கொழும்பிலும், நாடு முழுக்கவும் தமிழ், முஸ்லிம் மக்களை பயமுறுத்தி இனி யாரும் இனவாத அரசியல் நடத்த முடியாது
கொழும்பில் இனவாத பயமுறுத்தலை விடுத்து இனவாத அரசியல் செய்வதை சம்பிக்க ரணவக்க நிறுத்த வேண்டும். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான எந்த ஒரு இனவாத நடவடிக்கையையும், நாம் முற்போக்கு சிங்கள சக்திகளுடனும், சர்வதேச சமூகம் மற்றும் ஐநா சபையுடனும் சேர்ந்து முறியடிப்போம்.
ஒருபக்கம் தமிழ், முஸ்லிம் மக்களை பயமுறுத்தி, மறுபுறம் சிங்கள மக்களுக்கு 13ம் திருத்தம், மாகாணசபை முறைமை, அதிகார பகிர்வு கொள்கை ஆகியவை பற்றி திரித்து பேசி பொய்யான தகவல்களை தந்து தங்கள் இனவாத அரசியலை ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, தேசிய தேசப்பற்று இயக்கம், பொதுபல சேனா, இராவண சேனா ஆகிய அமைப்புகளின் இனவாத கூட்டு நடத்தி வருகின்றது. இந்த கூத்துகளை நாம் நடத்தும் எமது அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் மூலமாக படிபடியாக முறியடித்து வருகின்றோம்.
எனவே பழைய இனவாத வரலாற்றை தலைநகரிலும், நாட்டில் எந்த பகுதியிலும் இனி எவரும் திரும்பவும் எழுத முடியாது. நாம் வந்த வழியில் திரும்பி மீண்டும் பயணிக்கவும் முடியாது. அதற்கு என் உயிர் போனாலும் இடந்தரமாட்டேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
13ம் திருத்தம்
13ம் திருத்தம் தொடர்பாக சிங்கள மக்களுக்கு இந்த இனவாத கூட்டு பொய்யான தகவல்களை தந்து வருகிறது. மாகாணங்களுக்கான போலிஸ் அதிகாரம் பற்றி திரித்து பேசுகின்றார்கள். போலிஸ் மாஅதிபர் கொழும்பில் இருந்து ஒரு போலிஸ் விசாரணை குழுவை மாகாணங்களுக்கு அனுப்புவதற்கு குறிப்பிட்ட மாகாண முதலமைச்சரின் அனுமதியை பெற வேண்டும் என சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் நாடு முழுக்க சென்று சொல்லி வருகின்றார்கள்.
இது அப்பட்டமான பொய். 13ம் திருத்தத்தின் சட்டம் ஒழுங்கு அதிகாரத்தின் 11:2:B பிரிவின் படி ஜனாதிபதி விரும்பினால் நாட்டின் எந்த ஒரு மாகாணத்தின் எந்த ஒரு பகுதிக்கும் தேசிய போலிஸ் படையணியை அனுப்பி வைக்கலாம். இதற்கு அவர் முதலமைச்சரின் அனுமதியை பெற வேண்டியது இல்லை. முதல்வருடன் கலந்துரையாட மட்டுமே சட்டம் வலியுறுத்துகிறது. அதேபோல் 12:4:B பிரிவின் படி தேசிய போலிஸ் மாதிபர், தான் விரும்பும் பட்சத்தில் முதலமைச்சருக்கு அறிவித்து விட்டு எந்த ஒரு மாகாணத்தின் எந்த ஒரு பகுதிக்கும் தேசிய போலிஸ் விசாரணை குழுவை அனுப்பி வைக்கலாம். இதற்கு முதல்வரின் அனுமதி அவசியம் இல்லை. முதல்வருடன் கலந்துரையாட மட்டுமே சட்டம் வலியுறுத்துகிறது. தேசிய அரசின் சட்ட மா அதிபரின் அனுமதி மட்டுமே தேவை.
அதாவது ஜனாதிபதியோ அல்லது போலிஸ் மாஅதிபர் இலங்ககோனோ, முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு அறிவித்துவிட்டு, தேசிய போலிஸ் விசாரணை குழுவையோ, படையணியையோ வட மாகாணத்துக்கு எந்த வேளையிலும் அனுப்பலாம். முதலமைச்சரின் அனுமதி பெறவேண்டும் என்று13ம் திருத்த சட்டத்தில் எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை.
சட்டத்தில் இல்லாததை சொல்லி சிங்கள மக்களை பிழையாக வழி நடத்துவதை நிறுத்திவிட்டு முடியுமானால், நான் சொல்வது பிழை என்று நிரூபிக்கும்படி இந்த இனவாத கூட்டுகாரர்களுக்கு நான் சவால் விடுக்கின்றேன்.
பண்டா-டட்லி-செல்வா ஒப்பந்தங்கள்
இந்தியாவும், அமெரிக்காவும் வந்துதான் இந்த நாட்டில் அதிகாரம் பகிரும் கொள்கையை அறிமுகப்படுத்தினார்கள் என இந்த இனவாத கூட்டு சொல்கிறது. இதுவும் பொய்.
1950 களிலும், 1960 களிலும் இந்த நாட்டின் இரண்டு பிரதமர்கள், இந்த நாட்டின் தமிழர் தலைவருடன் ஒப்பந்தம் செய்தார்கள். இந்த ஒப்பந்தத்தில் வடக்கு, கிழக்கில் நிர்வாக மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் தமிழ் மொழி இருக்க வேண்டும் என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்களில் பிராந்தியங்கள் உருவாக உடன்பாடு ஏற்பட்டது. வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் பிராந்தியங்கள் விரும்பும்பட்சத்தில், மாகாண எல்லையையும் மீறி இணைந்துகொள்ள உடன்பாடு ஏற்பட்டது.
வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக அன்று தொட்டு வாழ்வதையும், அங்கு தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், தமிழ் பிராந்தியங்கள் விரும்பினால் இன்றுடன் ஒன்று இணைந்து ஒரே பிராந்தியமாக செயல்படக்கூடிய தேவைபாட்டையும் பண்டா, டட்லி ஆகியோர் ஏற்று கொண்டு இருந்துள்ளார்கள். அதாவது இன்றைய வடகிழக்கு இணைப்பு பற்றிய தேவைப்பாடும்
அன்று பேசப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அந்த வேளையில் இந்தியா அரசாங்கம் இங்கே வந்து தலையிட்டு இந்த ஒப்பந்தங்களை செய்யவில்லை என்பதை சிங்கள மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த நாட்டுக்கு அதிகாரப்பகிர்வு கொள்கையை கொண்டு வந்தது இந்தியா அல்ல. அதிகாரப்பகிர்வை பற்றி பேசியதும், ஒப்பந்தம் செய்ததும் பிரதமர் பண்டாரநாயக்கா என்பதை சிங்கள மக்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன். எனவே இந்த இனவாத கூட்டிற்கு இந்த விடயம் தொடர்பாக யாரையாவது திட்டி தீர்க்க வேண்டும் என்றால் அவர்கள் பிரதமர் பண்டாரநாயக்காவை தான் திட்ட வேண்டும். அதற்கு முன்னால் இன்றைய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் பண்டாரநாயக்காதான் என்பதையும் இவர்கள் மனதில் கொள்ள வேண்டும். .
எனவே இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களை பயமுறுத்தி சிங்கள மக்களுக்கு பொய் கூறி அரசியல் செய்வதை இனவாதிகள் நிறுத்த வேண்டும். கொழும்பில் இனவாத பயமுறுத்தலை விடுத்து இனவாத அரசியல் செய்வதை சம்பிக்க ரணவக்க நிறுத்த வேண்டும். தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான எந்த ஒரு இனவாத நடவடிக்கையையும், நாம் முற்போக்கு சிங்கள சக்திகளுடனும், சர்வதேச சமூகம் மற்றும் ஐநா சபையுடனும் சேர்ந்து முறியடிப்போம் என்பதை இவர்களுக்கு நான் கூறிவைக்க விரும்புகிறேன்.