கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட இலேசான நில நடுக்கங்களால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளதாக கேரளா அரசு தொடர்ந்து புகார் கூறி வந்ததால், அம்மாநில அரசின் வற்புறுத்தலின் பேரில், பேரிடர் மேலாண்மை ஆணையம் முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து கடந்த 12 ஆம் தேதி உத்தரவிட்டது.
இதற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து கடந்த 21 ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
அத்துடன் தமிழக எதிர் கட்சிகளும் மேற்கூறிய ஆய்வு குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழகம் வந்த பிரதமரை சந்தித்துப் பேசிய ஜெயலலிதா, பேரிடர் மேலாண்மை ஆணைய குழுவை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் பேரிடர் மேலாண்மை ஆணைய குழுவை நிறுத்தி வைப்பதாகவும், உச்ச நீதிமன்றம் நியமித்த குழு, ஆய்வு அறிக்கை வழங்கும் வரை நிறுத்திவைப்பதாகவும் தமிழக பொதுப்பணித்துறைக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது