று இதில் அநேக ரகங்களுண்டு. இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் விளையாட்டு, காமெடி, பிரபலங்களை வைத்து, திறமைக்கான தேடல் என்றும் பல வகைகள் உண்டு. ஏ எக்ஸ் போன்ற சேனல்களில் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களே தனிச்சிறப்பாக நடக்கின்றன. அதில் போட்டி நிகழ்ச்சிக்காக அருவெறுப்பான உணவுகளை உண்பது, சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் செய்யாதவற்றை காமிரா முன்பு செய்வது, சமயங்களில் உயிரைக் காவு கொள்ளக்கூடிய சாகசங்கள், முன்பின் தெரியாதவர்களுடன் சில நாட்களை ஒரே வீட்டில் கழிப்பது முதலியன.
வகைவகையாக நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றின் நோக்கம் ஒன்றுதான் – காண்பவரின் உணர்ச்சிகளைக் கொண்டு விளம்பரங்களின் மூலம் காசு பார்ப்பது. அதாவது ரியாலிட்டி என்று சொல்லிக் கொண்டாலும் அதில் இயல்பு தன்மை என்பது பேச்சுக்குக் கூட இருக்காது. எல்லாம் ஒரு செயற்கைத்தனம் கலந்து இருக்கும். அதே நேரம் உண்மையில் நடப்பது போல தொகுத்து வழங்குவார்கள்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகள், பார்ப்பவரை அடுத்தது என்ன என்பதை இதயத்துடிப்பை எகிறவைத்து, எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி ஈர்த்துப் பிடிக்கின்றன. எவ்வளவுக்கெவ்வளவு மக்களை ஈர்த்துப் பார்க்க வைக்கின்றன என்பதைப் பொறுத்து அந்த நிகழ்ச்சியின் டி ஆர் பி ரேட்டிங் எகிறும். அதைப் பொறுத்து பணமும் கொழிக்கும். இதைக் கண்டுக்கொண்ட, டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை காமதேனுவாக பார்க்கின்றனர். பொழுதுபோக்கு அம்சத்துக்காக நிகழ்ச்சிகள் காண்பிக்கப்பட்டது போக, நிஜத்தைப் போலவே காண்பிக்க வேண்டும், பார்ப்பவர்களின் உணர்ச்சிகளை கட்டிப்போட வேண்டும் என்ற உந்துதலில் நிகழ்ச்சிகளை செயற்கையாக இட்டுக்கட்டி நடத்துகின்றன. அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன, தொலைக்காட்சி நிறுவனங்கள். ஆட்டை இழுத்து வந்து, வளர்த்து, பூஜை செய்து வெட்டுவது போலத்தான், ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டிருந்த காட்சி.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடும் உணர்ச்சிகளின் சுரண்டல் என்றால் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுப்பதும் மற்றொரு வகைச் சுரண்டல்தான். யார் அதிக வாக்குகளை செல்போன் குறுஞ்செய்திகள் மூலம் பெறுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அனுப்பப்படும் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் காசு. விளம்பரங்கள் மட்டுமல்லாமல் மக்களின் குறுஞ்செய்திகளிலும் காசு வேட்டைதான், விஜய் டீவிக்கு. இப்படிக் கொள்ளையடிப்பதற்காக, மக்களின் கவனத்தைப் பெறுவதற்கு அவர்களுக்குத் தெரியாமலே வக்கிரமான ரசனைக்குக் கொண்டு சென்று செண்டிமெண்டால் தாக்குவார்கள். இதில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுடன், மேல்தட்டு நடுத்தர வர்க்கப் பெற்றோர்களும் அடக்கம்.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் பல சுற்றுகளுண்டு. ஒவ்வொரு சுற்றிலும் சிலரைக் கழித்துக்கட்டி கொண்டே வந்து, இறுதியில் மூன்று பேரை நிறுத்துவார்கள். அதுவும் கூட இயல்பானதாக இல்லாமல், நிகழ்ச்சியின் காரசாரத்தைக் கூட்ட வேண்டி நடத்தப்பட்ட நாடகமாகவே இருக்கும். மேலும், இந்தச் சுற்றுகளில் தோல்வியடைந்தவர்கள், இறுதியாக வைல்ட் கார்ட் சுற்றில் போட்டியிடலாம். அதன்பிறகு, செல்போன்கள் மூலம் வாக்கெடுப்பு, இணையம் மூலம் வாக்கெடுப்பு என்று அவர்களைத் தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளன. ஆனால், தேர்வு முறைகள் என்று சொல்லப்பட்டாலும், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது விஜய் டிவிக்கே வெளிச்சம். கடந்த முறை சாய் சரண் என்பவரை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தார்கள். அந்த சாய் சரண் தொடர்ந்து மூன்று முறை சூப்பர் சிங்கரில் விடாமல் கலந்துக் கொண்டார்.
ஒருமுறை ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் இறுதிச்சுற்றுக்கு வந்து விட்டான். அடுத்ததாக, பொது மக்களின் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். அவனுக்கு வாக்கு சேகரிக்க சென்னை நகரெங்கும் ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவனுடைய எஸ் எம் எஸ் எண், எந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும், எந்த நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் என்பன போன்ற விவரங்களுடன். ஒரு செல்போனுக்கு எத்தனை வாக்கு வேண்டுமானாலும் அளிக்கலாமாம். அதில் , அந்த சிறுவன், 10 வயது கூட நிரம்பியிராத அந்த சிறுவன் கூழை கும்பிடு போட்டுக்கொண்டு, ”என்னை வாக்களித்து ஜெயிக்க வைத்து, ஜூனியர் 2 டைட்டிலை வின் பண்ணிக் கொடுங்க, ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். இந்த நிகழ்ச்சிகள் எந்த அளவுக்கு பெற்றோரின் மனநிலையை, குழந்தைகளின் மனநிலையைச் சீரழித்து வைத்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு இது.
இது தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று சொல்லிக் கொண்டாலும் பெரும்பாலான தமிழக மக்கள் இன்னும் இதன் உள்ளே வரவில்லை. அவர்களெல்லாம் ஆரம்ப கட்டத்திலேயே கழித்துக் கட்டப்படுகிறார்கள். பெரும்பான்மை மக்கள் இங்கும் மேடைக்கே வர முடியாது. அப்படியே உள்ளே வரும் ஒன்றிரண்டு பேரும், காமெடிக்காக அல்லது ஒரு உப்புக்கு சப்பாணியாகப் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே வருவது அதிகமும் பார்ப்பன – ஆதிக்க சாதிக் குழந்தைகள்தான். அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் பார்ப்பன மாமிகளும், மாமாக்களும்தான். இந்தப் போட்டிகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கு உள்ளும் பொதிந்திருக்கும் திறமைகளை மிளிர வைப்பதல்ல. யாரால், குழந்தைகளுக்காக செலவழிக்க முடியுமோ, அவர்களது நடை, உடை , பாவனைகளுக்காக மெனக்கெட முடியுமோ அவர்களது குழந்தைகள்தான் உள்ளே வருகிறார்கள். போட்டியாளர்களாகிறார்கள்.
பிறக்கும் போதே குழந்தை என்ன பொறியியல் படிப்பு முடிக்க வேண்டும், எத்தனை இலட்சம் சம்பளத்தில் பணியாற்ற வேண்டும், என்ன ஆய கலைகள் கற்க வேண்டும் என்பதை ஒரு பந்தயக் குதிரையை வளர்ப்பது போல ’தீனி’ போட்டு வளர்க்கிறார்கள், நடுத்தர வர்க்க பெற்றோர்கள். அதுவும் அவர்கள் பார்ப்பனர்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே கர்நாடக சங்கீதமும், பரதமும், கணினிக் கல்வியும் கண்டிப்பாக இருக்கும். ஊடக, கலை, சினிமாத்துறைகளில் வாய்ப்பு கிடைத்தால் ஜாக்பாட்தான் என்பது நிதர்சனமாயிருப்பதால் இந்த மாயை பெருக்கெடுத்து ஒடுகின்றது. ஆயினும் ஆயிரத்தில் ஒருவர்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியுமென்றாலும் பெற்றோர்கள் அயர்ந்து விடுவதில்லை.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெறும் குழந்தைகளுக்கு 25 லட்சத்தில் வீடு, கார் என்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. தங்கள் குழந்தைகள் முதலிடத்துக்கு வந்து வீட்டைப் பரிசாகத் தட்டிச் செல்ல வேண்டுமென்று ஒவ்வொரு பெற்றோரும் துடியாய்த் துடிக்கிறார்கள். அதற்காக எந்த அளவுக்கும் மெனக்கெடத் துணிகிறார்கள். லாட்டரி சீட்டு வாங்கினால் லட்சாதிபதி என்று கனவு கண்டு ஒவ்வொரு நாளும் லாட்டரி சீட்டு வாங்கி பாமரர்கள் ஏமாறுகிறார்கள், இல்லையா? அது போல, தங்கள் குழந்தையை ரேஸ் குதிரைகளாக நினைக்கும் பெற்றோரின் இந்த மனநிலையை விஜய் டிவி நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது. விஜய் டிவி ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கிறது என்றால் பெற்றோர்கள் பிட் நோட்டீஸ் அடித்து விநியோகிக்கிறார்கள்.
அந்தச் சிறுவனைப் பார்த்தால் பத்து வயதுதான் இருக்கும். மாலையில் ஐந்து மணி வாக்கில் தனது தந்தையுடன் அந்த ஸ்டூடியோ வாசலில் நின்றுக் கொண்டிருக்கிறான். ஜிகினாக்களுடன் பளபளக்கும் உடை அணிந்திருக்கிறான். முகத்தில் மேக்கப். இருந்தும், முகம் சோர்ந்திருக்கிறது. மதியம் அவன் சாப்பிட்டிருக்கவில்லை. பசிக்கிறதென்றும், ஜூரம் வருவது போலிருக்கிறது என்றும் தந்தையிடம் முணுமுணுக்கிறான். ஆனால், அவனது தந்தையோ பதைப்பதைப்புடன் இருக்கிறார். ஏனெனில், இந்த ஆண்டை விட்டால், தனது மகன் அதற்கான வயது வரம்பைத் தாண்டி விடுவான் என்கிறார்.
சூப்பர் சிங்கர் பாடல் போட்டிக்கான சுற்றுதான், அது. அதில் அவன் ஜெயித்துவிட்டால், அடுத்த சுற்றில் பாடத் தயாராக வேண்டும். திரும்ப இதே போல ஏழு அல்லது எட்டு மணி நேரங்கள். அந்தச் சுற்றில் நடுவர்களுக்கு முன்பு தோன்றுவதற்கேற்ப உடை அணிந்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, அவன் இந்த போட்டியில் ஜெயித்து விட்டால் அவனது வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிடும் என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, இதன் மூலம் சினிமாவில் பாட சான்ஸ் கிடைக்கும் என்று பரப்பப்பட்டு வருகிறது.
அதற்கேற்றாற் போல், நடுவராக வரும் ஏதாவது ஒரு இசையமைப்பாளரும் ஆசை காட்டுகிறார். ஆனால், அப்படி சினிமாவில் பாடும் வாய்ப்பு பெற்றவர்கள் மிகவும் சொற்பமே. இன்று தனித்த குரலிசை என்று ஒன்று திரையிசையில் இல்லாமல் போய்விட்ட பின்னரும் இத்தகைய ஆசைகளை அந்தப் பெற்றோர்கள் விடுவதாக இல்லை.
குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், ”நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.
ஏனெனில், அது தற்போது பரிசை நோக்கிய ஓட்டமாக மாறி விட்டது. கலந்து கொள்ளும் தங்கள் குழந்தைகள் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென்று அனைவரும் நினைக்கிறார்கள். எப்படியாவது பரிசுப்பொருளைக் கைப்பற்ற எண்ணுகிறார்கள். பணத்துக்காக எதை வேண்டுமானாலும் விற்கத் தயாராக இருப்பவர்கள் தங்கள் குழந்தையை விற்கத் தயாராகிவிடுகிறார்கள். அதற்காக, விஜய் டிவியிடம் முற்றுமுழுவதுமாகச் சரணடைந்து விடுகிறார்கள். தன் குழந்தை மேடையில் பாடினால், அரங்கில் அமர்ந்தபடி தந்தை நடனமாடுகிறார். பாட்டி எழுந்து குத்தாட்டம் போடுகிறார்.
ஆட்டமும், பாட்டமும் உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருப்பது போன்ற யதார்த்தம் நடுத்தர வர்க்கத்திடம் இல்லை. ஆனாலும் அவர்கள் ஆடுவதும், பாடுவதும் மனித உணர்ச்சிகளை இயல்பாக பண்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை. அது செயற்கையாக தன்னை பிறர் பார்க்க வேண்டும், அப்படி ஆடினால்தான் காமரா தன்னைப் பார்க்கும், தான் அதிகம் பார்க்கப்பட்டால்தான் தனது குழந்தையின் பிராண்ட் இமேஜ் உயரும் என்ற பச்சையான சுயநலமே இத்தகைய ஜோடனைகளைத் தோற்றுவிக்கின்றது.
குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.
இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.
ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.
விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.
குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.
சமூகச் சூழலைப் பற்றி கவனிக்காமல் அல்லது கவலைப்படாமல், சாயப்பட்டறைளிலும், பட்டாசுத் தொழிற்சாலையிலும், டீக்கடைகளிலும் பணிபுரியும் குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தைத் தொலைத்து விடுவதாகவும், குழந்தை தொழிலாளிகளை ஒழிக்க வேண்டுமென்றும் கூச்சல் இடும் நடுத்தர வர்க்கத்தின் கண்களுக்கு, விஜய் டிவி குழந்தைகளின் உண்மையான திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தெரிவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இந்த நிகழ்ச்சிக்கு வெளியே, சமூக அரசியல் காரணங்களால் வஞ்சிக்கப்பட்ட எண்ணற்ற குழந்தைகளின் நிலை பற்றி எண்ணுவதற்குக் கூட இவர்களுக்கு நேரமிருப்பதில்லை.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – விஜய் டி.வி.யின் அடுத்த சுரண்டல் ரெடி
குரங்காட்டியிடம் மாட்டிய குரங்குகளுக்குக் கூட சுதந்திரமிருக்கும். ஏர்டெல் சூப்பர் சிங்கருக்காக விஜய் டிவியிடம் மாட்டிய குழந்தைகள் நிலை அதைவிடப் பரிதாபம். போட்டியாளராகிவிட்டால், பள்ளிக்கூடத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் மட்டம்தான். ஏதோ வானத்திலிருந்து குதித்தது போல, பள்ளிக்கூடங்களும் குழந்தைகளுக்கு விடுமுறை கொடுத்து அனுப்பி விடுகின்றன. போட்டி முடிந்து விட்டாலோ, அடுத்த சீசன் தொடங்கி விடுகிறது. அடுத்த பலியாடு மாட்டும் வரை, விஜய் டிவி எங்கெல்லாம் நிகழ்ச்சி நடத்துகிறதோ அல்லது ஆட்டம் பாட்டம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த வெற்றியாளர்கள் சென்று நிகழ்ச்சி நடத்த வேண்டும். கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போலவே விஜய் டிவி இந்த வெற்றியாளர்களைத் தமது பிரச்சாரப் பீரங்கிகளாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. இலவசமாகக் கிடைத்த விளம்பரத்தை மனதில் கொண்டோ அல்லது விஜய் டிவிக்கு காட்ட வேண்டிய நன்றி விசுவாசத்தை நினைத்தோ, வெற்றியாளர்கள் இதனை மறுத்துப் பேசவும் முடியாது.
முதலாளித்துவ சமூகத்தில், பண்டங்களை சந்தைப்படுத்துவதற்கே ஊடகங்கள் தேவை. சந்தையில் பலியிட தங்கள் குழந்தைகள் பண்டங்களா என்பதை பெற்றோர்கள் சிந்திக்கட்டும்.
_____________________________________________
– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012
எல்லாம் யாழ்பாணத்தில்தான் பிறக்கோணும் எண்டாள் அதுக்கு நாங்களா பொறுப்பு…?
That is right. It is like the Bruce Springstein song, Born in the USA. Then again Dr. Kumar David is right in that Jaffna Man cannot fool all the people all the time.
இந்தப் பதிவே தவறானது, றோசாப்பூக்களை மறைத்துவிட்டு முட்செடிகளை மட்டுமே விமர்ச்சனம் செய்கிறது. அதாவது விடுதலைப்போராட்டத் தலைமையைக் காட்டிக்கொடுத்து அழித்துவிட்டு விடுதலையைத் தேடும் தமிழனைப்போல.
றோசாப்பூ.. முள்செடி.. எல்லாம் ஓரமா இருக்கட்டும் கடசியா என்ன படம் பார்த்தநீங்கள் ?
நான் கடைசியாக பார்த்தது சனல் 4, முள்ளிவாய்க்கால் பேரவலம். அதன் தாக்கத்திலிருந்து விடுபடும் முயற்சியில் இப்போது கேட்பது சூப்பர் சிங்கர் சிறுவர்களின் இசை. அது மனதிற்கு இதமாக இருக்கிறது. அங்கு பாடல்கள் பற்றியோ, அதன் பொருள்பற்றியோ கவலைப்படுவதில்லை. இதுதான் உலகம் என்று அறிந்தபின் திரும்பவும் திரைப்படங்களைப் பார்ப்பதற்கும் உத்தேசம்.
……”நான் கடைசியாகப் பார்த்த ( படம் ) து , சனல் 4 ” … பாவம் ஓணான் 🙂 உங்களின் இந்த மாதிரியான பதிலைநிச்சயம் எதிர்பார்த்திரிக்க மாட்ட்டார். எமது வீரம்செறிந்தவிடுதலைப் போராட்டம் , அவருக்கு விவேக் காமேடி மாதிரி. ஓணானது பதில்களை வாசித்தாலே எமக்குப் புரிந்துவிடும். தமிழனின் முதல் எதிரி தமிழனே. முதலில் தமிழன் , தமிழனிடமிருந்து விடுதலை பெறவேண்டும். அது சாத்தியாமாகாமல், எமக்கு விடுதலை கஸ்டமே.
There is a Ms. Shiromi Sabaratnam and she has made that clip. It made Vimukyji Kumaranatunga feel sick too.
நான் பொதுவாக தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் இல்லாதவன்.அவ்வபோது நிகழ்ச்சி பார்க்க எண்ணினால் ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்பதுண்டு.அதிலும் ஜூனியர் சூப்பர் சிங்கர் என்னோட சாய்ஸ்.சின்னக் குழந்தைகளின் மழலைக் குரலில் நான் மயங்கிப்போவதுண்டு.சின்னக் குரல்களின் சிலிர்ப்பில் இந்த உலகத்தை மறந்து வேறோர் உலகத்தில் லயிப்பதுண்டு.குழந்தைகள் குறைபாடாக பாடினால் கூட அந்த மழலைக் குரலின் மயக்கம் நம்மை விட்டு மங்குவதில்லை.
Ethiraj Anbarasan – BBC, Anjali Rao – CNN, Reza Sayeah – CNN, Mallika Kapur – BBC, and Tim Friend Al Jazeera. We are in tune with world – Linda Ellerbee – NBC.
“நான் கடைசியாக பார்த்தது சனல் 4இ முள்ளிவாய்க்கால் பேரவலம். அதன் தாக்கத்திலிருந்து விடுபடும் முயற்சியில் இப்போது கேட்பது சூப்பர் சிங்கர் சிறுவர்களின் இசை. அது மனதிற்கு இதமாக இருக்கிறது. ”
இதுவே முதலாளித்துவ ஊடகங்களின் வெற்றி. உங்களை உங்கள் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்பி விட்டார்கள்.
You have to wait and see whio is the next Army Commander. Major General Mahinda Haturusinghe (Palaly)) or Major General Chargie Galage. (Mulaitivu). Cerimonial army became a battle hardened army.
அழகான அந்தப் பனைமரம் பாடலைத்தந்த கவிஞர் காசியானந்தனும், அதனைப்பாடிய தேனிசைச் செல்லப்பாவும் மண்ணை நினைத்து நாங்கள் வாழ்வதை மறக்கடித்து கள்ளை நினைத்து வாழும்படி எங்களைத் திசை திருப்பி விட்டதாகவும் பொருள்கொள்ள முடியும். இதுவும் முதலாளித்துவ ஊடகங்களின் வெற்றியென்று கூறவும் முடியும். என்னிடம் எனக்கு நம்பிக்கை இல்லாதபோது பிறரிடம் நம்பிக்கை தோன்றாது.
Kasi Ananthan the Kathamuthu Sivananthan of Amirthakali, Batticaloa, became very famous. We will also be very proud of him. His writings sent other peoples kids to the grave yard,
விஜை தொலைகாட்சி நடத்தும் நிகழ்ச்சிகளில் முட்கள் நிறைய இருந்தாலும் பூக்களும் நிறையவே உள்ளன நாங்கள் எதற்காக முட்களை மட்டுமே நோக்கவேண்டும் எனக் கேட்டிருந்தேன். ஆனாலும் முன்பு விதி என்றவர்கள் இப்போது வர்க்கபேதங்களை சுட்டிக்காட்டி, முதலாளி வர்க்கம் மக்களை திசைதிருப்பிவிடுவதாக ஆதங்கப்படுகிறார்கள். குன்றிமணிகள் தேவைப்படும்போது குப்பையையும் சேர்த்து அள்ளவேண்டிய தேவை என்ன?. குப்பையையும் சேர்த்துத்தான் அள்ளவேண்டுமெனில் உலகத்தால் போற்றப்படும் நல்லவைகளிலிருந்தும் அள்ளமுடியும் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே தமிழர்களுடைய நெஞ்சங்களை எல்லாம் நிறைந்து அரவணைக்கும் பாடலான அழகான அந்தப் பனைமரம் என்ற பாடலிலும் முள்ளைக் கண்டுகொள்ளமுடியம் எனத் தெரிவித்திருந்தேன். பாடலைத்தந்த கவிஞர் காசியானந்தனின் திறமையில் குறைகண்டு எழுதவில்லை. அந்தக் கவியிடம் குறைகாணும் தகுதியும் எனக்கில்லை.
I heard Kasi Ananthan is doing well running a press. His two daughters are both medical doctors. He has come to Wanni with Pala Nedumaran.