இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்குத் தனித்துவமான ஒரு அடையாளம் உண்டு என்பது பற்றித் தெளிவாக எடுத்துரைத்தோர் முற்போக்கு இலக்கிய இயக்கத்தினர். அதை வலியுறுத்திப் பேசியதோடு அதற்கு இந்த மண்ணிற் கூட மறுக்கப்பட்ட அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவதற்கு முன்னோடிகளாக செயற்பட்டோருட் பேராசிரியர் கைலாசபதிக்கு முக்கியமான இடமிருந்தது.
அந்த அடையாளம் தனித்துவமானது மட்டுமல்ல. அது தரத்திலும் தமிழகத்திற்கு ஈடானதும் சில வகைகளில் உயர்வானதும் என்பதை 1950 களிலிருந்து வளர்ச்சிபெற்ற ஒரு கவிதைப் போக்கு உணர்த்தி நின்றது. அப் போக்கின் முதன்மையான ஒரு பிரதிநிதியாக நாம் முருகையனைக் கூறலாம்.
முருகையனின் கவிதையின் வீச்சையும் விருத்தியையும் சில முக்கியமான வகைகளிற் பாரதிதாசனுடைய கவிதைகளின் வலிமையான பண்புகளுடன் சேர்த்து நோக்கலாம். இருவரிடமும் ஆழமான மொழிப் பற்று இருந்தது. இருவரிடமும் இனப்பற்றும் சமூக நீதிக்கான வேட்கையும் அறம் பற்றிய உறுதிப்பாடும் இருந்தன. எனினும், இருவரது போக்குக்களும் அவர்கள் தமது கவித்துவத்தின் உச்சத்தை நோக்கிச் செல்கையிற் திசை பிரிந்தன.
பாரதிதாசனின் இனப்பற்றுத் தமிழரல்லாதோர் மீதான பகைமையாகவும் பின்னர் தீவிர இந்திய நாட்டுப் பற்றுக்கும் தமிழ்த் தேசியவாதத்திற்குஞ் சமநிலை காணுகிற ஒரு போக்காகவும் மாற்றங்கண்டது. பார்ப்பனிய விரோதத்தையும் பகுத்தறிவு வாதத்தையும் விட்டால் அவருடைய தொடக்கக்கால உணர்வுகளில் மற்றவை தீவிரமிழந்துவிட்டன எனலாம். தமிழகத்தின் திராவிட இயக்கத்தின் அரசியற் சீரழிவுச் சூழலில் அவர் தேர்ந்தெடுத்த தமிழ்த் தேசியவாதப் பாதை அவருக்கு கை கொடுக்கவில்லை.
முருகையனின் மொழிநடை வேறுபட்டது. ஆழமான உணர்வுகளையும் வெகு நிதானமான சொற்களின் மூலம் உணர்த்துகிற ஆற்றல் அவருக்கிருந்தது. அவருடைய தொடக்கக் காலக் கவிதைகளில் அவரது இளமை வேகமும் தமிழ்ப் பற்றும் இன உணர்வும் வெளிப்பட்டன. ஆனாலும், ஒரு உணர்ச்சிக் கவிஞராக அவை அவரை அடையாளப்படுத்த வில்லை. போராட்ட அழைப்பைக் கூடத் தோள் மீது கைபோட்டு அரவணைத்துச் செல்லுகிற விதமாகச் சொல்கிறவராகவே அவர் இருந்தார்.
முருகையனின் உலக நோக்கு அவருடைய உலக அனுபவத்தையொட்டியும் தமிழ்த் தேசியவாத அரசியலின் நேர்மையீனத்தை யொட்டியும் படிப்படியான மாற்றங்களைக் கண்டது. மாக்சியப் பொருள் முதல்வாத நோக்கில் மாக்சிய இயங்கியலின் அடிப்படையில் அவர் உலகை நோக்கத் தொடங்கினார். அந்த நோக்கு அவரது மனித நேயத்தை மேலும் ஆழமாக்கியது; சமூக நீதிக்கான வேட்கையை மேலும் அதிகப்படுத்தியது. குறுகிய தமிழ்த் தேசியவாதத்திற்கு பலியாகாமல் அவரால் முழுமையான ஒரு மனிதநேயவாதியாக விருத்தியடைய முடிந்தது.
அவரது சமூகப் பங்களிப்புகள் பல வேறு தளங்களிலும் பலவேறு விதங்களிலும் நிகழ்ந்துள்ளன. எந்தத் துறையிற் பணியாற்றிய போதும் முருகையன் தான் செய்யுங் காரியத்தைச் செய்நேர்த்தியுடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் செய்வதில் மிகுந்த நாட்டங் காட்டினார். தான் கூறுகிற கருத்துக்களிற் குழப்பத்திற்கும் தனது நோக்கத்திற்கு முரண்பாடான விளக்கங்கட்கும் இடம் இல்லாதிருக்குமாறு அவர் விசேடமான கவனஞ் செலுத்தினார்.
அவரது சிந்தனைத் தெளிவுஞ் செய்நேர்த்தியும் அவரது சொற்பிரயோகத்திலும் தம்மை வெளிப்படுத்தின. மரபு செய்யுள் வடிவத்திலேயே அவருடைய கவிதைகள் அமைந்த போதிலும், எதுகை மோனைக்காகவோ பிற யாப்பு விதிகளை மீறப்படாது என்பதற்காகவோ சொற்களை வலிந்து திணிக்கிற போக்கு அவரிடம் இருந்ததில்லை. தமிழ்க் கவிதையுடனான பரிச்சயமும் பயிற்சியும் மொழியை ஆளும் வல்லமைக்கு வலுச் சேர்த்தன. சொற்களை தேடி அவர் செல்லாமற் சொற்கள் அவரைத் தேடி வந்தன. முருகையனுடைய கவிதைகளின் தெளிவையும் தர்க்க ரீதியான மொழிப் பயன்பாட்டையும் கருத்தாழத்தையும் வைத்து அவரை ஆய்வறிவுக் கவிஞர் என்றும் அவரது விஞ்ஞான அறிவை மனதிற் கொண்டு அவரது கவிதைகளில் விஞ்ஞானப் பண்பு உள்ளதாகவும் அகச்சார்பான கருத்துகள் கூறப்பட்டதுண்டு. அவை முருகையனையோ அவரது கவிதையையோ சரியாக அறியாதோரின் கூற்று. அறிய உதவாத கூற்றுக்களுங் கூட.
நல்ல கவிதைக்கு தெளிவான, கருத்து முரண்பாடற்ற மொழிப் பிரயோகம் கேடானதல்ல. அது கவிதைக்கு வலுச் சேர்க்கின்றது. கவிதையை உணர்ச்சிப் பிரவாகத்துடன் குழப்பிக் கொள்கிறவர்கள் தவறான முடிவுகளைச் சென்றடைகின்றனர். கவிதை என்பது பல்வேறுபட்ட வாசிப்புக்கட்கு இடமளிப்பது. ஆனால், அவ்வாசிப்புக்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவது கவித்துவத்தின் அடையாளமல்ல. அது கருத்துக் குழப்பத்தின் அடையாளமாகக் கூட இருக்கலாம். முருகையனுடைய கவிதைகளின் வேறுபட்ட வாசிப்புக்கள் பொதுவாக ஒன்றுக்கொன்று இசைவானவையாயும் ஒன்றை ஒன்று வலுப்படுத்துவனவாயும் அமையக் காரணம், மொழியின் பாவனை மீது அவர் இளமை தொட்டுக் காட்டிவந்த சிரத்தையாகும்.
முருகையனுடைய கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதை தனது உச்சங்களை எட்டிய காலப் பகுதியில் எழுதப்பட்டவை. ஈழத்துக் கவிதையை அதன் உச்சங்கட்குக் கொண்டு சென்றவற்றுள் அவரது கவிதைகளுக்கு ஒரு பெரும் பங்குண்டு. அவற்றின் சிறப்பை அறிந்ததனாலேயே பேராசிரியர் கைலாசபதி அவரைக் கவிஞர்கட்குக் கவிஞர் என்று கூற முற்பட்டார். அக்கூற்று இன்று வரையுங் கூட செல்லுபடியானது.
முருகையன் புதுக்கவிதையை ஒரு காலத்தில் முற்றாக நிராகரித்தவர். அதற்கான வலுவான காரணங்கள் இருந்தன. அவர் அவ்வாறு நிராகரித்த காலத்தில் வந்த புதுக் கவிதைகளில் முக்கியமாகத் தமிழகத்திற் கொண்டாடப்பட்டவற்றில், மரபுக் கவிதையின் யாப்பின் கட்டுப்பாடின்மை போகக், கவிதைக் குரிய அழகியற் பண்புகள் பல காணப்படாமை ஒரு முக்கிய காரணம். புதுமைப்பித்தனின் சொற்களைக் கடன் வாங்குவதானால், “”கொட்டாவி விட்டதெல்லாம் கூறு தமிழ்ப் பாட்டாச்சே, முட்டாளே இன்னமுமா கவி’ என்கிற விதமாகவே அவை பெரும்பாலும் அமைந்தன.
பின்னர் புதுக்கவிதை கூடிய செய்நேர்த்தியுடன் அமைந்துவரத் தொடங்கிய போது, முருகையன் புதுக் கவிதைகளை அக்கறையுடன் வாசித்துத் தரமானவையாகக் கண்டவற்றை மெச்சவுந் தவறவில்லை. ஆக்கமாக விமர்சித்த போதும் அவராற் புதுக்கவிதையில் ஆர்வத்துடன் ஈடுபட இயலவில்லை. ஏனெனில், மரபு சார்ந்த செய்யுள் வடிவங்களின் ஓசை நயம் அவருடன் இறுக்கமாக ஒன்றிப்போயிருந்தது.
தன்னுடைய ஆற்றல்களைக் கொண்டு சாதிக்க வேண்டியவை நிறையவே இருக்கையில், பரிசோதனை என்கிற பேரிற் பயனற்ற முயற்சிகளைச் செய்ய அவர் விரும்பவில்லை என்பதே அதன் காரணம் என்று கூறுவேன். ஏனெனிற், செய் நேர்த்தியை முதன்மைப்படுத்திய ஒரு உன்னதமான படைப்பாளி அவர்.
முருகையனது கவிதை உலகம் பற்றிய ஆழமான ஆய்வுகள் இனிவரும். கட்டாயம் வர வேண்டும். அதன் மூலம் தமிழ்க்கவிதை உலகு தன்னைத் தானே முழுமையாக அறியும்.
Thanks:Thinakkural.