முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் முகமாக ஈழத்தமிழர் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியும் தோழமை அமைப்புக்களும் எழுச்சி நிகழ்வுகளை ஏற்பாடுசெய்துள்ளன. இது குறித்து மாணவர் அமைப்பு வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:
அன்பார்ந்த மாணவர்களே – உழைக்கும் மக்களே!
2009 மே 17 -ல் ஈழ விடுதலைப் போர் மிகக் கொடிய பேரழிவைச் சந்தித்துக் கசப்பானதொரு முடிவை எட்டியது. முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிகட்டப்போரில் மே 17-ம் தேதி விடுதலைப்புலிகளின் அமைப்பு ஏறத்தாழ அழித்தொழிக்கப்பட்டது. இதோடு சேர்த்து மே-18,19 தேதிகளில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
கொட்டகைகள், கூடாரங்கள், பதுங்குக் குழிகள் என 3 சதுர கி.மீ. பரப்பளவில் சிக்கித் தவித்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு போர்த் தாக்குதலை நடத்தி ஈவிரக்கமின்றி கோரமாகக் கொன்றொழித்தது, இனவெறி பிடித்த சிங்கள பாசிச அரசு. சூடானின் டார்ஃபுரில் நடந்த இனப்படுகொலையை ஒத்ததாக நடந்துள்ள ஈழத் தமிழினப் படுகொலையில், 2009 மே முதல் நாளிலிருந்து 19-ம் தேதி வரை நாளொன்றுக்குச் சராசரியாக 1,000 பேர் வீதம் குண்டு வீச்சினால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இந்நாட்களில் மட்டும் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த “தி டைம்ஸ்” நாளேடு கூறியது. இச்செய்தி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனை நினைவு கூர்வதன் மூலம் ஈழத் தமிழ் மக்கள் தமது தன்னுரிமைக்கான போராட்டத்தை தொடர்வதற்கு துணை நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமை.
சிங்கள குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க குறுக்குவழித்தீர்வு ஏதுமில்லை!
ஈழத்தமிழின மக்களின் தன்னுரிமையை நிலைநாட்ட குரல்கொடுப்போம்!
தமிழகத்தில் சிறப்பு அகதிமுகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலைசெய்யப் போராடுவோம்!
இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு குறைவாக எதையும் ஏற்க மறுப்போம்!
மே 17, 2013 அன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்கள்
சென்னையில்
இடம்: வள்ளுவர்கோட்டம்,
நேரம் : காலை 11 மணி
இவண்
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தொடர்புக்கு : 95661 49374