இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின் போது மோடிக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று இந்திய அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அவரை வரவேற்க அமெரிக்க அரசின் சாதாரண அதிகாரிகளே விமான நிலையம் வந்ததோடு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளைமாளிகைக்கு வெளியில் வந்து கூட வரவேற்கவில்லை. ஓவல் இல்லத்திற்கு மோடியை வரவழைத்து பேசி அனுப்பி வைத்தார்.
ஆனால், மோடியின் இந்துத்துவ பரிவாரங்களும்தான் மோடியின் அமெரிக்க பயணத்தை வைத்து பொய்யான செய்திகளை பரப்பி வந்தனர். அந்த பொய்களில் ஒன்றுதான் ‘உலகின் சிறந்த இறுதி’ நம்பிக்கை என்று மோடியை புகழந்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளதாக பரப்பி வந்தனர். இது போலியான செய்தி என பலரும் சுட்டிக்காட்டிய போதும் பாஜக தொண்டர்களும் சில தலைவர்களும் கூட இதை பரப்பி வந்தனர்.
பிரதமர் மோடியின் புகைப்படத்துடன், ‘உலகத்தின் சிறந்த இறுதி நம்பிக்கை‘ என்ற தலைப்பில் ‘தி நியூயார்க் டைம்ஸ்‘ பத்திரிகையில் செய்தி வெளியானதாக பரவும் புகைப்படம் போலியானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸின் ட்விட்டர் பக்கத்தில், ”இது முற்றிலும் புனையப்பட்ட புகைப்படம். உண்மையான நம்பகத்தனமான செய்திகள் தேவைப்படும் சூழலில், ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களை ஆன்லைனில் மறுபகிர்வு செய்வது அல்லது பரப்புவது நிச்சயமற்ற தன்மையை மட்டுமே உருவாக்கும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
மோடி அமெரிக்காவில் இருந்த போது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை கொரோனாவை கையாளத்தவறியது, இந்தியாவில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பாக செய்திகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.