பயங்கரவாத்திற்கு எதிரான போராட்டம் என்ற தலையங்கத்தில் உலகம் முழுவதும் இராணுவ மயப்படுத்தப்பட்டு மக்களின் சிவில் உரிமைகளை ஏகபோக அரசுகள் பறித்துக்கொண்டன. மக்கள் ஒன்று கூடுவதற்கும் போராடுவதற்குமான உரிமைகள் கூட அழிக்கப்பட்டுள்ளன. ஏனைய நாடுகளில் பயங்கரவாத்தைத் தோற்றுவித்து பின்னர் அதற்கு எதிரான போர் என்று ஆக்கிரமித்துக்கொண்ட அமரிக்க தலைமையிலான ஏகபோக நாடுகள் இன்று தமது நாட்டின் எல்லைக்குள்ளேயே மக்களின் அடிப்படை உரிமைகளைத் பறித்துக்கொள்ள திட்டமிடுகின்றன.
எதிர்வரும் வருடங்களில் பொருளாதார அழிவைச் சந்திக்கும் என்று எதிர்வுகூறப்படும் நிலையில் அமரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளில் மக்கள் போராட்டங்களும் அரசியல் எழுச்சிகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. இவற்றை அழிப்பதற்கு புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன. பொஸ்டன் குண்டுவெடிப்பு மற்றும் சாண்டி ஹூக் படுகொலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் அரசுகள் மக்கள் எதிர்ப்பின்றியே மக்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை உருவாக்கிக்கொள்கின்றன.
பொஸ்டன் குண்டுவெடிப்பைக் காரணம்காட்டி கனடாவில் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்காக ஹார்பரின் அரசு முன்மொழிந்துள்ளது. கைது செய்வதற்கும் விசாரணையின்றி சிறையிலடைப்பதற்குமான அதிகாரங்களைப் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கவேண்டும் என்று கடந்த திங்களன்று கனேடியப் பாராளுமன்றத்தில் விவதிக்கப்பட்டது.