Sunday, March 15, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

முள்ளிவாய்க்காலில் கழுத்தறுத்த ‘மர்ம’ நபர் – சேரமான்

இனியொரு... by இனியொரு...
03/26/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
21
Home பிரதான பதிவுகள் | Principle posts

ஈழமுரசு – பத்திரிகையில் வெளியான இவ்வாக்கம் சங்கதி இணையத்தில் மறு பிரதியாக்கம் செய்யப்பட்டிருந்தது. சம்பவங்கள், அவற்றிற்கான ஆதரங்கள், அவற்றின் உண்மைத் தன்மை போன்ற புலனாய்வு ஊடக முறைமைக்கு அப்பால் இச்சம்பவத்தை மையப்படுத்தி கடந்த வாரம்  வெளியான பல கட்டுரைகளின் பின்னணியில் இழையோடும் அரசியலின் பொதுத் தன்மை கவனிக்கத்தக்கது. விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு உறுதியான அரசியல் எதுவுமற்ற வெற்று இராணுவக் குழுவாகவும்,  மர்மம் சூழந்த,  மக்களிலிருந்து அன்னியமான சாகசக் குழுவாகவுமே 30 வருடங்களைக் கடத்தியிருக்கிறது. பிரதான விடுதலை இயக்கங்கள் அனைத்துமே இந்த எல்லைக்குள்ளேயே தமது அரசியலை முன்னெடுத்தன. உலகெங்கும் மக்கள் திரள் அமைப்புக்கள் சார்ந்த அரசியல் வெற்றிபெறும் புதிய சகாப்த்தத்தில் பழமைவாத அரசியல் வரம்புகளுக்கு வெளியில் விஞ்ஞானபூர்வமான உலகப்பார்வையின் அவசியத்தை இச்சம்பவங்கள் வலியுறுத்துகின்றன.

 

வன்னிப் போரின் இறுதிக் கணங்களில் போராளிகளையும், மக்களையும் மீட்பதற்கு அமெரிக்கப் படைகள் வரும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளை ‘நம்பவைத்துக் கழுத்தறுத்த’ மர்ம நபர் தொடர்பாக அண்மைய வாரங்களாக இணைய ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இந்த மர்ம நபர் என்றும், வழுதி என்ற பெயரில் புதினம் இணையத்தளத்தில் இவரே கட்டுரைகளை எழுதினார் என்றும் சில இணைய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அமெரிக்காவில் வசிக்கும் வழுதி எனப்படும் குறிப்பிட்ட கட்டுரையாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராக விளங்கியது உண்மையாக இருந்தாலும்கூட, தமிழீழ விடுதலைப் புலிகளை நம்பவைத்துக் கழுத்தறுக்கும் அளவிற்கு இயக்கத்தில் முக்கியமான பொறுப்புக்கள் எவற்றையும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த நபர் வகித்ததில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்துடன் ஒட்டிஉறவாடியவர் போன்ற தோற்றப்பாட்டை தனது கட்டுரைகள் ஊடாக இவர் வெளிப்படுத்தியிருந்தாலும்கூட, தமிழீழ விடுதலைப் புலிகளின் நான்கு தசாப்தகால வரலாற்றை எழுதுவதற்கும், விமர்சிப்பதற்கும் தகுதியுடையவராக இவர் விளங்கியதில்லை.

ஏறத்தாள ஐந்து ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ இதழான ‘விடுதலைப் புலிகள்’ பத்திரிகையின் துணை ஆசிரியராக விளங்கிய இந்த நபர், கள அனுபவமேதும் அற்றவர். 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜெயசுக்குறு எதிர்ச்சமரில் அரசியல்துறைப் போராளிகள் அனைவரும் களமிறக்கப்பட்ட பொழுது முதலும் இறுதியுமாக சண்டைக்கள அனுபவத்தைப் பெற்றவர் இவர். ஜெயசுக்குறு எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்த இவர், பாரிசவாதத்திற்கு ஆளாகிய நிலையில் இயக்கத்தை விட்டு விலகி அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்தார்.

அங்கு இயங்கிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் கருணாகரன், சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் ஆகியோருடன் தொடர்புகளைப் பேணி வந்த இவர், இறுதிப் போரின் பொழுது கே.பியின வழிநடத்தலில் உருத்திரகுமாரனின் உதவியாளராக செயற்பட்டு வந்தார். சில இணைய ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போன்று அமெரிக்காவில் உள்ள கல்விமான்களுடனோ, அன்றி கொள்கை வகுப்பாளர்களுடனோ இவருக்கு நேரடித் தொடர்புகள் எதுவும் இருந்ததில்லை.

உருத்திரகுமாரனின் உதவியாளர் என்ற வகையிலும், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், விடுதலைப் புலிகள் பத்திரிகையின் ஆசிரியர் ரவி ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புகளைப் பேணி வந்தவர் என்ற வகையில் அமெரிக்காவில் உள்ள தமிழ்க் கல்விமான்கள் சிலர் இவருடன் இணைந்து பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சாதாரண நபரைப் பெரிதுபடுத்துவது, இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு துரோகமிழைத்துக் கழுத்தறுத்த உண்மையான குற்றவாளி தப்பித்துக் கொள்வதற்கே வழிவகுக்கும் என்பதால், இந்த நபர் தொடர்பான மேலதிக தகவல்களை இப்பத்தியில் எழுதுவதை தவிர்த்துக் கொள்கின்றேன்.

அப்படியென்றால், இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளைக் கழுத்;தறுத்து ஏமாற்றிய உண்மையான நபர் யார் என நீங்கள் வினவக்கூடும். இந்த நபர் யார் என்பதை வெளிப்படுத்துவதற்கு முன்னர் இறுதிப் போரில் புலம்பெயர் தேசங்களில் நிகழ்ந்தேறிய சில சம்பவங்களை நினைவூட்டுவதும், அதில் முன்னணிப் பாத்திரம் வகித்தோரை அடையாளம் காட்டுவதும் பொருத்தமாக இருக்கும்.

2008 டிசம்பர் மாதத்தின் இறுதிவாரம்: வன்னி மக்கள் மீதான யுத்தத்தை சிங்களப் படைகள் உக்கிரப்படுத்திய காலகட்டம் அது. போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறி தமிழக முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி நாடகமாடி, உணவுப் பொதிகளையும், உடைகளையும் வன்னிக்கு அனுப்பி ஓய்ந்து போக, கிளிநொச்சியை ஆக்கிரமிப்பதற்கான தாக்குதல்களை சிங்களப் படைகள் உக்கிரப்படுத்தியிருந்தன.

இச்சந்தர்ப்பத்தில்தான், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அனைத்துலக தொடர்பகப் பொறுப்பாளர் வீ.மணிவண்ணன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராக கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் அவர்களை நியமிப்பதற்கு தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் நீண்ட தயக்கத்திற்குப் பின்னர் இணங்கியிருந்தார். இது தொடர்பான கடிதம் நோர்வே அனுசரணையாளர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தால் அனுப்பப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து புலம்பெயர் தேசங்களில் உள்ள தனது விசுவாசிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திய கே.பி, அனைத்துலக தொடர்பகத்தின் பரப்புரைப் பிரிவிற்கு சமாந்தரமாகத் தனது விசுவாசிகளைக் கொண்ட பரப்புரைக் குழு ஒன்றை அமைத்திருந்தார். இக் குழுவின் முதன்மை அங்கத்தவர்களாக சட்டத்தரணி உருத்திரகுமாரன், கலாநிதி ஜோய் மகேஸ்வரன், வேலும்மயிலும் மனோகரன், சர்வே தர்மா, செல்வின் ஆகியோர் அங்கம் வகித்தனர்.

இவர்களோடு பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கி வரும் தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றின் நிறைவேற்றுப் பணிப்பாளரின் சகோதரரான அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மருத்துவர் ஒருவரும் இணைந்து செயற்பட்டு வந்தார். இவர்களை விட, 2003ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தால் அனைத்துலக செயலகம் கலைக்கப்பட்டு, அனைத்துலக தொடர்பகத்தின் ஆளுகையின் கீழ் வெளிநாட்டுக் கிளைகள் கொண்டு வரப்பட்ட பொழுது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட கணிசமான நபர்களும் கே.பியின் அணியில் இணைந்து கொண்டனர்.

இவ் அணியின் பொறுப்பாளராக கே.பி விளங்கினாலும்கூட, கே.பியின் இரு கண்களாக உருத்திரகுமாரனும், ஜோய் மகேஸ்வரனும் செயற்பட, அவரது இரு கரங்களாக சர்வே தர்மாவும், வேலும்மயிலும் மனோகரனும் இயங்கத் தொடங்கினர். இதில் குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவின் நண்பரும், 2006ஆம், 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில் மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியவருமான இலண்டனில் வசிக்கும் நபர் ஒருவரை கே.பியிடம் மனோகரன் அறிமுகம் செய்து வைத்திருந்தார். குறிப்பிட்ட நபரும், மத்திய கிழக்கில் தொழில்புரியும் அவரது சகோதரரான கலாநிதி ஒருவரும் கே.பியின் வேண்டுதலுக்கு இணங்க ராஜபக்ச சகோதரர்களுடனும், டக்ளஸ் தேவானந்தாவுடனும் தொடர்புகளைப் பேணி வந்தனர்.

நிரந்தர போர்நிறுத்தத்தின் ஊடாக வன்னி மக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான பொறுப்பு மட்டுமே கே.பியிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தால் வழங்கப்பட்டிருந்த பொழுதும், தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்கு அப்பாற்சென்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு தொடர்பாக கே.பியும், உருத்திரகுமாரனும் வெளிநாட்டு இராசதந்திரிகளுடன் கலந்துரையாடியிருந்தனர்.

2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் கே.பியின் அழைப்பை ஏற்று மலேசியாவிற்கு பயணம் செய்த உருத்திரகுமாரனும், கலாநிதி ஜோய் மகேஸ்வரனும், அங்கு கொழும்புக்கான அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த மூத்த இராஜதந்திரி ஒருவரை, கே.பியுடன் இணைந்து சந்தித்திருந்தனர். தற்பொழுது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சில் முக்கிய பதவியை வகிக்கும் இந்த இராஜதந்திரியுடனான சந்திப்பில், போர்நிறுத்தத்தை விட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவு தொடர்பாகவே கே.பி, உருத்திரகுமாரன், ஜோய் மகேஸ்வரன் ஆகியோர் கலந்துரையாடியிருந்தனர்.

இதில் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைத்து, அவற்றை கொள்கலன்களின் பூட்டிவைப்பது தொடர்பாகவும், பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிங்கள அரசிடன் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைவது தொடர்பாகவும் இவர்கள் கலந்துரையாடியிருந்தனர். இது சாத்தியமாகும் பட்சத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளினதும், சிங்கள அரசினதும் இணக்கத்துடன், வன்னிக்குள் அமெரிக்க அமைதிப் படைகளை களமிறக்க முடியும் என்றும் குறிப்பிட்ட இராஜதந்திரி தெரிவித்திருந்தார்.

“இத்திட்டத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இணங்குவார்களா?” என்று குறிப்பிட்ட அமெரிக்க இராஜதந்திரி வினவிய பொழுது, இதில் தமக்கு கொள்கையளவில் மாற்றுக் கருத்துக்கள் ஏதுமில்லை என்றும், எனினும் “இந்த யதார்த்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் புரிந்து கொள்வாரா?” என்பது தமக்கு தெரியாது என்றும், கே.பியும், உருத்திரகுமாரனும் பதிலளித்திருந்தனர்.

இந்தச் சந்திப்பின் தொடர்ச்சியாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைவை மையப்படுத்திய திட்டம் ஒன்று இணைத்தலைமை நாடுகளால் கே.பியிடம் கையளிக்கப்பட்டதோடு, இதற்கு முன்னோடியாக இணைத்தலைமை நாடுகளால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தை வன்னிக்கு கே.பி அனுப்பி வைத்த பொழுது அதனை அடியோடு நிராகரித்த தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுமாறு தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடாக கே.பியிற்கு தகவல் அனுப்பியிருந்தார்.

இதன் பின்னரும் கே.பி அணியினரின் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவை மையப்படுத்தி அமைந்திருந்த நிலையில், 2009 ஏப்ரல் மாதத்தின் முதல்வாரத்தில் அனைத்துலக தொடர்பகத்தில் இருந்து வெளியாகிய அவசர செய்தியின் அடிப்படையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான பரப்புரைப் பணிகளில் நேரடியாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைகள் களமிறங்கியிருந்தன.

ஒருபுறம் வன்னி மக்களை வகைதொகையின்றி கொன்றுகுவிக்கும் நடவடிக்கைகளில் சிங்கள அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் களைவிற்கான ஏதுநிலைகள் தொடர்பாகவே வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் கே.பியும், உருத்திரகுமாரனும் உரையாடிக் கொண்டிருந்தனர். இதில் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் ஆற்றலை கே.பி கொண்டிருக்காததால், அவரது சார்பில் பெரும்பாலான தொடர்பாடல்களை உருத்திரகுமாரனே பேணி வந்திருந்தார். அமெரிக்க இராதந்திரிகளுடன் மட்டுமன்றி, நோர்வே இராதந்திரிகளுடனும் கே.பியின் சார்பில் உருத்திரகுமாரனே தொடர்பாடல்களைப் பேணிவந்திருந்தார்.

மே 14, 2009: முள்ளிவாய்க்கால் போர் இறுதிக் கணங்களை நெருங்கிக் கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளையும், சிங்கள அரசையும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி அன்றைய நாளில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. வழமையாக தமிழீழ விடுதலைப் புலிகளை மட்டும் இலக்கு வைத்து அறிக்கைகளை வெளியிடும் அமெரிக்க அரசு, இம்முறை இரு தரப்பையும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டமை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நம்பிக்கையை அளித்திருந்தது. அதிலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்களால் நேரடியாக வெளியிடப்பட்ட அறிக்கை, தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் ஒரு சாதகமான சமிக்ஞையாகவே பார்க்கப்பட்டது.

இது தொடர்பாக உருத்திரகுமாரனிடம் முள்ளிவாய்க்காலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஒருவர் வினவிய பொழுது, வன்னி மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அமெரிக்க அரசு இணங்கியிருப்பதாகவும், கடந்த ஐந்து மாதங்களாக தாம் எடுத்த முயற்சி பயனளித்திருப்பதாகவும் பதிலளித்திருந்தார். அத்துடன் விரைவில் தென்பசுபிக் கட்டளைப் பீடத்தில் இருந்து வன்னிக்கு கப்பல் ஒன்றை அனுப்புவதற்கு அமெரிக்கா இணங்கியிருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடவோ அன்றி சரணடையவோ தேவையில்லை என்றும், ஒருதலைப்பட்சமான முறையில் நிபந்தனையற்ற மோதல் தவிர்ப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் கடைப்பிடித்தால் மட்டும் போதும் என்றும், குறிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரிடம் உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்.

“இதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவை அங்கீகாரம் வழங்குமா?” என்று உருத்திரகுமாரனிடம் குறிப்பிட்ட மூத்த உறுப்பினர் வினவிய பொழுது, இதுபற்றி ஏற்கனவே பாதுகாப்புப் பேரவையின் மூத்த இராஜதந்திரிகளுடன் தாம் கதைத்ததாவும், இதுவிடயத்தில் சீனாவும், ரசியாவும் எதிர்ப்புத் தெரிவித்தாலும், இவர்களின் எதிர்ப்பையும் மீறிப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்றும் உருத்திரகுமாரன் பதிலளித்திருந்தார்.

இதுபற்றி கே.பியிடம் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் வினவிய பொழுது, உருத்திரகுமாரன் கூறிய அதே பதிலையே கே.பியும் வழங்கியிருந்தார்.

இதனையடுத்து பராக் ஒபாமாவின் அறிக்கையை வரவேற்று உடனடியாகவே தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களால் வன்னியில் இருந்து அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டது. எனினும், மறுநாள் 15ஆம் நாளன்று முள்ளிவாய்க்கால் மீதான தாக்குதல்களை சிங்களப் படைகள் உக்கிரப்படுத்திய பொழுது, கே.பி-உருத்திரகுமாரன் தரப்பினரின் கூற்றின் நம்பகத்தன்மை தொடர்பாக வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளிடையே ஐயம் எழுந்திருந்தது.

இதனை நோர்வே ஊடாக உறுதிசெய்வதற்கு வன்னியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் முற்பட்ட பொழுது, இதுவிடயத்தில் சாதகமான பதில்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை.

இந்நிலையில் மக்களை மீட்டெடுப்பதற்கு குறைந்தபட்சம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல்களையாவது உடனடியாக முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பி வைப்பதற்கு அமெரிக்காவிடம் வலியுறுத்துமாறு, கே.பி-உருத்திரகுமாரன் தரப்பினரிடம் வன்னியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் கோரப்பட்டது.

எனினும் இது உடனடியாக சாத்தியமில்லை என்று 15ஆம் நாள் இரவு பதிலளித்த கே.பி, இருந்த பொழுதும் அமெரிக்க அமைதிப் படைகளை வன்னிக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சுடன் உருத்திரகுமாரன் பேசிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதன்பின்னர் 16ஆம் நாள் அதிகாலை முள்ளிவாய்க்கால் கடற்கரையை சிங்களப் படைகள் கைப்பற்றிய நிலையில், அமெரிக்க அமைதிப் படைகளின் வருகை என்பது ஒரு வெற்றுப் பேச்சு என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் நன்கு புரிந்து கொண்டிருந்தார்கள்.

இதனை தொடர்ந்து 16ஆம் நாள் இரவும், 17ஆம் நாள் காலையும் இடம்பெற்ற உக்கிர மோதல்களைத் தொடர்ந்து மக்களைப் பாதுகாக்கும் நிமித்தம் சிங்களப் படைகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான முடிவை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் எடுத்திருந்தார்.

இதற்கு முன்னோடியாக மக்களினதும், போராளிகளினதும் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் பெறுவதற்கு நோர்வே ஊடாக பா.நடேசன் அவர்களும், புலித்தேவன் அவர்களும் முற்பட்டிருந்தனர். எனினும் இதற்கு நோர்வே தரப்பில் இருந்து தெளிவான பதில்கள் வழங்கப்படாத நிலையில், தமது பாதுகாப்பிற்கு “பராக் ஒபாமா உத்தரவாதம் அளிப்பாரா?” என்று, அமெரிக்க-பிரித்தானிய அரச தரப்புடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வரும் பிரித்தானியாவில் உள்ள மூத்த ஆங்கில ஊடகவியலாளர் ஒருவரிடம் 17ஆம் இரவு பா.நடேசன் அவர்கள் வினவியிருந்தார். எனினும் அதற்கும் தெளிவான பதில் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் சிங்கள அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர் ஒருவருடன் தான் உரையாடியிருப்பதாகவும், வெள்ளைக் கொடிகளுடன் நிராயுதபாணிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எல்லையைக் கடக்கும் பட்சத்தில், அவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதற்கு பசில் ராஜபக்ச இணங்கியிருப்பதாகவும் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரிடம் கே.பி கூறியிருந்தார்.

இதனை உறுதி செய்வதற்கு அமெரிக்காவில் உள்ள உருத்திரகுமாரனின் உதவியாளருடன் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் தொடர்பு கொண்ட பொழுது, இந்தத் தகவல் நம்பகமானது என்றும், இதற்கான ஏற்பாடுகளை இறுதிசெய்யும் நிமித்தம் அவசரமாக வோசிங்டனுக்கு உருத்திரகுமாரனும், இன்னொரு தமிழ் மருத்துவரும் சென்றிருப்பதாகவும் உருத்திரகுமாரனின் உதவியாளர் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து 18ஆம் நாள் அதிகாலை வேளையில் வெள்ளைக் கொடியுடன் பேசச்சென்ற பொழுது தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், அவரது துணைவியாரான திருமதி வனிதா நடேசன், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீ.புலித்தேவன் ஆகியோர் சிங்களப் படைகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அத்தோடு சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு யுத்தமும் நிறைவுக்கு வந்தது.

இதிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளை நம்பவைத்துக் கழுத்தறுத்த நபர் யார் என்பதை வாசகர்கள் நன்கு புரிந்திருப்பீர்கள். இதுபற்றி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் வி.உருத்திரகுமாரனுக்கு எழுதிய திறந்தமடலில் நான் நேரடியாகவே கேள்வியெழுப்பியிருந்தேன். எனினும் இதற்குப் பதிலளிப்பதைத் தவிர்த்துக் கொண்ட உருத்திரகுமாரன், கே.பியின் மீதும், தன்மீதும் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலேயே இவ்வாறான திறந்தமடலை நான் வரைந்ததாக கூறியிருந்தார்.

எனினும் இதற்குப் பின்னரான கடந்த பதினொரு மாத காலப்பகுதியில் உருத்திரகுமாரனின் சுயரூபம் மக்களிடையே பட்டவர்த்தனமாகி வருகின்றது. இதனையே அண்மையில் அவருக்கு எதிராக உருவாகியிருக்கும் நாடுகடந்த ஜனநாயக அணியின் தோற்றுவாய் தெளிவாக உணர்த்தி நிற்கின்றது.

ஏனென்றால் உண்மைகள் ஒருபொழுதும் உறங்குவதில்லை அல்லவா?

நன்றி: ஈழமுரசு (25.03.2011)

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் இசை விழா : அனுமதி மறுக்கப்பட்ட பிபிசி செய்தியாளர்

Comments 21

  1. கணேசன் says:
    15 years ago

    ஏனென்றால் உண்மைகள் ஒருபொழுதும் உறங்குவதில்லை அல்லவா?

    நல்ல வேடிக்கை !

  2. Varathan says:
    15 years ago

    Good story for time passing. Nowadays nobody is ready to believe anykind of these stories from pro-LTTE media (including Inioru). Most of the Pro-LTTE media totally resemble the Lankapuvath (in 80s). The only truth is LTTE leadership is totally responsible for their end.

  3. Bharathi says:
    15 years ago

    எல்லாம் சரி, சேரமான் என்ற கட்டுரையாளர் இதுவரை இத்தனை சம்பவங்களையும் ஏன் மறைத்து வைத்திருந்தார்? அவருக்கும் காட்டிக்கொடுப்பில் ஏதாவது தொடர்பு உள்ளதா? இவற்றிற்கான ஆதாரங்கள் என்ன? ஆவணங்கள் ஏதாவது உள்ளதா? உதாரணமாக கே.பி சந்தித்த போது பேசிக் கொண்ட விடயங்களை நேரில் பார்த்தது போல எழுதியிருக்கிறாரே? அப்படியானால் சேரமானுக்கும் அதில் தொடபு உள்ளதா? எல்லாவற்றிற்கும் மேலாக ருத்தகுமார் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார்?

  4. விளங்காமுடி says:
    15 years ago

    உயில் எழுதாமச் செத்தவனின், மலட்டுச் சொத்துக்கு,

    வலி தெரியாம குடுமிபிடி சண்டை நடக்குதுங்கோ.

    எல்லாரும் வந்து வாய் பாருங்கோ.

    பேஜா கிளாப் பண்ணுங்கோ.

  5. S.G.Raghavan says:
    15 years ago

    எந்தவொரு முற்போக்கு போராட்டவாதியும் இப்படி தமக்குள் இவ்வாறான முரண் படு அரசியலை விமர்சனத்தை செய்யமாட்டான் தற்ற்போதைய தமிழர்களின் அவல அரசியலில் மக்களை வழிநடத்திச் செல்லும் கருத்தியலும் இவர்களிடம் இல்லை ஆளுமையும் இவர்களிடம் இல்லை சேரமான் சொரமான், வழுதி புழுதி, கே.பி உருத்திரகுமாரன் நெடியவன் யாராக இருந்தாலும் கூப்பாடுகளுக்கு செவி மடுக்க வேண்டாம் செயல் பாடுகளுக்கு மாத்திரம் ஆதரவு கொடுங்கள். இவர்கள் தளத்தில்மக்கள் ஆதரவு அற்ற மக்களின் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளாத பிரபாகரனின் வாரிசு உரிமையை தமதாக்கும் முயற்சியில் பிரபாகரனை விலை பேசிக்கொண்டிருக்கும் கனவான்கள்.

  6. Kumar says:
    15 years ago

    சில நாட்களாக இனியொருவில் வெளியாகும் ஆக்கங்கள் ஏமாற்றத்தை அளிப்பது மட்டுமல்ல சந்தேகங்களையும் ஏற்படுத்துகின்றன.

  7. veeran says:
    15 years ago

    புலி எத்தனை பேரைநம்பவைத்து கலுத்து அறுத்திருகிரது அதுதான் கடவுலின் கிருபையால் புலியின் வாலும் அறுக்கப்பட்டது

  8. வில்வரத்தினம் says:
    15 years ago

    இதென்ன புதுக்கதை… நடேசன் வெள்ளைக்கொடியுடன் பேச சென்றாரா? இந்த ஒரு வசனமே இந்த சேரமான் யார் என்பதை புட்டுக்காட்டுகிறது! தமிழ்நெற் எவ்வாறு கதையழந்ததே அதை பாணி… ஐயா நடேசன் ஆயுதங்களை போட்டு விட்டு உயிர் காக்க சரணடையவே போனார்கள். தலைவரின் காயமுற்ற மகனையும் தன்து குடும்பந்தையும் புலிகிள் முக்கிய தளபதிகளின் குடும்பங்களையும் காப்பாற்ற சரணடைவு இந்த சேரமானிற்கு பேசுவதா? மக்களை வலிந்து போர்க்களத்தில் பணயக்கைதிகளாக வைத்திருந்து அவர்கள் தப்ப முன்வந்த போது சுடுங்கள் என்று கட்டைளையிட்ட சார்ள்ஸ் அன்டனி தலைவரின் மகனின் உயிரைக் காப்பாற்ற நடேசன் கும்பல் வெள்ளை கொடியுடன் போனது வன்னி மக்கள் அனைவரும் இன்றும் கடுப்பாக சொல்கிறார்கள். இது
    இந்த சேரமானுக்கு தெரியாதா? இறுதிக்கணத்தில் புலிகளின் கடற்படைத் தளபதி போட்ட மரண ஓலக் கூப்பாட்டை சேரமான் கேட்கவில்லை போலும்! என்ன செய்தாவது எம்மைக்காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிய ஒலிப்பதிவு இன்னமும் யுரியூப்பில் தான் உள்ளது சேரமான்! உண்மைகள் உறங்காது தான் ஆனல் கெட்டிக்காறன் புழுகு கொஞ்சநாள்தான்! நீங்கள் தலைவரின் இமேஜை காப்பாற்ற இவ்வளவு பாடு படுகிறீர்களே அங்கு மக்களை புலிகள் தடுத்து வைத்த போது எங்கு போனீர்? புலிகள் தப்பி போக முற்படுகையில் பச்சை மட்டை அடி போட்டதுடன் சுட்ட போது எங்கு போனது உமது உண்மைகள் உறங்காத எழுத்துகள்? இவ்வளவும் செய்த புலிகள் ஒரு மூலைக்குள் ஓதுங்கப்பட்ட போது பேசப்போனார்களாம். ஐயா இந்த வெள்ளைக் கொடி பேச்சை கிளிநொச்சி பறிபோனதும் ஏன் நடேசன் செய்ய வில்லை? செய்திருந்தால் எல்லா உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாமே? சேமான் போதும் உங்கள் பொய்கள்! இதற்கு இனியொருவும் இடமளிப்பது வன்னியில் கொல்லப்பட்ட மக்களை மேலும் அவமதிப்பதே! சீ நீங்கள் எல்லாம் ஒரு மனிதர்களா? முடிந்தால் வன்னியில் இந்த அவலலங்களுக்குள் சிக்கிய மக்களுடன் சில கணங்கள் இருந்து அவரகளிடம் உண்மையை தேடுங்கள்!

    • tyui says:
      15 years ago

      true

  9. siva.mathi says:
    15 years ago

    கேள்வி நேரம்:
    1. தலைவர் இறந்துவிட்டாரா? இல்லையா?

    2. தலைவர் மறைந்து இருக்கிறார் என்றால் ஏன் மறைந்து 3வது வருடமாய் இருக்கிறார்? அட்டமத்து சனியா? ஏழரை சனியா தலைவருக்கு? தலைவர் எப்போது வெளியில் வருவார் என்று கேட்கவில்லை. ஏன் என்றால் அவர் வரமாட்டார்.
    மறைந்து இருப்பதாக சொல்பவர்கள் இராணுவ ரீதியான அரசியல் ரீதியான காரணங்களை முன் வையுங்கள்? பில் லாடன் கூட தான் இன்னும் உயிரோடு இருப்பதான காணொளியை விட்டுக்கொண்டுதான் இருக்கிறான். பின்லாடனுக்கு இல்லாத உலக அச்சுறுத்தலா தலைவருக்கு. அமெரிக்க கப்பலுக்கு காத்திருந்தவர். இந்தியாவுக்கு மட்டும் தானே பயப்படவேண்டும். சொல்லுங்கள் பதிலை?

    3. தலைவர் நா.க.அரசையும் இ தமிழர் நடுவத்தையும் உருவாக்க சொல்லவில்லை என்று சொன்னால் மக்கள் பேரவையையும் வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் உலகத்தமிழர் பேரவையும் உருவாக்கச்சொல்லி சொன்னவரா?

    4. கருணாஇ கேபீ உருத்திராஇவழுதீசர்வேஇசெல்வினி ஜோய் மகேஸ் என்று புலிகளில் இருந்தவர்கள் எல்லோரும் துரோகி
    என்றால் சம்பந்தரிமாவைஇ சிவாஜிலிங்கமி சுரேஸி சங்கரி என்று புலிக்கு வெளியே இருந்தவர்களும் துரோகிகள் என்றால் இனி எந்த தலைமையை மக்களை நம்ப சொல்கிறீர்கள்? இனியும் உங்களை மக்கள் நம்பி உங்களுடன் கால் வைப்பார்களா? இனி அங்கீகரிக்க சொல்லும் தலைவர்களும் தலைமையும் துரோகம் செய்யமாட்டார்கள் என்பதற்கு மக்களுக்கு வழங்கப் உத்தரவாதம் என்ன? உத்தரவாதத்தை வழங்கப்போவது யார்?

    5. நடேசனி ரமேஸி புலித்தேவன் ஈளங்கோ(ரமேஸ்) போன்றவர்கள் கொலை செய்யப்பட்டது தெரிந்தும் ஏன் இன்னும் அவர்களை உரிமை கோரவில்லை? சிடி அடித்து விழா எடுக்கவில்லை? பாணுஇ சூசைஇ ஜெயமி போன்றோரும் இறந்துவிட்டது தெளிவாக தெரிந்தும் ஏன் இன்னும் உரிமைகோரவில்லை? மக்களை ஏமாற்றத்தானே?

    6. கேபி பற்றியும் கேபிக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் பற்றியும் நாடு கடந்த அரசு பற்றியும் கேபியை மலேசியாவில் வைத்து கைது செய்து சிறிலங்காவுக்கு கொண்டு செல்ல முன்னரே விமர்சனமும் குற்றச்சாட்டுகளும் சேறடிப்புகளும் எதற்காக செய்யப்பட்டது? தீர்க்கதரிசனமா? நிகழ்ந்த அழிவுகளை ஏன் தீர்க்கதரிசனம் செய்ய இதை செய்தவர்களால் முடியவில்லை?

    7. நா.க.அரசு என்ற கருத்தியல் முன்வைக்கப்பட்ட போது கடுமையாக விமர்சித்தவர்கள் எப்படி சன நாயக அணியை ஆதரிக்கிறார்கள்?

    8. நா.க.அரசின் தேர்தலில் கள்ளவாக்குகள் இடம்பெறவில்லையா?

    9.சின்னத்துரை. சிறிரஞ்சனி ஈசன் குலசேகரமி அஞ்சலோ இவர்களின் கடந்த கால பின்னணியை போராட்ட பங்களிப்பை
    சொல்லமுடியுமா?

    10. வழுதி முக்கியமில்லாத நபர் என சேரமான் தரம்பிரிக்கிறார். விழுப்புண் அடைந்தவரின் சண்டைக்கள அனுபவத்தை பரிசோதனை செய்கிறார். நா.க. அரசின் ஜன நாயக அணியின் அனுபவங்களையும் அரசியல் ரீதியாக தனிப்பட்ட போராட்ட பங்களிப்பையும் 33 பெரும் சொல்வார்களா?

    தலைவருக்கு தான் தலைமேல் பிரச்சனை. தலைவரால் அங்கீகரித்துவிடப்பட்ட தமிழ்தேசிய இளையோரின் இளவரசன் மேதகு நெடியோன் வெளியில் வந்து பதில் சொல்வாரா? அல்லது மேதகு நெடியோனும் மறைந்து இருக்கிறாரா? நெடியோன் எப்போது வெளியில் வருவார் என்றாவது யாராவது பதில் சொல்ல தலைவர்கள் உள்ளீர்களா?

    எந்த தலைமையை நம்பி தமிழீழம் கேட்கப்போகிறீர்கள். தமிழீழத்தை யாரும் வெற்றிலை தட்டில் வைத்து தரமாட்டார்கள். அதுவும் கூட தமிழீழத்துக்கு யார் தலைவர் என்று பார்த்து அவர்களிடம் தான் பொறுப்பாக யாரும் கொடுப்பார்கள். கதைப்பார்கள்.

    இப்போது பிரேரிக்கும் எந்த இளையோர் தலைமையையும் நம்பி எந்த உலகமும் முறையாக உரையாடப்போவதில்லை. கருத்தை மட்டுமே கேட்பார்கள்.

    தங்களுக்கு தெரியாத எந்த தலைமையையும் சருவதேசம் அங்கீகரிக்க போவதில்லை.

  10. அரிச்சந்திரன் says:
    15 years ago

    விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய இலங்கை விரும்பியிருந்தது: விக்கிலீக்ஸ்
    [விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய இலங்கை பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டதாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

    விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அதன் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்ததாக விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டுகின்றது.

    அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்துள்ளனர். அதன் காரணமாகவே யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை என்றும் விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    ஆயினும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளருக்கு யுத்த களத்தின் உண்மையான நிலவரம் பற்றி சரியான தகவல் ஒருங்கிணைப்பு கிடைக்கவில்லை என்பதுடன், அவர்களின் எதிர்பார்ப்பின் பிரகாரம் விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் அராசங்கப் படைகளிடம் சிக்கிக் கொள்ளவில்லை என்றும் விக்கிலீக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

    • thalai says:
      15 years ago

      வணக்கம் அரிச்சந்திரன்,
      பிரபாகனை வைத்து அரசியல் யாவாரம் செய்வதற்கு புலி யாவாரிகளால் கட்டிவிடப்பட்ட கதை இது! இந்த செய்திக்கு எந்த ஆதாரமும் கிடையாது. விக்கிலீக்ஸ் எந்த கேபிளில் இப்படி வந்தது என்று சொல்வீர்களா? பிரபாகரன் சரணடைந்த பிறகே கொல்லப்பட்டார். பல மனித உரிமை இயக்கங்கள் இராணுவத் தரப்பை ஆதரம் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இனி மேலும் மக்களை சினிமா போல மாயைக்குள் வைத்திருக்க வேண்டாம்.

      • chandran.raja says:
        15 years ago

        இந்த அரிச்சந்திரன் அந்த அரிசந்திரன் இல்லை. இவர் அளவுக்கதிகமாகவே பொய் சொல்லுவார். இப்படிப் பார்த்தால் அவரிடம் நிரூபணம் கேட்கமாட்டீர்கள்.

  11. S.G.Raghavan says:
    15 years ago

    ஆக எங்கள் அனைவருக்கும் கவலை பிரபாகரன் இறந்தாரா இல்லையா என்பதையும் தாண்டி அவர் இறந்து விட்டார் என்பதை நிறுவுவதும் அவர் இறக்கவில்லை என்பதை நிறுவுவதும் தான். போங்கடா கோமண …………. ஒருவரின் கருத்தை ஒருவரும் அவரின் கருத்தை மற்றவரும் கேட்டு ஒரு பொது கருத்தியலில் ஒன்றாக செல்லும் பண்பு உலக பொதுமறையாகவும் இருக்கும் , ஆனால் எனது கருத்தே கருத்து அனைவரும் ஏற்று கொள்ளுங்கள் எனக் கூறும் பண்பற்ற எமை நோக்கி, பாசிச இன அடக்குமுறையாளர், ஏளனமாக எம்மை பார்த்து போங்கடா அம்மணக் …. எனக் கேட்பதும் பரிகசிப்பதும் என் காதில் கேட்கிறது. நாங்கள் அத்தனை பெரும் உத்தமர் தானா சொல்லுங்கள்? யாருமில்லை கண்ணின் மணிகளா! பிரபாகரன் குற்றமற்றவர் அல்ல ஆனால் அவரை குற்றம் சொல்லுவோர் அதற்கு தகுதியானவர்களாக இருக்கவேண்டும் என்பதே எனது அவா.

  12. sathis says:
    15 years ago

    கடந்த்த வாரம் தான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மாற்றலாகி வாந்துள்ளேன். இங்கு ஜப்பானிய தன்னார்வ நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் முகாம்களுக்குப் போவதுண்டு. அங்கு பிரச்சனை வறுமை, அதனால் பெண்கள் பாலியல் தொழிலுக்கு நிர்பந்திக்கப்படுகின்றனர். அதை எல்லாம் மறைத்து அதிர்வு என்ற புலம் பெயர் இணையம் இந்த செய்திய விடுகின்றது… பார்த்த் அதிர்ச்சியானேன்.
    “14 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர் பெற்றோர்களுக்குத் தெரியாமல் தாம் விரும்பியவர்களைக் காதலித்துப் பின்னர் அவர்களுடன் சென்று தங்கிவிடுகின்றனர். இதனால் பெற்றேர்கள் தமது பிள்ளையைக் காணவில்லை எனப் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. எனவே பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைள் குறித்து அதிக கவனம் எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இவ்வாறு ஆலோசனை கூறுகிறார் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய சிறு குற்றத் தடுப்புப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி கே.எ.வி.எஸ்.பத்மசிறி.

    இளம்வயதினர் தவறான வழிகளில் செயற்பட்டு வருகின்ற சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளன. 14 வயதுக்கும் 18 மற்றும் 20 வயதுக்கும் இடைப்பட்ட இளம் வயதினர் தாம் விரும்பியவர்களைக் காதலித்துப் பின்பு அவர்களுடன் ஓடிச்சென்று தங்கி விடுகின்றனர். இதனை அறியாத பெற்றோர்கள் தமது பிள்ளைகளைக் காணவில்லை எனப் பொலிஸில் முறைப்பாடு செய்கின்றனர். நாமும் முறைப்பாட்டை ஏற்று அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பிக்கும் மறுநாள் தமது பிள்ளை, விரும்பியவருடன் தங்கியிருக்கிறார் மீட்டுத்தாருங்கள் எனக் கேட்கின்றனர் பெற்றோர். இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    கடந்த மூன்று மாதங்களில் இவ்வாறான 9 முறைப்பாடுகள் யாழ்ப்பாணப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இவ்வாறு ஏனைய பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன. பொலிஸில் முறைப்பாடு செய்யப்படாத இவ்வாறான பல சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. எனவே பெற்றோர்கள் விழிப்பாகச் செயற்படவேண்டும். பிள்ளைகளின் ஒவ்வொரு நடவடிக்கை குறித்தும் அதிக கவனம் செலுத்தவேண்டும். பாட சாலை நேரங்களில், ரியூசன் நேரங்களில் பிள்ளை வேறு எங்காவது செல்கின்றனரா என அவதானிக்கவேண்டும். பிள்ளையுடன் கூடத் திரியும் நண்பர்கள் குறித்தும் பெற்றோர்கள் அறிந்திருக்கவேண்டும்.

    பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு நல்ல புத்திமதி கூறி வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள். பாடசாலை, ரியூசன் தவிர்ந்த நேரங்களில் வெளியிலும் உறவினர் வீடுகளுக்கும் செல்வதாகவும் சுற்றுலா செல்வதாகவும் கூறி விட்டுத் தவறான செயல்களில் இளம்வயதினர் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே பெற்றோர்கள் விழிப் படைவதன் மூலமே இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க அல்லது குறைக்க முடியும் என்றார்.

  13. இளவரசன் says:
    15 years ago

    Plan B:

    ‘தமிழ்நெற் ஜெயச்சந்திரன்’ அல்லது ‘சேரமான்’ அல்லது ‘தமிழ்நெற் ஜெயா’ எனப்படும் நபர் 2002 ஆம் ஆண்டு காத்தில ஐரோப்பாவில் இளையோருக்கு வகுப்பு எடுத்துத் திரிஞ்சவர்.

    அப்பிடி சில வகுப்புகளில அந்த காலத்தில நானும் இருந்தனான். இவரின்ர கதைகளை கேட்டு பிரமிச்ச ஆக்களில நானும் ஒருத்தன்.

    அந்த நேரத்தில் அவர் எப்பவும் குறிப்பிடுவது “தலைவரின்ர மாற்றுத் திட்டம் ‘பிளான் பி’ (Plan B)” பற்றி தான்.

    அதாவது, தலைவரின் பெருமைகள் பற்றியும், அவரது தீர்க்கதரிசனத் திறமை பற்றியும் விளக்குவதற்காக இந்த ஜெயச்சந்திரன் அல்லது சேரமான் இந்த “பிளான் B” பற்றி சிலாகித்துக் கூறுவார்.

    “ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்கு நெருக்கடிகள் ஏதும் வந்திட்டால், உடனடியாக தனது வழிமுறையை மாற்றுவதற்கு ஒரு “பிளான் B” மாற்றுத்திட்டத்தை தலைவர் வைத்திருக்கிறார்” என்று இவர் சொல்லித் திரிவதுண்டு.

    இப்ப யோசிச்சு பார்க்கிறேன், தலைவரின்ர “பிளான் B” என்று இவர் அந்த நேரத்தில எதை சொன்னவர்?!

    “நான் துவக்கை கீழே போடுறன், என்னை வந்து காப்பாத்துங்கோ” என்று அமெரிக்காக்காரனை கெஞ்சுறதையோ?!

    தலைவரின்ர “பிளான் A” –>
    பலமான எதிரியோட நேருக்கு நேர போய் மொக்குத்தனமாய் மோதுறது. அதிட்டவசமாய் வெண்டிட்டால் நல்லது. இல்லையெண்டால், “பிளான் B”.
    ஜெயா அல்லது சேரமானின் “பிளான் A” –>
    பலமான ஒருத்தனுக்கு மேல பயம் வந்திட்டால், அவனுக்கு மேல சேறு வாரி எறிஞ்சு “துரோகி” பட்டம் சூட்டுற விதமாய் ஆங்கிலத்தில எழுதி, தமிழிலையும் எழுதுவிச்சு, அவனை அடிச்சு அமத்தப் பாக்கிறது. அவனை அப்பிடி அமத்த முடியேல்ல எண்டால், “பிளான் B”.

    தலைவரின்ர “பிளான் B” –>
    பத்து வருசத்துக்கு முந்தி “தமிழ்செல்வன் இயக்கத்தைவிட்டு கலைச்சுவிட்ட” ஆளிட்டையே போய் தன்னை வந்து காப்பாத்தச் சொல்லி கெஞ்சுறது.
    ஜெயா அல்லது சேரமானின் “பிளான் B” –>
    “ஓ, அவரோ?, சீ… சீ… அவர் ஒண்டும் அப்பிடி பெரிய ஆள் இல்லை; அவர் ஒரு சாதாரண ஆள் தான். அவர் இப்ப எங்கட பிரச்சனை இல்லை” எண்டு தமிழில எழுதி கதையை பிரட்டிறது.

    சுத்த மடையன்கள்.

    கேக்கிறவன் கேனயன் எண்டால், தலைவர் இப்ப லிபியாவில 4 மாடி பங்கருக்கு கீழ இருந்து கடாபிய வழிநடத்துறார். அது தான் அவரின்ர “Plan C” எ சொல்லுவாங்கள் போல இருக்கு.

  14. ஆவண ஞானி says:
    15 years ago

    ஆங்கிலத்தில் வழுதி பற்றி தமிழ் நெற்றில் எழுதிய அதே கரம் அவசர அவசரமாக தமிழில் சேரமான் என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதி முடித்திருக்கிறார்.

    உண்மைகள் தொடர்ந்து பாரிசவாதத்தால் உறங்கிக்கிடக்காது என்று அரசல்புரசலாய் ஜெயா அண்ணாவுக்கு விளங்கிவிட்டுது என்று இந்த கட்டுரை கொஞ்சமாவது சுட்டி நிற்கிறது.

    இப்போது சேரமான் மர்ம நபர் வழுதி இல்லையாம். அவர் முக்கியமான நபர் இல்லையாம். முக்கிய பொறுப்பில் பிஸ்ரல் கட்டிக்கொண்டு M16 கோல்கொமாண்டோ துவக்குடன் திரியவில்லையாம். முக்கியமான பொறுப்பில் இருக்கவில்லை என்று மேலே எழுதிவிட்டு கீழே விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகையின் துணையாசிரியராக இருந்தவர் அதுவும் 5வருசம் இருந்தவராம் என்று விரலில் எண்ணி எழுதியிருக்கிறார். புலிகள் இயக்கத்தின் கொள்கை விளக்க பத்திரிகையின் துணையாசிரியர் என்பது பொறுப்பில்லாத ஒன்று என்று எனக்கு இப்போதுதான் சேரமான் எழுதி தெரியும்.

    வழுதி சண்டை கள அனுபவம் அற்றவர் எனக்கூறி இந்த போராட்டத்துக்காக தன்னை அர்ப்பணித்து விழுப்புண் அடைந்த போராளியை கொச்சைப்படுத்துகிறார். இப்படிப்பார்த்தால் 1983 யூலை 23 ம் திகதிக்கு பிறகு பிரபாகரனுக்கும் சண்டைக்கள அனுபவமோ முள்ளிவாய்க்காலில் மரணமடையும் வரை இருக்கவில்லை. வீ.மணிவண்ணன் என்ற கஸ்ரோவுக்கு அந்த அனுபவம் இல்லாமல் தான் ஆனையிறவில் விழுப்புண்ணடைந்து பாரிசவாதமானார். அனைத்துலக கிளைகளுக்கு பொறுப்பாக 2004ம் ஆண்டு நியமிக்கப்பட்ட நெடியோனுக்கு இந்த அனுபவம் கூட இல்லை. சேரமான் போராளியாக இருப்பதற்குரிய தகுதியாக எதை முன் வைக்கிறார்? யாரும் தெரிந்த முன்னாள் போராளிகள் சொல்லுங்கள் நண்பர்களே.

    சேரமானின் கள அனுபவத்தை பகிர்ந்துகொள்ளமுடியுமா?

    இறுதியாக வழுதி சாதாரண நபர் அவர் ஒரு முக்கியமே இல்லாத ஆள் என்று முடித்து வழுதி பற்றி முன்னர் தாறுமாறாக எழுதியவர்களின் வயிற்றில் புளியை வார்த்துவிட்டார்.

    இப்போது சேரமானின் தொடர்ச்சியான கண்டுபிடிப்பு உருத்திரகுமாரில் சேறுவாருவதே.

    அதிலும் உருத்திராவை சேறுவாருவதா எண்ணி டக்ளஸ் தேவானந்தா, கேபி, ஜெயதேவன், நரேந்திரன் என்று சனத்து முன்கூட்டியே தெரிந்து வைத்துள்ள சில பெயர்களை சேர்த்து மக்கள் முட்டாள்கள் என்று நினைத்து ஒரு சோடிப்பு சோடித்துள்ளார்.

    டக்களசின் நண்பராம். 2006, 2007 இல் மகிந்தவை சந்தித்தவராம். மத்திய கிழக்கில் இருக்கிற சகோதரனாம் என்று முக்கி முனகுகிறார் சேரமான்.

    ஜெயதேவனிடம் செக்காக 10 ஆயிரம் பவுண்ஸ் பாம்பு அஜித்தை வைத்து பெற்றுக்கொண்டு வன்னிக்கு கேணல் சங்கரின் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தவரை தானே கஸ்ரோ மாமா சீவரத்தினத்துக்காக பிடிச்சு வைச்சு விட்ட கதை சேரமான் மறந்துவிட்டார். பாம்பு அஜித சாட்சியாக லண்டனில் இருக்கிறார். நந்தகோபனின் சுட்டுப்போடுவம் என்ற மிரட்டலால் ஜெயதேவன் பொன்னம்பலம் ஆஸ்பத்திரியில் Heartattack வந்து அனுமதிக்கப்பட்டதை சேரமான் அறிந்திரார். நோர்வேயில் உள்ள நெடியவனிடம் கேட்டால் விபரம் சொல்லுவாரே?

    ஏன் ஜெயா அண்ணா இப்படி முக்கி முனகுகிறீர்கள். ஆதி மூலம் குத்தப்போகிறது.

    டக்ளஸ், சங்கரி, சித்தார்த்தன், பரந்தன் ராஜன், றோ, சிஜஏ என்று கோர்த்து எழுதினால் மக்களுக்கு விடயங்களை பிரித்தறிய தெரியாது என்று இன்னும் பழைய பாணியில் கட்டுரை எழுதுவதை நிறுத்தவும். காலம் மலையேறிவிட்டது.

    போதாக்குறைக்கு மீண்டும் புலி ஆதரவு நிலைப்பாட்டை லங்கா காடியன் மூலம் மறுஅவதாரம் எடுத்துள்ள ஜெயதேவனையும் அவரின் சகோதரன் நரேந்திரனையும் கிண்டிவிட்டு செம அடி வாங்கப்போவது என்னமோ நிட்சயம்.

    சேரமானுக்கு பித்துப்பிடித்துவிட்டது என்ன செய்ய?

    கேபியும் உருத்திராவும் ஆயுதங்களை அமெரிக்காவின் பாதுகாப்பில் கொன்ரயினரில் வைத்து கொடுக்க திட்டம் தீட்டினராம் என்று எழுதும் சேரமானிடம் ஒரே ஒரு கேள்விதான்.

    இறுதியில் பல்லாயிரம் புலிகள் என்ன செய்தார்கள் ஆயுதங்களை போட்டுவிட்டல்லவா சரணடைந்தனர். இதை தானே கேபியும் உருத்திராவும் இந்த அழிவுகளுக்கு முன்னரே சொன்ன திட்டம். எந்த முடிவை எப்போது எடுத்திருந்தால் இந்த போராட்டத்துக்கு நன்மையாக இருந்திருக்கும் என்பதை சேரமான் அடுத்த கட்டுரையில் சொல்லவும்.

    கடையில் சேரமான் இப்படி எழுதுகிறார்…

    இதனை தொடர்ந்து 16ஆம் நாள் இரவும், 17ஆம் நாள் காலையும் இடம்பெற்ற உக்கிர மோதல்களைத் தொடர்ந்து மக்களைப் பாதுகாக்கும் நிமித்தம் சிங்களப் படைகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான முடிவை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் எடுத்திருந்தார்.

    அப்படியென்றால் 16, 17 ம் திகதிகளில் இயக்கத்தின் முடிவுகளை எடுத்தவர் நடேசன். அதுவும் சிங்களப்படைகளுடன் பேச.அப்ப தலைவர் 15 ம்திகதியே வன்னியில் இருந்து தப்பியோடிவிட்டார் என்று நிறுவ முயல்கிறாரா?

    அல்லது முடிவை எடுக்க தெரியாத தலைவராக தலைவர் இருந்தார் என சொல்ல விளைகிறாரா?

    சேரமான் அவர்களே கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாய் போகப்போகிறது. நீங்கள் ஆங்கிலத்தில் கெட்டிக்காரன் என்று தான் இவ்வளவு நாளும் நினைத்தேன். உங்களுக்கு இரு மொழிகளுமே பிரச்சனைதான்.

    உங்கள் எழுத்து உங்களையே நாறடிக்கப்போகிறது. அதனால் ஏதாவது தெரிந்த மொழியில் எழுதப்பார்க்கவும்.

  15. சி. உமா says:
    15 years ago

    சேரமானின் கட்டுரையில் மற்றவர்கள் மீது சேறள்ளி வீசுவதையே கருத்தாகக் கொண்டதால் பல தவறுகளை விட்டிருக்கின்றார். இக்கடிதமானது எதையும் சிந்தியாது ஏற்றுக் கொள்ளும் ஒருசிலருக்கு வேண்டுமானால் பயன்படலாம். ஆனால் பெரும்பான்மையோருக்குச் சிரிப்பையே வரவழைக்கும். தமது கருத்துக்கு ஆதரவானவர் முக்கியமானவர்கள்> எதிரானவர்கள் சாதாரணமானவர்கள் என எழுதும் இவரிடம் நியாயத்தை எதிர் பார்க்க முடியாது. பாவம் விட்டுவிடுங்கள். இனியாவது எப்படி எழுதுகின்றாரெனப் பார்ப்போம். இக்கட்டுரை இப்படி விமர்சனங்களுக்குள்ளாகும் என அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார். புனைபெயரில் எழுதுவது தவறில்லைத்தான் ஆனால் இப்படி மற்றவர்களைப் பெயர்சொல்லித் தாக்கும் இவர் புனைபெயரில் ஒளிந்து கொள்வதன் நியாயத்தன்மைதான் எனக்குப் புரியவில்லை.

  16. ranjith.s says:
    15 years ago

    நாடு கடந்த அரசு ,பழைய இயக்கப் பாணியில்தான் இயங்குது. இவையள் எல்லோரும் முன்பு ஒன்றாய்த்தான் இருந்தவை. இப்ப மக்களை யார் மேய்ப்பது எண்ட போட்டி. புதிய தமிழ் புலிகள் காலத்தில் இருந்தே பிளவுதான். பழைய கூட்டணியை அப்புக்காத்துமார் ஆட்டினது போல ,உந்த நா.கடந்த அரசையும், கலாநிதிகள் பிடிச்சு வைச்சிருக்கினம். இனி படிச்சவைதானாம் போராட்டம் செய்ய முடியுமாம். சம்பந்தர்- சுமந்திரன் கூட்டமைப்பு ,மகிந்த ராஜபக்ஷ கொடுக்கிறத ஏற்றுக் கொண்டால், நாடு கடந்த வியாபாரமும் படுத்து விடும். என்ன செய்யப் போகினம்!! சேரமானுக்கும், தமிழ் நெட்டுக்கும் பதில் சொல்லியே அடுத்த இரண்டு வருஷத்தையும் கடத்தப் போகினமோ. அல்லது சூடானிலையும், மலேசியாவிலையும் கந்தோர் திறக்கிறம் எண்டு ரீல் விட்டுக் கொண்டு இருக்கப்போகினமோ..கொஞ்ச நாளைக்கு சேரமானும், ஜெயாவும் பேசாமல் இருந்தால், நா.க.அரசையும் சனம் மறந்திடும்.

  17. Thamilmaran says:
    15 years ago

    End of the day we are lankans and we proud to be lankans any way

  18. veeran says:
    15 years ago

    புலி எத்தனை பேரைநம்பவைத்து கலுத்து அறுத்திருகிரது அதுதான் கடவுலின் கிருபையால் புலியின் வாலும் அறுக்கப்பட்டது

    கொ—–யுடன் சேர்த்து

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...