எல்லா திசைகளிலும்
அவர்கள் திரிந்தார்கள்.
இடதுபுறம் வலதுபுறம்
தோள்களின் பின்னால்
பாதங்களுக்கடியில்
படுக்கையின் தலைமாட்டில்
எல்லா பக்கங்களினின்றும்
அவர்கள்
நெட்டித் தள்ளினார்கள்.
பேச வாய் திறந்தவர்கள்
மக்களுக்காய் கனவு கண்டவர்கள்
மறுத்துரைத்தவர்கள்
உடன்படமறுத்தவர்கள்
எவரையும் அவர்கள் விட்டுவைத்தாரில்லை.
நிபந்தனைகள்
வாக்குவாதம்
மிரட்டல்கள், சித்திரவதைகள்
முடிவில் மரணம்……….!
வாய்ப்பு கிடைத்தவர்கள்
ஐந்து சமுத்திரங்களையும் தாண்டினார்கள்.
நெருஞ்சி முட்களையும்
எருக்கலம் பற்றைகளையும்
கடந்து சென்றார்கள்.
அன்னையரின் ஒப்பாரிகளை
காற்று சுமந்து திரிந்தது.
உற்றவர்களின் கண்ணீரும்
விசும்பலும்
இன்னமும் நின்றபாடில்லை.
காயங்களோ
பெருத்துக் கொண்டே போகின்றன.
ஒரு விஜிதரன்
ஒரு விமலேஸ்
யாரை அவர்களால்
திருப்பித் தரமுடியும்?
கருத்தை சொன்னதற்காகவே
கைகளைக்கட்டி கண்களைகட்டி
கால்களால் எற்றி
இழுத்துப் போனார்கள்.!
கனதியான ஆயுதங்கள்
களங்கள் கண்ட அனுபவங்கள்
பயிற்சிகள்
எல்லாம் இருந்தும்
“I Understand Small English”
என்றபடி
வெள்ளைக் கொடிகளுக்குள்
சாம்பலாகினார்கள்.