நாடளாவிய ரீதியில் தாதிகள் அரசிற்கு எதிராக இன்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தி;ன் ஓர் அங்கமாக யாழ் மாவட்டத்தை சேர்ந்த தாதியர் உத்தியோகத்தர்களும் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரையான நேரம் தமது அன்றாட பணிகளை இடைநிறுத்திய அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை முன்பதாக சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வைத்தியசாலையின் அன்றாட பணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஸ்தம்பித்திருந்தது.இதேவேளை வட-கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளெங்கும் பரவலாக தாதியர் உத்தியோகத்தர்களின் ஓரு மணி நேர அடையாள பணிபுறக்கணிப்பு இடம்பெற்றிருந்தது. 15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து இன்றைய தினம் தாங்கள் நடத்திய போராட்டத்திற்கு அரசு ஆக்கபூர்வமான தீர்வை தர தவறினால் மீண்டும் எதிர்வரும் 9ம் திகதி போராட்டமொன்றை நடத்தவுள்ளோம்.அதற்கும் ஆக்கபூர்வமான தீர்வு கிட்டாவிடின் 15ம் திகதி சுகாதார அமைச்சு முன் போராட்டங்களை விஸ்தரிக்கவுள்ளோமென ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.சம்பள உயர்வு மற்றும் பதவியுயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை இத்தரப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன.
இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தாதிகளின் போராட்டங்கள் இடம்பெற்றன. ராஜபக்ச குடும்ப அரசைப் பலவீனப்படுத்தும் இவ்வாறான போராட்டங்களிலிருந்து புதிய அரசியல் தலைமை உருவாகும் சாத்தியங்கள் தென்படுவதாக இலங்கையிலிருந்து அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்தார்.