முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய மதிமுகவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சாலை மறியல் போராட்டத்துக்குச் சென்ற மதிமுக பொதுச் செயலர் வைகோ, பழ. நெடுமாறன் உள்பட 217 பேரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களை மாலை 5 மணிக்கு விடுவித்தனர்
“முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையைக் கட்டத்துடிக்கும் கேரள அரசின் சதியை முறியடிப்போம்” என்ற தலைப்பில் ம.க.இ.க மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகம் தழுவிய எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் சேகர் தலைமை தாங்கினார்.
ம.க.இ.க கிளை செயலர் தோழர். சீனிவாசன், அணையின் வரலாற்றை சுருக்கமாக எடுத்துக்கூறி அதில், திராவிட கட்சிகளின் துரோகத்தையும் தேசிய கட்சிகளின் பித்தலாட்டத்தையும் தோலுரித்தார். முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தை விளக்கி அதில் தமிழகத்தின் நீராதார உரிமையையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ஏற்க மறுத்து சண்டித்தனம் செய்யும் கேரள கட்சிகளை சாடினார்.அத்துடன் அவர்களின் சட்ட விரோத அடாவடி செயலுக்கு துணைநின்று, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை அழித்து புதிய அணை கட்ட ஆய்வு மேற்கொள்ள அனுமதித்த மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேசின் செயல் தேசிய ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதேயாகும் என்று அம்பலப்படுத்தினார்.
பிளாச்சிமடாவில் உயர்நீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி கொக்கோ கோலாவிற்கு தண்ணீரை விற்கும் கேரள அரசுதான் உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னும் தமிழகத்துக்கு உரிமையுள்ள நீராதாரத்தை மறுக்கிறது. இங்குள்ள ஜெயாவும் கருணாவும் தங்கள் தங்கள் பாணியில் சட்டமன்றத்தீர்மானம், உண்ணாவிரதம் என்ற நிலையைத்தாண்டுவதில்லை.
ஸ்பெகட்ரம் ஊழலில் ராசா கைதானவுடன் அப்போது முல்லைப்பெரியாறு நீர் உரிமைக்காக தான் நடத்த திட்டமிட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தைக்கூட கைவிட்ட உத்தமர்தான் கருணாநிதி என்பதை அம்பலப்படுத்தினார்.
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத்தலைவர் தோழர் தர்மராஜ் பேசும் போது தேசிய கட்சிகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி சாடினார். குறிப்பாக, இந்து இந்து எனக்கூப்பாடு போடும் பா.ஜ.க கும்பல், மலையாள இந்துக்களுக்காக குரல்கொடுத்து தமிழக இந்துக்களை வஞ்சிக்கிறது. சிறப்புப்பொருளாதார மண்டலத்திற்காக பன்னாட்டு முதலாளிகளுக்கு அனைத்து சலுகைகளுடன் அளவற்ற தண்ணீரையும் தாரைவார்க்கும் கேரள அரசு, உள்நாட்டிலுள்ள சகோதர தமிழனுக்கு தண்ணீர் தர மறுத்து இனவெறி அரசியலைத்தூண்டும் கேடுகெட்ட இழிசெயலை செய்கிறது என்று கண்டீத்தார்.
அம்மாவுக்கும் விஜயகாந்துக்கும் மட்டுமல்ல, நாளை குஷ்பு கட்சி தொடங்கினாலும்கூட காவடீ தூக்க தயாராக இருப்பவர்கள்தான் போலி கம்யூனிஸ்டுகள் என்று ஏளனம் செய்ததுடன் நாளு சீட்டு கிடைக்குமென்றால் கொள்கை, தத்துவம் எதையும் புரட்டிப்பேசும் போலிகளின் பிழைப்புவாதத்தை தோலுரித்தார். மேலும், பன்னாட்டு நிறுவனத்தின் நலனுக்கென்றால், உடனடியாக உத்தரவிட்டு அப்போதே அமுல்படுத்தச்சொல்லி நிர்ப்பந்திக்கும் உச்ச நீதிமன்றமோ, இப்பிரச்சினையில் ஜவ்..வா..க இழுத்துச் செல்வதுடன் தமது தீர்ப்பை அமுல்படுத்த மறுத்து சண்டித்தனம் செய்யும் கேரள அரசை எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறது.
காங்கிரசு, பா.ஜ.க, சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) போன்ற ‘தேசிய’ கட்சிகளின் கேரள மாநில அமைப்புகள் தண்ணீர் தர மறுக்கும் நிலையில், தமிழக மக்களின் போராட்டம் அந்த தேசிய கட்சிகளின் தமிழகத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடுவது, தமிழகத் தலைவர்களை வெளியில் முகம் காட்ட விடாமல் விரட்டியடிப்பது என்பதாக இருக்க வேண்டும். இங்குள்ள நாயர் கடையை தாக்குவதன் மூலம் பிரச்சினையை தீர்க்க முடியாது என்றும் இது எதிரியை தப்பவைத்து இரு மாநில மக்களும் மோதிக்கொள்வதாகத்தான் முடியும் என்றும் எச்சரித்தார். தேவையெனில், மலையாள அரசியல் கட்சிகள் உருவாக்கியுள்ள இனவெறி போதையில் சிக்கியுள்ள உழைப்பாளி மக்களை தெளியச்செய்வதற்காக கேரளத்திற்கு செல்லும் சாலைகளை மறிப்பது, காய்கறி, பால், இறைச்சி போன்றவற்றை தடுப்பது, தமிழகத்திலிருந்து பாயும் பரம்பிக்குளம், ஆழியாறு, மண்ணாறு தண்ணீரை தடுப்பது என்ற வகையில் பாடம் புகட்ட வேண்டிய வேண்டும் என்று சரியான திசைவழியை சுட்டிக்காட்டினார். கம்பம், போடி வட்டார மக்களின் போராட்டத்தை வாழ்த்தியதுடன் அப்போராட்டத்தில் மொத்த தமிழகமும் சங்கமிக்க வேண்டும் என்று உணர்த்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 40 பெண்கள் உட்பட 150-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு எழுச்சிகரமாக முழக்கமிட்டு ஆர்ப்பரித்தனர். ம.க.இ.க மைய கலைக்குழு பாடல்கள் இசைத்தது.