காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகள் தவிர்த்த மூன்றாவது அணி உருவாகி, அதன் தலைமையிலான ஆட்சியை இந்த நாடு சந்திக்கும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறினார்.
சந்தர்ப்பவாத அரசியலின் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதால், ஆட்சியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ. அரசை எதிர்த்து நாடு தழுவிய தொடர்ச்சியான போராட்டங்களை இடதுசாரிக் கட்சிகள் நடத்தவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
மத்தியில் அளும் ஐ.மு.கூட்டணி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதில் இந்த அரசு அடைந்துள்ள தோல்விகளைச் சுட்டிக் காட்டியும் நாங்கள் (இடதுசாரிகள்) மற்றும் எங்களுடன் ஒத்த கருத்துடைய 10 கட்சிகள் இணைந்து நாடு தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார் ராஜா.
பண பலத்தைப் பயன்படுத்தி ஆதரவு திரட்டும் போக்கு காங்கிரஸ் கட்சியில் சமீபகாலங்களில் அதிகரித்துள்ளது என்று குற்றம்சாற்றிய ராஜா, “இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைமையில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகள் தவிர்த்த மூன்றாவது அணி உருவாகி, அதன் தலைமையிலான ஆட்சியை இந்த நாடு சந்திக்கும்” என்றார்.