மும்பை கடல் பகுதியில் மூழ்கிய சரக்குக் கப்பலில் இருந்த 100 கன்டெய்னர்களை காணவில்லை. இதில், இரு கன்டெய்னர்களில் மிகவும் ஆபத்தான ரசாயனங்கள் இருந்ததாக மும்பை துறைமுகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபத்தான இரு கன்டெய்னர்கள் உட்பட கடலில் மூழ்கிய 100 கன்டெய்னர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று துறைமுகத்தின் தலைவர் ராகுல் அஸ்தனா செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.ஆகஸ்ட் 7-ம் தேதி எம்எஸ்சி சித்ரா, கலீஜா-3 ஆகிய சரக்குக் கப்பல்கள் மும்பை கடலில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், ஒரு கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கொட்டியது. இதையடுத்து கடல் பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆபத்தான ரசாயனங்களை கொண்ட கன்டெய்னர்களை காணவில்லை என்கிற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.