மூதூர் படுகொலை விசாரணை : பிரான்ஸ் நீதிபதிகள்

இலங்கை  அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட மூதூர் படுகொலைகயை விசாரணை செய்வதற்கு பிரான்ஸ் அரசு, நீதிபதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் பட்டினிக்கு எதிரான அமைப்பின் ஊடகத்துறை அதிகாரி லூசிலி குறோஸ்ஜூன் தெரிவித்துள்ளதாவது:திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பகுதியில் 2006 ஆம் ஆண்டு பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த பணியாளர்கள் மீதான படுகொலைகளை விசாரணை செய்வதற்கு பிரான்ஸ் அரசு நீதிபதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.ஜூலை மாதம் தொடக்க காலப்பகுதியில்  இலங்கையைச் சென்றடைந்த நீதிபதி, அங்கு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார். இங்கு மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பான அறிக்கையை அவர் பிரான்ஸ் அரசிற்கு எதிர்வரும் மாதம் சமர்ப்பிக்கவுள்ளார்.

நீதிபதி பிரான்ஸ் திரும்பிய பின்னர், பிரான்ஸ் அரசு இது தொடர்பில் தனது கூட்டணி நாடுகளுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதுடன், இந்த கலந்துரையாடல்களின் பின்னர் படுகொலை தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் தேவையா என்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும்.

பிரான்ஸ் அரசும் பட்டினிக்கு எதிரான அமைப்பும் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக நீதிபதியின் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மூதூர் படுகொலைகள் தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுப்பதாக பிரான்ஸ் அரசு எமது அமைப்புக்கு உறுதி அளித்துள்ளது என்றார்.