இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூத்தன் விடுத்துள்ள அறிக்கை:
பல கோடி ரூபாய் அந்நியச் செலவாணியை அரசுக்கு ஈட்டிக் கொடுக்கும் எம் மீனவச் சொந்தங்களை கண்ணீரில் மிதக்க விட்டுள்ளது மத்திய, மாநில அரசுகள். கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டும் இன்னும் நம்பிக்கையளிக்கும் எந்த முடிவையும் எடுக்க வில்லை மத்திய மாநில அரசுகள். தமிழக மீனவர்களின் கடல் மீதான தொழில் உரிமையை பாதுக்காக்கக் கோரி பேசிய குற்றத்திற்காக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரான செந்தமிழன் சீமானை சிறையிலடைத்திருக்கிறது மாநில அரசு. சீமான் சிறை சென்ற இந்தக் ஒரு மாத காலக்கட்டத்தில் கூட பல மீனவர்களைத் தாக்கியும் படகுகளை வெடிவைத்துத் தகர்த்தும் அராஜக வெறியாட்டத்தைத் தொடர்ந்து செய்து வருகிறது சிங்கள அரசு. எமது இரத்த சொந்தங்களான மீனவ மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் மீனவனுக்காகப் பேசுகிறவர்களின் வாயை அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு அடக்கிவருகிறது தமிழக அரசு.
சுமார் ஆயிரக்கணக்கான நாட்டுப்படகுகளும் ஆயிரமாயிரம் கட்டுமரங்களும் கொண்டு தொழில் செய்து வந்த மீனவர்கள் கடலுக்குச் சென்று தொழில் செய்யவே அஞ்சி நடுங்கும் சூழல் உருவாகிவிட்டது. இராமேஸ்வரத்தில் மட்டுமல்லாமல் நாகை, தூத்துக்குடி,கன்னியாகுமரி என்று இந்த அச்சம் அனைத்து தென் மாவட்ட மீனவர்களிடமும் பரவிக் கிடக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து எழும் நெருக்கடிகள் காரணமாக தமிழகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்,எம்.கிருஷ்ணாவின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மீனவ மக்கள் மீது பாய்ந்துள்ளது. “எல்லை தாண்டும் மீனவர்களை பாதுகாக்க முடியாது என்றும். இலங்கை செல்லும் போது மீனவர் பிரச்சனை தொடர்பாகப் பேசப் போவதாகவும் ” எஸ்.எம்.கிருஷ்ணா தெர்வித்துள்ளதார்.
ஒரு பக்கம் மீனவர் தாக்குதலை தடுத்து நிறுத்த முன்வராத கிருஷ்ணா ,அவர்களை எல்லை தாண்டும் குற்றவாளிகளாகச் சித்தரித்திருக்கிறார். அதிகப் பணத்திற்கு ஆசைப்பட்டு எல்லை தாண்டுகிறார்கள் என்று கூட எம் மீனவ மக்கள் மீது இரக்கமற்ற குற்றச்சாட்டைச் சொன்னவர்கள்தான் இவர்கள். இவர்களின் இப்படியான பேச்சுக்கள் தமிழக மீனவர்களைக் கொல்லும் சிங்களக் கடற்படைக்கு மேலும் மேலும் தைரியமூட்டுவதாக அமைந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.. இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தான் எல்லைக்கும். பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளும், மேற்கு வங்க மீனவர்கள் வங்கதேச கடல் எல்லைக்குள்ளும் வங்கதேச மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்ளும் பிரவேசிக்கிற போது எதிரி நாடுகள் என்று சொல்லும் எந்த நாடுகளும் அந்த மீனவர்களைச் சுட்டுக் கொல்வதில்லை. பரஸ்பரம் இரு நாட்டு தூதரகங்களும் பேசி மீனவர்களை மீட்கிறது. ஆனால் இராமேஸ்வரம மீனவர்கள் உள்ளிட்ட தமிழக மீனவர்களை மட்டும்தான் நட்பு நாடு என்று இவர்கள் சொல்லிக்கொள்ளும் இலங்கை அரசு சுட்டுக் கொல்கிறது.
மிகப்பெரிய போர்க்குற்றத்தைப் புரிந்து போரை முடிவுக்குக் கொண்டு வந்த ராஜபட்சே அரசு இப்போது அறிவிக்கப்படாத போர் ஒன்றைத் தமிழக மீனவர்கள் மீது நடத்திக் கொண்டிருக்கிறது. இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுப்பும் நம்பிக்கையும் அற்றுப் போகும் என்றால் அதன் எதிர்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்பது உலகறிந்த உண்மை.உடனடியாக தமிழக மீனவ மக்களின் கடல் மீதான உழைப்பின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். பொறுப்பற்ற முறையில் கிருஷ்ணாக்கள் பேசுவதை நிறுத்தி எம் மீனவர்களைப் பாதுகாக்க முன்வரவேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் மீனவ மக்களின் போராட்டங்கள் வெடிக்கும் நிலை உருவாகும்.