தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியை இழிவு படுத்தி விட்டதாக பாஜக பிரமுகர்கள் கோரிக்கை வைத்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஒரு ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில், பாரத பிரதமர் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி மத்திய இணையமைச்சர் முருகன் அவர்கள் கேட்டறிந்தார் என்றும் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.
அண்ணாமலை பதிவிட்ட பின்னர்தான் அது என்ன நிகழ்ச்சி என அனைவரும் தேடினார்கள். அதன் பின்னர்தான் தெரிந்தது. அது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான சிறுவர்கள் நிகழ்ச்சி என்று. அதில் மன்னரைப் போல ஒரு சிறுவனும், அவரது படைத்தளபதி போல ஒரு சிறுவனும் நடத்திருந்தனர். அதில் மன்னன் பொற்காசுகள் (மோடி 15 லட்சம் தருவேன்) என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்பது போன்று கிண்டல் செய்ததோடு, மோடியின் ஏழாண்டுகால ஆட்சியை கிண்டல் அடித்து கைதட்டல் பெறுகிறார்கள். மேலும் தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் மோடிக்கு நிலவும் எதிர்ப்பையும் நகைச்சுவையாகப் பேசுகிறார்கள். இந்த காணொளி இப்போது வைரலாகி வருகிறது.
இந்த விடியோ சிலரது பார்வையோடு முடிந்து போயிருக்கும் ஆனால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிக்க இப்போது ஆயிரக்கணக்கானவர்கள் அந்த விடியோவை பகிர்ந்து சிறுவர்கள் பாராட்டி வருகிறார்கள் . இதற்கிடையில் மத்திய அரசிடம் பேசி அந்த தனியார் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பாஜக தலைவர்கள் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.