யாழ்ப்பாணத்திற்குத் தமிழ்நாட்டில் இருந்து உணவுப் பொருட்கள்

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக விலையுயர்வுடனான பொருள் தட்டுப்பாட்டை நீக்க இலங்கை அரசாங்கம் மாற்று வழியை யோசித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதில் அதிக செலவீனங்கள் ஏற்படுவதன் காரணமாகத் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்குப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கூற்றுப்படி நேற்று இதற்கான அனுமதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழங்கியுள்ளார். இதேவேளை பொருட்களின் விலைகளை இதன் மூலம் குறைந்தளவில் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்ய முடியும் என்பதுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களுக்குத் தமது பொருட்களை அனுப்புகிறோம் என்ற உணர்வு தமிழக மக்களுக்கும் ஏற்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தமது உற்பத்திப் பொருட்களை மன்னாரின் ஊடாகத் தென்னிலங்கைச் சந்தைக்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பனை உற்பத்தியாளர்களும் மீனவர்களும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.