விடுதலை செய்யபடும் முன்னை நாள் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த போராளிகள் பலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான தற்கொலை முயற்சிகள் புனர் வாழ்வு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் போராளிகள் மத்தியிலும் அதிகரித்து வருகின்றன. விடுதலை செய்யப்படும் போராளிகள் தொடர்ச்சியான புலனாய்வுத் துறையின் கண்காணிப்பிற்கு உபடுத்தப்படுவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதே வேளை சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வருவதால் எந்த வாழ்வாதாரங்களும் அற்ற நிலையில் தற்கொலை செய்யும் முடிவிற்கு உள்ளாகின்றனர். இதே வேளை இராணுவப் புலனாய்வுத் துறை மற்றும் துணை இராணுவக் குழுக்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு வாழ வேண்டிய நிலை காணப்படுவதால் அடையாளப்படுத்தப்பட்ட முன்னை நாள் போராளிகளுடன் தொடர்புகளைப் பேணிக்கொள்ளக் குடும்பத்தைச் சார்ந்தவர்களே அச்சம் கொள்வதாகத் தெரிய வருகிறது.
இலங்கையின் வட பகுதிகளில் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்தோரதும், இந்திய, இலங்கை முதலீட்டாளர்களின் அதிக விலையுயர்ந்த உணவு விடுதிகளும் உல்லாசப் பயண விடுதிகளையும் தவிர புனர் வாழ்வு, மீள் கட்டமைப்பு, அபிவிருத்தி குறித்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
நல்லூர் பின் வீதியிலுள்ள மங்கயற்கரசி பாடசாலையில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு கடந்த பல மாதங்களாக ஒரு நேர உணவே வழங்கப்படுவதாகவும், பலர் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கு உட்படுத்தபடுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர்கள் மீதான திட்டமிட்ட கொடுமைகளுக்கு எதிரான பொது அபிப்பிராயம் புலம் பெயர் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தங்களை வழங்குவதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இலங்கையிலிருந்து பலரும் எதிர்பார்ப்பதாகத் தெரியவருகிறது.







