ரோகோ(TOGO) என்பது மேற்கு ஆபிரிக்காவின் சந்தி போன்று காணப்படும் அழகான நாடு. அதன் வளங்களைச் சுரண்டுவதற்காக பிரன்ஸ் அந்த நாட்டை அடிமைப்படுத்தி தனது காலனியாட்சியை நடத்திற்று. பெனின், கானா, போர்கின பாசோ போன்ற நாடுகளால் சுழப்பட்ட, வறிய நாடுகளில் ஒன்றான ரோகோவில் ஈழத் தமிழ் அகதிகள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக வாழ்க்கை நடத்துகின்றனர்.
சிலருக்குப் புலம்பெயர் நாடுகளிலிருந்து அவ்வப்போது பணம் அனுப்பப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் அடுத்த வேளை உணவிற்கே வழியற்ற நிலையில் சிறிய தொழில்களைச் செய்து வருகிறார்கள். பயண முகவர்களால் ஏமாற்றப்பட்டு ரோகோ நாட்டில் கைவிடப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வன்னியில் இறுதி இனப்படுகொலைக் காலத்தில் வாழ்ந்தவர்கள். பணம் கொடுத்துத் தப்பிவந்து அனாதரவாக விடப்பட்டவர்கள். இனிமேல் இலங்கை அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லைக்குள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்ட இவர்களுக்கு ஆதரவாக புலம்பெயர் அமைப்புக்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தில் (UNHCR) பதிவிசெய்துள்ள இந்த அகதிகள் எந்த வேளையிலும் இலங்கை அரசின் கொலைக் கூண்டிற்குள் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்திலேயே வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
மலேசியாவில் UNHCR இனால் அகதியாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பபட்ட பின்னரும் அந்த அமைப்பு சட்ட நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. முள்ளிவாய்க்காலில் காப்பாற்றுகிறோம் என்று நம்பவைத்து ஒரு லட்சம் மக்களை கொலைசெய்ய உதவிய இந்த அமைப்புக்கள் இப்போது அகதிகளை வேட்டையாட அனுமதிக்கக் கூடாது.
UNHCR இற்கு எதிரான போராட்டம் எதிர்வரும் வெள்ளியன்று 6ம் திகதி லண்டனில் ஒழுங்கு செய்ய்யப்பட்டுள்ளது. அனைவரையும் பங்குகொள்ளுமாறு அழைக்கிறோம்.