இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் முதுபெரும் தலைவர், புகழ்பெற்ற மார்க்சிய சிந்தனையாளர் தோழர் ஜோதிபாசுவின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்பிய அவர், இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டங்களைத் தலைமையேற்று வழிநடத்தியவர். மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான சிஐடியுவை உருவாக்கி வளர்த்ததில் அவருடைய பங்கு மகத்தானது. ஒரு குறிப்பிட்ட கட்சியின் தலைவராக இருந்தாலும் அனைத்துத் தரப்பினராலும் மதிக்கத்தக்க பெருமைக்குரியவராக விளங்கினார். இரண்டுமுறை பிரதமராகக்கூடிய வாய்ப்புக் கிடைத்தபோதிலும் அதனை விரும்பியேற்காமல் மேற்குவங்கத்தின் வளர்ச்சியிலேயே அதிகம் அக்கறை காட்டினார். அதனால் தீவிர அரசியலில் இருந்தபோது எவராலும் அசைக்கமுடியாத பெரும் சக்தியாக விளங்கினார். இந்திய மண்சார்ந்த பொதுவுடைமை அரசியலுக்கு அவர்தான் முன்னோடியாக விளங்கினார்.
தோழர் ஜோதிபாசுவின் மறைவு இந்தியப் பொதுவுடைமை இயக்கத்திற்கு மட்டுமின்றி சனநாயக அரசியலுக்கும் பேரிழப்பாகும். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் செம்மாந்த வீரவணக்கம் செலுத்துகிறது.
இவண்
தொல். திருமாவளவன்
“இரண்டுமுறை பிரதமராகக்கூடிய வாய்ப்புக் கிடைத்தபோதிலும் அதனை விரும்பியேற்காமல் மேற்குவங்கத்தின் வளர்ச்சியிலேயே அதிகம் அக்கறை காட்டினார். ”
இது பொய்.
ஜோதி பாசு விரும்பினார். கட்சி விரும்பவில்லை. இறுதி ஆண்டுகளில் ஜோதி பாசுவின் ஆட்சி வேகமாகவே ஒரு மக்கள் விரோத ஆட்சியாகிவிட்டது. இது தனியே அவரது தவறல்ல. மே. வங்க சி.பி.எம். பதில் கூற வேண்டிய விடயம்.