எமது நாட்டுப் பிரஜைகளான மூன்று இலட்சம் மக்களை எந்த சட்டத்தின் அடிப்படையில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ளீர்கள்? இது அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கை. எனவே, உடனடியாக அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கையெடுங்களென ஐ.தே.க. எம்.பி.லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்த அவர் மேலும் கூறியதாவது;
வவுனியாவிலுள்ள அகதி முகாம்களுக்குச் சென்று வந்த மருத்துவர்களை நான் சந்தித்தேன். அங்குள்ள மூன்று இலட்சம் மக்களில் 90 ஆயிரம் பேர்15 வயதுக்குட்பட்ட சிறுவர்களெனவும் அவர்கள் எதிர்வரும் மாரிகாலத்தினால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிமுகாம்கள் இன்னும் பல வருடங்களுக்கு செயற்படும் நிலைமையே காணப்படுவதாகவும் அந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சில அமைச்சர்கள் பாகிஸ்தானிலும் இவ்வாறான அகதிமுகாம்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். உண்மைதான் அங்கு அகதிமுகாம்கள் உள்ளன. ஆனால், அந்த முகாம்களுக்கு சர்வதேச ஊடகங்கள், சர்வதேச அமைப்புகள் சென்றுவர முடியும். ஆனால், இங்கு நிலைமை அப்படியா உள்ளது? எதனை மறைப்பதற்காக ஊடகங்கள், எதிர்க்கட்சியினர், சர்வதேச அமைப்புகளை அங்கு அனுமதிக்க மறுக்கின்றீர்கள்.
இந்த அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பிச்சைக்காரர்களல்ல. அவர்கள் நன்றாக வசதியாக வாழ்ந்த மக்கள் அவர்கள் எதற்கும் வழியில்லாதவர்களென அரசு நினைக்கக் கூடாது.
இந்த அகதிமுகாம்களுக்கு உதவ முன்வரும் நாடுகளிடம் பொருள் உதவிவேண்டாம். பண உதவி செய்யுங்கள் என இந்த அரசு கேட்கின்றது. ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று அரசுடன் இணைந்து கொண்டு தமது புள்ளிகளை (Mச்ணூடுண்) அதிகரிப்பதற்காக கூச்சலிடுகின்றார்கள்.
யுத்தம் முடிந்துவிட்டதென அரசு கூறுகின்றது. உல்லாசப்பயணிகளை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுக்கின்றது. யுத்தம் முடிந்து விட்டதென்றால் பயங்கரவாதத்திற்கெதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்கள், அவசரகாலச் சட்டம், காவலரண், சோதனைச் சாவடிகளை நீக்க வேண்டும்.இவ்வாறான நிலைமை ஏற்பட்டால்தான் உல்லாசப்பயணிகள் இந்த நாட்டுக்கு வருவார்கள்.
இதேவேளை, எமது நாட்டுப் பிரஜைகளான மூன்று இலட்சம் மக்களை எந்தச் சட்டத்தின் அடிப்படையிலே முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ளீர்களென அரசிடம் கேட்கின்றோம். இது ஒரு அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல் உடனடியாக அந்த மக்களை அவர்களின் இடங்களில் மீளக்குடியேற்றுங்கள்.
யுத்தம் இல்லாத நிலையில் 13 ஆவது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்த நாம் முயன்றோம். ஆனால், இவர்கள் யுத்தத்தை நடத்திவிட்டு 13 ஆவது அரசியல் திருத்தத்திற்கு மேலாக தரத்தயார் என்கின்றனர்.
நாம் யுத்தத்தை எதிர்க்கவில்லை ஆனால், யுத்தத்தின் மறைவிலே நடந்த மனித உரிமை மீறல்கள் படுகொலைகளைத் தான் நாம் எதிர்த்தோம். அரசு செய்யும் அனைத்தையும் சரியெனக் கூற நாங்கள் இங்கு வரவில்லை.