உலகச்சந்தையில்
நிலத்திலும் புலத்திலும்
மேய்ப்பனான மேய்த்தவனை
உயிருடன் கூறுபோட்டபின்
போட்டிபோட்டு ஏலத்தில் விட்டு
எதிரிக்கே வித்த விசநரிகள்- இன்றும்
விடுதலை-யைக்காட்டி
மேய்பனைத் தேடுகிறார்கள்
மீண்டும் மேய்வதற்காய்
மேய்ப்பவன்
மேய்தது ஒருகாலம்
மேய்த்தவனையே மேய்தபின்
மேய்பன் வருவான் என்று
இன்றும் புல்லைக்காட்டி
வரண்டுபோன பாலைவனத்தில்
இன்றும் மேய்க்கிறார்கள்.
விடுதலை வியாபாரத்தில்
நன்றாக நயம்கண்ட
தந்தையும் தனையனும்
அண்ணனும் தம்பியுமாய்
தம்பி வருவானென
கடைவிரித்துக் காத்திருக்கிறார்கள்
காய்ந்த புல்லைக்காட்டி
மீதிப்பாலையும் கறப்பதற்காக.
கொன்று தின்னும்
புலியென்று தெரிந்தும்
விடுதலைப்பசியால்
பின்னாலே மேயப்;போயின செம்மறிகள்.
செம்மறியாடுகள்
மேய்க்கப்பட்டன புலிகளால்
அப்புலிகளையே விலைக்கு வித்து
மேய்தார்கள்
புலித்தோல் போர்த்த நரிகள்.
புலியின் பெயருள்ளவரைதான்
பிள்ளைப்பு என்பதால்
தம்பி சாகமாட்டான்
முகவரி அழிந்துவிடாதிருக்க
புலிசெத்தபின்னரும்
புலிவேட்டையாடுகிறார்கள்
புலி வலிப்புக்காரர்கள்
துரைப்பருக்குப் பொன்னாலையில்
தீபம்காட்டித் புறப்பட்ட பயணம்
நந்தி தடுத்தும்
நந்திக்கடலில் முழுகி
பிண்டம் வைக்கும் வரை
விடுதலை மேய்க்கப்பட்டது.
விட்டதலைகள் போக
விடாத்தலைகள்
விடுதலை வியாபாரத்தை
புலித்தலை போட்டுத் தொடர்கின்றன.
புல்லுத்தின்னும் புலியை கொண்டு
புலிவேட்டையாடியது
சுணைகெட்ட சொத்திச்சிங்கம்.
காட்டிலும் நாட்டிலும்
புலியோ….சிங்கமோ
சாவது செம்மறிகள்தான்.
புலியை நக்கி நக்கி
கொழுத்த நரிகள்
புல்லைக் கூடத்தின்று
சிங்கப்பால் குடித்துக்கொழுக்கின்றன
சிங்கத்தின் நாளைய நடுநிசி
போசனத்துக்காய்
-நோர்வே நக்கீரா