தற்போதைய சர்வதேச அரசியல் வெளியில் உரையாடப்படும் பல விடயங்களில் மனித உரிமை மீறல், போர்க்குற்ற விசாரணை, பொருளாதார நெருக்கடி போன்றவை இல்லாமல் இருந்தால் அது இந்த நூற்றாண்டின் அதிசயமான விவகாரமாகவிருக்கும்.
லிபியா மீதான நேட்டோ படையினரின் தாக்குதலை நியாயப்படுத்த மனித உரிமை மீறல் என்கிற விடயம் பிரயோகிக்கப்பட்டது.
சிரியாவிலும் எதிர்காலத் தாக்குதல் திட்டத்திற்கான விடயங்கள் முன் வைக்கப்படுகின்றன.
முன்னாள் லிபியத் தலைவர் கடாபி தமது சொந்த மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட ஒடுக்கு முறைகள், நேட்டோவின் தாக்குதலை நியாயப்படுத்தின.
அதேவேளை ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் போரில் ஈடுபடும் நேட்டோ நாடுகளின், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவதால், உலகளாவிய ரீதியில் நேட்டோவின் படைத்துறை ஆளுமை பலவீனமாகி விடுமென நேட்டோவின் செயலாளர் அன்டர்ஸ் ரஸ்முசென் கவலையடைகிறார்.
“லிபியாவிற்கு பின்னான நேட்டோ’ என்கிற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை யொன்றில், கடன் நெருக்கடியில் சிக்குண்டுள்ள பல ஐரோப்பிய நாடுகளின் நிதி நிலைமை மோசமடைவதால், வளர்ச்சியுறும் சீனா, இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகளின் படைத்துறையின் வளர்ச்சி அதிகரித்து, புதிய சர்வதேச இராணுவ சமநிலையை உருவாக்கி விடுமென்று குறிப்பிடுகின்றார்.
சோவியத்தின் உடைவோடு, பனிப்போர் முடிவடைந்தாலும், நேட்டோவிலுள்ள ஐரோப்பிய நாடுகள் தமது படைத்துறை செலவீனத்தை 20 சதவீதமாக குறைத்துள்ளதால், அதே காலப் பகுதியில் அந்நாடுகளின் கூட்டு உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 55 சதவீதம் அதிகரித்துள்ளது.
1991 ஆம் ஆண்டளவில் நேட்டோவின் மொத்த படைத்துறைச் செலவில் 34 சதவீதத்தை வகித்த ஐரோப்பிய நாடுகள், இன்று 21 சதவீதத்தை மட்டுமே கொண்டிருப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை’ என்பது போன்று, நிதி இல்லாதவர்களிடம் இராணுவ பலமும் கிடையாது என்பதை நேட்டோ செயலாளர் நாயகம் கவலையோடு கூறியதைக் கவனிக்கலாம்.
ஆகவே இலங்கை அரசைப் பொறுத்தவரை, நிதி நெருக்கடியோடு, போர்க் குற்றச்சாட்டு, மனித உரிமை மீறல் என்கிற சர்வதேசப் பரப்பில் பரவலாக உரையாடப்படும் அனைத்து விடயங்களையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்வதைக் காணலாம்.
நிதி இல்லாவிட்டாலும், மாவட்டம் தோறும் அதிரப்படை முகாம்களும், வடக்கின் பெரும் பகுதிகளில் படைத்தளங்களும் நிறுவப்படுகின்றன.
பணவீக்கம் உயர்வது போல், வருடம் தோறும், வரவு செலவுத் திட்டத்தில் படைத்துறைக்கு ஒதுக்கும் நிதியும் அதிகரிக்கிறது.
தமது பொருளாதார வளர்ச்சிக்காக படைத்துறைச் செலவீனங்களை ஐரோப்பிய நாடுகள் குறைத்துக் கொள்கின்றன. ஆனால் இலங்கையின் நிலையோ அதற்கு எதிர்மாறாக இருக்கிறது.
இலங்கை நிதியமைச்சின் இந்த ஆண்டிக்கான அறிக்கையில், முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 410.7 பில்லியன் ரூபா கடனாகப் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ள தோடு, அதே காலத்தில் ஏற்கனவே முன்பு பெற்ற கடனை மீளச் செலுத்த, இந்தப் பணத்திலிருந்து 231.3 பில்லியன் ரூபா பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட் டுள்ளது.
மிஹின் லங்கா நிறுவனத்திற்கு கடந்தாண்டு 73 கோடி ரூபாவும், தரக்குறைவான பெற்றோல் இறக்குமதியால் 20 கோடி ரூபாவும் நட்ட மேற்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு சீனாவிடமிருந்து 307 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்று முதற்கட்ட பணி பூர்த்தியடைந்து 10 மாதமாகியும் இன்னமும் கப்பல்கள் அங்கு வரவில்லை.
துறைமுக வாசலில் இடை மறித்து நிற்கும் பாறாங்கல்லொன்றை உடைக்க, 10.3 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக தருமாறு சீனாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
இவை தவிர ஐ.நா. சபையின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகியவுடன், நிதி நெருக்கடிப் பிரச்சினைகளை ஒரு புறம் ஒதுக்கி வைத்து, சகல ஆட்சி பீட உயர் மட்ட தலைவர்களும், இராஜதந்திரப் போர்க்களத்தில் இறங்கி விடுவதைக் காணலாம்.
நல்லிணக்க ஆணைக்குழுவினை நம்ப முடியாது என்கிற வகையில் அனைத்துலக மன்னிப்புச் சபை அறிக்கை வெளியிட்டதால், இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் 18 ஆவது கூட்டத் தொடரில், ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் மறுபடியும் தமது ஆரம்ப உரையில் விசாரணை தேவையென்று தெரிவித்து விடுவாரோ என்கிற அச்சம் அரச மட்டத்தில் எழுந்துள்ளது.
அதனால் முன்னாள் கியூப தூதுவர் தமரா குணநாயகம் தலைமையில் புத்திஜீவிகள் குழுவொன்றும், மஹிந்த சமரசிங்க தலைமையில் உயர் மட்ட அமைச்சர்கள் குழுவொன்றும் ஜெனீவாவில் களமிறங்கி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
அடுத்த வருட மார்ச்சில் நடைபெறவுள்ள 19 ஆவது கூட்டத் தொடரிலும் இது போன்ற காட்சிகளை நாம் காணலாம்.
பொருளாதார அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் இன்று அதிகமாகப் பேசப்படும் விவகாரங்களாக, சம்பூர் அனல் மின் நிலையம், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கமும் அதனை நவீன மயப்படுத்தலும் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி போன்றவற்றைக் காணலாம்.
இம்மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை மின்சார சபைத் தலைவர் விமலரத்ன அபயவிக்கிரமவும், இந்திய அரசிற்குச் சொந்தமான தேசிய அனல் மின் நிறுவனத்தின் (NTPC) தலைவர் அருப் ரோயும் சம்பூர்அனல் மின் நிலைய நிர்மாணிப்பிற்கான 500 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள். முதல் கட்டமாக 250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நிலையப் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பமாகி 2017 ஆண்டளவில் பூர்த்தியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முதலீட்டில் சமபங்காளிகளாக இவ்விரு நாடுகளும் இருந்தாலும், அடுத்த கட்ட 250 மெகாவாட் மின் நிலையத்தை அமைப்பதற்கான நிதி குறித்து சிக்கல் உருவாகும் வாய்ப்பு ஏற்படலாம்.
ஏற்கனவே கைச்சாத்திடப்பட்ட சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய விரிவாக்க உடன்பாட்டில் ஈரானோடு பிரச்சினை உருவாகி விட்டது.
நிதிப் பரிமாற்றத்திற்கு முன்பாக சில செய்முறை விவகாரங்கள் தீர்க்கப்பட வேண்டுமென ஈரான் கூறுவதால் அத் திட்டம் பின்னடைவை எதிர்கொள்கிறது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும், ஈரானிய தேசிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பங்கீடுகளை மேற்கொள்ளும் நிறுவனமொன்றிற்குமிடையே 28.04.2008 அன்று 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய விரிவாக்க திட்டம் (SOREM) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
1969 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு மையமானது, தினமும் 50,000 பீப்பாய் அளவிலான டீசல் ,மண்ணெண்ணெய், கசோலின் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது.
அதனை தினமொன்றிற்கு ஒரு இலட்சம் பீப்பாய்களாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டே இத் திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இத் திட்டத்திற்கõன மொத்த நிதி மதிப்பீடு 1.5 பில்லியன் டொலர்களாக கணிப்பிடப்பட்டது.
இதில் 500 மில்லியன் டொலர்களை இலங்கை அரசு முதலீடு செய்ய வேண்டுமென்கிற நிபந்தனையை ஈரான் விதித்திருந்தது.
ஆனால் கே.பி.எஸ். டெக்னோ லொஜீஸ் (KBS Technologies) என்கிற சிங்கப்பூர் நிறுவனமொன்று அண்மையில் செய்த ஆய்வில், இத் திட்டத்திற்கான மொத்த செலவு 2 பில்லியன் டொலர்களைத் தாண்டலாமென எதிர்வு கூறியது .
இதுபோன்ற நிதி ஒதுக்கீட்டுச் சிக்கல்கள், சம்பூர் அனல் நிலைய நிர்மாணிப்பு விவகாரத்திலும் ஏற்பட வாய்ப்புண்டு.
அதேவேளை சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய விரிவாக்கத்திற்கு 15 ஹெக்டர் நிலம் தேவை. ஆகவே அந்நிலத்திற்கான நட்ட ஈடாகச் செலுத்துவதற்கு ஒரு பில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியது. அதில் 350 மில்லியன் ரூபா ஏற்கனவே செலவழிக்கப்பட்டுள்ளது.
நிலக் கொள்வனவின் 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாக திட்ட முகாமையாளர் பியசேன ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆகவே புதிய ஆய்வறிக்கையின் பிரகாரம், செலவுகள் அதிகரிக்கும் போது அரசு செலுத்த வேண்டிய ஏறத்தாழ 667 மில்லியன் டொலர் நிதி எவ்வாறு பெறப்படுமென்பதுதான் புதிய நெருக்கடிக்கான பேசு பொருளாக இருக்கிறது.
அதேவேளை சப்புகஸ்கந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள இழுபறிகளுக்கும், அம்பாந்தோட்டையில் நிறுவப்படப் போகும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது.
2007இல் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை (UAE) தளமாகக் கொண்டியங்கும் ETA ASTON குழுமம், 1.2 பில்லியன் டொலர் செலவில் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றினை அம்பாந்தோட்டையில் நிறுவ திட்டமிட்டது.
2009இல் இதேவிதமான திட்டமொன்றிற்கான அறிவித்தலை, சீனாவின் மிகப் பெரிய அரச நிறுவனமான “பெற்றோசைனா’ (petro CHINA) தமக்கு விடுத்ததாக இலங்கை பெற்றோலிய வளத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இவை தவிர சப்புகஸ்கந்த போன்று மூன்று மடங்கு பெரிதான சுத்திகரிப்பு நிலைமொன்றினை 1.5 இலிருந்து 2 பில்லியன் வரையான நிதி முதலீட்டில் அம்பாந்தோட்டையில் நிறுவிட குளோபல் எனேஜீ [GLOBAL ENERGY] நிறுவனமானது புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆகவே சப்புகஸ்கந்த திட்டத்தை, ஈரானின் பின்னடிப்பினை காரணமாகக் காட்டி கிடப்பில் போட்டவாறு, அம்பாந்தோட்டையில் இதனை நிறுவி விட அரசு முயற்சிக்கலாம்.
இருப்பினும் நேட்டோ செயலாளர் கூறுவது போன்று எந்த திட்டத்திலும் பங்குதாரராக அரசு இருப்பதற்கு நிதி தேவை என்பது தான் உண்மை.
ஏற்கனவே இவ்வருட முதல் அரையாண்டிற்கான வர்த்தக பற்றாக்குறை (Trade Deficit) யானது, கடந்த வருட இதே காலப் பகுதியை விட 62.2 சதவீதமாக அதிகரித்திருப்பதாக மத்திய வங்கியின் உதவி ஆளுனர் கே.ஜீ.டி.டி. தீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே காணிகளை விற்று அபிவிருத்திக்கான முதலீடுகளை மேற்கொள்ளலாமென்று அரசு கருதுவதை சமகால நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. இதில் அதிகமாகப் பயன்படுத்தப்படப் போவது தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்களே.