பிரேசில்,இந்தியா,ரஷ்யா,சீனா தென்னாபிரிக்க ஆகிய நாடுகள் இணைந்த கூட்டை பிரிக்ஸ் (BRICS) என்று அழைக்கிறர்கள்.இந்த நாடுகள் ஒன்றிணைந்து உலக வங்கியை மாதிரியாக முன்வைத்து பிரிக்ஸ் வங்கியை உருவாக்கியுள்ளன. 100 பில்லியன் டொலர் முதலீட்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த வங்கியில் முதலிடப்படும் பணத்தை இந்த நாடுகள் அனைத்தும் பகிர்ந்துகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் தனி மூலதனத்துடன் பிரிக்ஸ் வங்கியை ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.
தென்னாபிரிக்க ஜனாதிபதி டில்மா ரௌசெப் வங்கி ஆரம்பிக்கப்படுவதை அறிவித்தார். வங்கியின் தலைமையகம் சீனாவில் ஷெங்காய் பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அதன் முதலாவது தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பது எனவும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
வங்கியில் இருப்பில் வைக்கப்படும் மேலதிக 100 பில்லியன் டொலர்கள் அவசர நிதித் தொகையாக வறிய நாடுகளுக்கு வழங்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. உலக வங்கி மற்றும் உலக நாணய நிதியம் ஆகியவை இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டன. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் உலகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இவை ஆரம்பிக்கப்பட்டன. இந்த அமைப்புக்களின் ஆதிக்கத்தால் பல நாடுகள் வறுமையின் விழிம்புக்குள் இழுத்துவரப்பட்டன. போர்களும் அழிவுகளும் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டன. உலக வங்கியும் உலக நாணய நிதியமும் இன்று வலுவிழந்து வரும் நிலையில், உலகைக் கூறுபோட்டுக்கொள்ள புதிதாக முளைத்திருக்கும் பிரிக்ஸ் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் நேரடி முகவராகச் செயற்படும்.
உலகம் முழுவதும் பல்தேசிய வியாபார நிறுவனங்களின் அடியாட்களால் ஆட்சி செய்யப்படுகின்ற காலகட்டத்தில் பிரிக்ஸ் சரிந்து விழும் உலக வங்கியின் ஆதிக்கத்தை ஆசியா முழுவதும் உள்வாங்க முயற்சிக்கிறது. உலக வங்கியுடன் முரண்பாடற்ற வகையிலேயே பிரிக்ஸ் இயங்கும் என பொருளியலாளர்கள் எதிர்வு கூறுகின்றனர். இன்று மக்களின் தேவை இன்னொரு உலக வங்கியல்ல. முதலாளித்துவத்தின் அழிவிலிருந்து புதிதாக உதிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆட்சியே காலத்தின் தேவை.